

தமிழ்நாடு அரசு வேளாண் துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையை 2021-22 முதல் ஆண்டுதோறும் தாக்கல் செய்துவருகிறது. வேளாண் துறைக்கு மட்டும் ஏன் தனியான நிதிநிலை அறிக்கை என்று சிலர் கேட்கிறார்கள்.
கூடவே, இன்னும் சில கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன: ‘வேளாண் துறையிலிருந்து பெருமளவில் நேரடியாக அரசுக்கு வருமானம் வராத நிலையில், இது வெறும் செலவினத்துக்கான பட்ஜெட்டாகத்தான் (expenditure budget) இருக்கிறது.
வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது வேளாண் துறை தொடர்பான துறைகளின் ஒன்றுசேர்ந்த மானியக் கோரிக்கைகளை (demand for grant) சமர்ப்பிப்பது போல்தான் உள்ளது. தனி வேளாண் நிதிநிலை அறிக்கையின் மூலமாக விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா?’ நிதர்சனம் என்ன?
ஏற்கப்பட்ட கோரிக்கை
‘தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை வந்தால்தான் விவசாயிகளின் பல்வேறுபட்ட பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும்; கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட வேளாண் துறையில் நிலவும் சிக்கல்கள், அவற்றைக் களைய அரசாங்கம் எடுத்துவரும் வருடாந்திர நடவடிக்கைகள், அதற்கான நிதிப் பங்கீடுகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்து ஆராய முடியும்’ எனத் தேசிய அளவில் செயல்படும் சில விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் துறை ஆய்வாளர்கள் முன்வைத்த கருத்துகள், வேளாண் நிதிநிலை அறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் இருந்தன.
பிரத்தியேகமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது, அது அனைவரின் கவனத்தையும் பெறுகிறது. அப்போது, சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள பிரச்சினைகளில் தங்களது புரிதல்கள், அதற்கான நடவடிக்கைகள் என்னவென்று விரிவாகக் கூறும் நிலைக்கு அரசு உட்படுத்தப்படுகிறது.