

இன்றைய காலக்கட்டத்தில் உணவு விநியோகப் பணி, வாடகை வாகன ஓட்டுநர் பணிகளில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஈடுபடுகிறார்கள். இப்பணியில் ஆண்களைவிடவும் கூடுதலான பிரச்சினைகளைப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
இப்படி சவால்களும் பாதுகாப்பற்ற நிலையும் இருக்கின்ற இந்த வேலையைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன? அவர்கள் சந்திக்கும் சவால்களும் பிரச்சினைகளும் என்ன? அவர்களை இந்தச் சமூகம் நடத்தும் விதம் எப்படி இருக்கிறது?
பொருளாதார நெருக்கடி
சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் வாழ்கின்ற நடுத்தரவர்க்கத்துக் குடும்பங்களில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில்தான் வாழ்கிறார்கள்.
மேலும், நகர வாழ்க்கைக்கே உரிய செலவுகளைச் சமாளிக்க முடியாமலும் திணறுகிறார்கள். எனவே, பெண்களும் வேலைக்குச் சென்றால்தான் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்கிற நிர்பந்தம்.
படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கின்ற பெண்கள், கிடைக்கும் நேரத்தில் உணவு விநியோகம் போன்ற வேலைக்குச் செல்கிறார்கள். இந்த வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம், இதில் உள்ள நெகிழ்வுத்தன்மை.
குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்; இன்னொருவரின் கீழ் வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லை. கல்லூரியில் படிக்கின்ற பெண்கள், கல்லூரி நேரம் முடிந்தவுடன் பகுதி நேரமாக இந்த வேலையில் ஈடுபடுகின்றனர்.