

அறிவியல் அறிவின் ஆற்றலாலும் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளாலும் மக்கள் சமூகத்துக்குத் தொடர்ந்து பலன் அளித்துவருகிறது நவீன மருத்துவம். ஆனாலும், அந்தப் பலன்கள் மருத்துவ உதவி தேவைப்படும் சாமானியருக்கு எந்த அளவுக்குச் சென்றடைந்துள்ளது என்பது முக்கியக் கேள்வியாக இருக்கிறது.
பொதுவாக இதற்கான பதில், மருத்துவர்களின் எண்ணிக்கை, அவர்கள் பணிபுரியும் மருத்துவ நிறுவனங்கள், அவர்களைப் பயனாளிகளுடன் இணைக்கும் அமைப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தே இதுவரை இருந்துவந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவத் திறன் தொடர்ந்து விரிவடைந்து வந்தாலும், நோய்களின் சுமை கூடிக்கொண்டே போவதால், மருத்துவ நிபுணத்துவம் மக்களைச் சென்றடைகிற வேகமும் விகிதமும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏஐ தரும் மாற்றம்: இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கெனவே திரட்டப்பட்டுள்ள மருத்துவ அறிவை அதிகமான பயனாளிகளுக்குக் கிடைக்க வைப்பதற்கான புதிய வழியை அது வழங்குகிறது. இந்த மாற்றம் உலகின் முக்கியமான சுகாதார அமைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது.
2025 ஜனவரியில், அமெரிக்காவின் உணவு - மருந்து நிர்வாகம் (FDA) செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மருத்துவக் கருவிகளுக்கு 1,000க்கும் மேற்பட்ட அனுமதிகளை வழங்கியுள்ளது. பிரிட்டனில் தேசிய சுகாதாரச் சேவை அமைப்பு (NHS), ஏஐ அடிப்படையிலான சுற்றுச்சூழல் உரையாடல் பதிவு (Ambient scribing) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு 2025 ஏப்ரலில் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது. 2026 ஜனவரியில், இந்தத் தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்துவதற்குத் தேசிய அளவிலான ஒரு திட்டத்தையும் உருவாக்கித் தந்தது. இந்தத் தொழில்நுட்பம், மருத்துவர்கள் தங்கள் பயனாளிகளுடன் அதிக நேரம் செலவிட உதவுவதாகத் தொடக்கக் கட்ட ஆய்வுகள் கூறுகின்றன.