

தமிழ்நாட்டில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துவருவது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ரக அரிசிகளின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.
எல் நினோ விளைவுகளால் ஏற்பட்ட மழைப் பற்றாக்குறை, அதன் தொடர்ச்சியாகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சி போன்றவை விலை உயர்வுக்கு உடனடிக் காரணங்களாகக் கூறப்பட்டாலும், வேளாண் வளர்ச்சிக்குத் தமிழகம் போதிய முக்கியத்துவம் அளிக்காததால், கடந்த பல தசாப்தங்களாக நிலவிவரும் கட்டமைப்புச் சிக்கல்களும் உற்பத்திக் குறைபாடுகளும் முக்கியக் காரணங்கள் என்பதைப் புறந்தள்ள முடியாது.
குறையும் சாகுபடிப் பரப்பு
சாகுபடிப் பரப்பு குறைந்துவருவதாலும் நீர்ப்பாசனப் பரப்பளவில் வளர்ச்சி இல்லாததாலும் தமிழகத்தில் வேளாண் பொருள்களின் விலை உயரும் என ஆய்வாளர்கள் கணித்து வந்தபோதிலும், அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக அரிசி விலை உயர்வு நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் மட்டுமன்றி, பிற முக்கியப் பயிர்களின் சாகுபடித் தொழில்நுட்பத்திலும் உற்பத்திப் பெருக்கத்திலும் தமிழகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை.
நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் காரணமாகத் தமிழகத்தின் மொத்தச் சாகுபடிப் பரப்பளவு (Gross Cropped Area) தொடர்ந்து சுருங்கிவருகிறது. கூடவே, நெல் சாகுபடியின் பரப்பளவும் கடுமையாகக் குறைந்துள்ளது.
இந்திய அளவில் மொத்தச் சாகுபடிப் பரப்பளவும் நெல் சாகுபடிப் பரப்பளவும் உயர்ந்துவரும் வேளையில், 1970களில் 27 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழகத்தின் நெல் சாகுபடிப் பரப்பளவு, 2024-25இல் 19 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.
இதனால், மாநிலத்தின் சொந்த அரிசித் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த நெல் உற்பத்தியிலும் தமிழகத்தின் பங்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருகிறது. 70களில் நாட்டின் முன்னணி நெல் உற்பத்தி மாநிலமாக விளங்கிய தமிழகத்தின் பங்களிப்பு, தேசிய அளவில் தற்போது 5 சதவீதத்துக்குள் சுருங்கியுள்ளது.