

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% வரை கல்விக்கான செலவினமாக அமைய வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை 2020 பரிந்துரைக்கிறது; 60 ஆண்டுகளுக்கு முன் 1966இல் சமர்ப்பிக்கப்பட்ட கோத்தாரி ஆணைய அறிக்கையும் அதையே வலியுறுத்துகிறது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கல்விக்காகச் செலவழிப்பது 4.1% என்கிற அளவிலேயே இருப்பதால், இன்னும் அது கனவாகவே தொடர்கிறது.
கல்விப் பங்களிப்பில் சரிவு
இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் பொதுப்பட்டியலில் கல்வி இடம்பெற்றிருப்பதால், அது தொடர்பான அதிகாரங்கள், பொறுப்புகளை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன. 2013 – 14 பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.65,867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2026 – 27ஆம் நிதியாண்டில் ரூ.1,39,289 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இடைப்பட்ட ஆண்டுகளில் மொத்த பட்ஜெட்டின் அளவு ஒவ்வோர் ஆண்டும் 10% என்கிற அளவில் உயர்ந்து வந்திருக்கிறது. அதேநேரம், ஒட்டுமொத்த பட்ஜெட்டின் அளவைக் கணக்கில் கொண்டால், கடந்த 12 ஆண்டுகளில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 4.6%இல் இருந்து 2.5%ஆகக் குறைந்திருக்கிறது. இது அரசு நிதியுதவி பெறும் கல்விக்கான முன்னுரிமை குறைந்து வருவதையே உணர்த்துகிறது.
உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2021இல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்களது ஜிடிபியில் முறையே 5.4%, 5.9%, 5.2%யைக் கல்விக்காக ஒதுக்கியுள்ளன.
இந்தியாவில் இவ்விஷயத்தில் இன்னும் முன்னேற்றம் தென்படவில்லை. 2013-14இல் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான பங்கு 2% என்கிற அளவில் இருந்தது. தற்போது அது 1.97%ஆக இருக்கிறது.
அப்போது சாலைகள், நெடுஞ்சாலைகள் துறைக்கு 1.8% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; தற்போது அந்தத் துறைக்கு மட்டும் 6.5% ஒதுக்கப்பட்டிருப்பது கல்விக்கான நிதி ஒதுக்கீடு பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.
2015-16ஆம் நிதியாண்டில் திறன் மேம்பாட்டுக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடு மொத்த பட்ஜெட்டில் 0.06%ஆக இருந்தது; தற்போது அது 0.05%ஆக உள்ளது.