கடவுள் தேசத்தின் தேர்தல்: களத்தில் வெல்வது யார்?

பேரவைத் தேர்தல் 2026 - வெற்றி இந்த முறை யாருக்கும் எளிதாகக் கிடைக்காது
கடவுள் தேசத்தின் தேர்தல்: களத்தில் வெல்வது யார்?
Updated on
3 min read

ஏப்ரல் 9 அன்று நடைபெறும் கேரள சட்டமன்றத் தேர்தலின் களம், மூன்று பெரும் சக்திகளின் உச்சக்கட்ட மோதலாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்).

இன்றைய தேதியில் இந்தியாவில் இருக்கும் ஒரே கம்யூனிஸ்ட் அரசு - கேரளத்தின் எல்டிஎஃப் அரசுதான். எனவே, இந்தத் தேர்தலில் தோற்றால், அது கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸுக்கு, இது வாழ்வா சாவா போராட்டம். இவற்றுக்கு நடுவே கேரளத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டுவரும் பாஜக, உற்சாகமான கணக்குகளுடன் களம் காண்கிறது.

மும்முரமாகும் மும்முனை

தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும் இடதுசாரிக் கட்சிகளும் - கேரளத்தில் ஒருவரை ஒருவர் முக்கிய எதிரிகளாக முன்வைத்துத்தான் அரசியல் செய்துவருகின்றன.

இந்தச் சூழலில், “தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்ளும் திறன் இடதுசாரிகளுக்குக் கிடையாது; அதற்கான ஒரே சக்தி காங்கிரஸ்தான் என்பதால், நாங்கள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க எல்டிஎஃபுடன் பாஜக ரகசியமாகக் கூட்டு வைத்திருக்கிறது” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தன் மீது 36 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், பினராயி விஜயன் மீது பாஜக எந்த விமர்சனத்தையும் முன்வைப்பதில்லை என்று ராகுல் சுட்டிக்காட்டுகிறார். சபரிமலையில் தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களில் பலர் எல்டிஎஃபுடன் தொடர்புடையவர்கள் என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனமாக இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

சிபிஎம் தலைவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டாலும் அவர்களுக்கு விரைவில் பிணை வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்பை வெளியிட்டுவிடுவார்கள் என்பதால் அவர்கள் மீது கட்சிரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் பேசிவருகிறது.

எனினும், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை முன்வைத்து காங்கிரஸைச் சாடிவருகிறார் பினராயி.

செயல்பாட்டிலும் சித்தாந்தத்திலும் இடதுசாரித் தன்மையை எல்டிஎஃப் இழந்துவிட்டதாகவும், காங்கிரஸ்தான் இடதுசாரிக் கொள்கையுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பேசிவருகிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய இலக்கே தான்தான் என்று பினராயி கூறுகிறார். சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.

கட்சிகளின் கள நிலவரம்

மாநிலத்தின் கடன் பிரச்சினை, வேலை வாய்ப்பின்மை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தாண்டி 2025இல் நாட்டிலேயே முதல் முறையாகத் தீவிர வறுமை இல்லாத மாநிலமாக கேரளத்தை மாற்றியது, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கூலி அதிகரிக்கப்பட்டது உள்ளிட்ட சாதனைகள் எல்டிஎஃபுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.

சிபிஎம் கட்சியின் வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, விளம்பரப் பலகைகளில் முதலமைச்சர் பினராயி விஜயனின் உருவப்படம் முதன்மையாக இடம்பெற்றிருப்பது அவரது செல்வாக்கைக் காட்டுவதாக பிரகாஷ் காரத் போன்ற மூத்த தலைவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

2025 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி, அக்கட்சியினரைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எனினும், முதல்வர் வேட்பாளராகயாரை முன்னிறுத்துவது என்பதில் இன்னும் தெளிவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரமேஷ் சென்னிதாலா, முந்தைய தோல்விகளால் அந்தப் பதவியை வ.தா.சதீசனுக்கு விட்டுத்தர வேண்டியிருந்தது. எனினும் யுடிஎஃப் வென்றால், சதீசனைவிடவும் ரமேஷ் சென்னிதாலாவுக்குத்தான் முதல்வராகும் வாய்ப்பு அதிகம்.

பாஜகவின் பி டீம் என இரண்டு தரப்பும் ஒன்றையொன்று குற்றம்சாட்டிக்கொள்வதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பிரதமர் மோடி, ‘பாஜகதான் கேரளத்தின் ஏ டீம்’ என்று உற்சாகமாகக் கூறியிருக்கிறார்.

எல்டிஎஃபும் யுடிஎஃபும் பேசிவைத்துக்கொண்டு மாறி மாறி ஆட்சி செய்வதாகக் கூறும் பாஜக, இந்த முறை தங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு பிரச்சாரம் செய்கிறது. கேரளத்தில் பாஜக வளர்ந்துவருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா போன்ற தலைவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

எஸ்.ராஜேந்திரன், கே.அஜித், சி.சி.முகுந்தன் போன்ற இடதுசாரித் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூரில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வென்றது அக்கட்சிக்குப் பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

தேர்தலுக்குத் தேர்தல் பாஜகவின் வாக்கு சதவீதமும் அதிகரித்துவருகிறது. கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தீவிரமாகக் களப்பணி ஆற்றிவருகிறார். முதல்வர் வேட்பாளராக பாஜக மேலிடம் அவரை அறிவிக்கவில்லை என்றாலும், அவர் தலைமையில்தான் கேரளத்தில் பாஜக களம் காண்கிறது.

முக்கியப் பிரச்சினைகள்

மத்திய அரசு கொண்டுவந்த வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) மசோதா (The Foreign Contribution (Regulation) Act – FCRA), கேரளத் தேர்தலில் முக்கிய விவாதப்பொருள் ஆகியிருக்கிறது.

கேரளத்தில் கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது இந்தச் சட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தச் சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தில் எழுந்த எதிர்ப்புதான் நாடு முழுவதற்கும் இந்தச் சட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக பிரகாஷ் காரத் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். அதிருப்தியை உணர்ந்த பாஜக கிறிஸ்துவ மதத் தலைவர்களைச் சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.

தங்க நகை திருட்டு விவகாரம் உச்சமடைந்த நிலையில், சபரிமலைக் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் நுழைய பாரம்பரியமாக இருக்கும் தடை தொடர்பான எல்டிஎஃப் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

2018இல் சபரிமலை கோயிலுக்குள் 10-50 வயது பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அந்தத் தீர்ப்புக்கு ஆதரவாக எல்டிஎஃப் அரசு இருந்தது. இதனால், கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தது.

எனினும், நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த தடை, அத்தியாவசியமான சமய நடைமுறையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வழிமுறையானது பகுத்தறிவு அல்லது உணர்வு பூர்வமான காரணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் எல்டிஎஃப் அரசு தெரிவித்துள்ளது.

‘குளோபல் ஐயப்பா சங்கமம்’ என்கிற பெயரில் 2025இல் எல்டிஎஃப் அரசு நடத்திய நிகழ்வில், 3,000 ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது. சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைவது தொடர்பான எல்டிஎஃப் அரசின் முந்தைய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்த நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்.எஸ்.எஸ்.) என்னும் நாயர் சமூக அமைப்பு, தற்போது எல்டிஎஃப் அரசை விமர்சிப்பதைத் தவிர்த்துவருகிறது.

கேரள அரசியல் களத்தில் முக்கியத் தீர்மான சக்தியாகக் கருதப்படும் என்.எஸ்.எஸ்ஸின் இந்த நிலைப்பாடு கவனத்துக்குரியது. 90 லட்சம் முஸ்லிம்களைக் கொண்ட கேரளத்தில், எஸ்டிபிஐ அமைப்பு எல்டிஎஃபுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும், யுடிஎஃபுக்கு ஜமாத் - இ - இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அரசியல் பிரிவான ‘வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா’ ஆதரவு தெரிவித்திருப்பதும் முக்கியமானவை.

கேரளத் தேர்தல்களில் வெற்றி தோல்விகள் ஒவ்வொரு தொகுதியிலும் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதே நிதர்சனம். இந்த முறை களம் வெகுவாக மாறியிருக்கும் நிலையில், யார் வென்றாலும் அது பெரும் போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்த வெற்றியாகத்தான் இருக்கும்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

கடவுள் தேசத்தின் தேர்தல்: களத்தில் வெல்வது யார்?
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in