முட்டை சர்ச்சை: முறைப்படுத்த வேண்டியது யார்?
அண்மையில் ஒரு வட இந்திய யூடியூப் அலைவரிசை வெளியிட்ட ஆய்வக அறிக்கை, நாட்டில் உணவுப் பாதுகாப்பு குறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ‘நுண்ணுயிர்க் கொல்லி (Antibiotic) இல்லாத முட்டை’ என்கிற விளம்பர வாசகத்தைத் தாங்கி, பல நகரங்களில் விற்பனை செய்யப்பட்டுவரும் ஒரு தனியார் முட்டை பிராண்டின் முட்டைகளைத்தான் அந்த அலைவரிசை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய, தடை செய்யப்பட்ட நைட்ரோஃபியூரான் (Nitrofuran - AOZ) என்கிற வேதிப்பொருளின் எச்சம், அந்த நிறுவனத்தின் முட்டைகளில் ஒரு கிலோவுக்கு 0.73 மில்லிகிராம் என்கிற அளவில் இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இதையடுத்து, இந்தியாவில் உணவுக்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைத் தொழிலில் கையாளப்படும் விதிமீறல்கள், அவற்றைக் கண்காணிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடு போன்றவற்றின் மீது கேள்விகள் எழுந்துள்ளன.
நைட்ரோஃபியூரான் பயன்பாடு: நைட்ரோஃபியூரான் என்பது கால்நடை வளர்ப்பில், பாக்டீரியா நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுவந்த நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் கொண்ட (Antibiotics chemical formula) செயற்கையான வேதி மருந்துகளில் ஒன்று.
இந்த வேதிக் குடும்பத்தில் பல மருந்துகள் உள்ளன. குறைந்த விலை, நீடித்த நோயெதிர்ப்புச் செயல்திறன் காரணமாக 2018க்கு முன்புவரை இவை பரவலாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டன.
ஆனால், இந்த வகை வேதிக் குடும்பத்தைச் சேர்ந்த மருந்துகளின் எச்சங்கள், பால், இறைச்சி, கோழி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருளில் இருந்தால், அது கல்லீரலையும் கடந்து, மரபணு மூலக்கூறுகளை (DNA) சேதப்படுத்தி, புற்றுநோய் அபாயத்தைத் தூண்டும் என்பதை உலக அளவில் பல ஆய்வுகள் சொல்கின்றன.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள், 1995 வாக்கில் முற்றிலும் இதைத் தடை செய்தன.
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரசு முகமையான ‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ (FSSAI - Food Safety and Standards Authority of India), 2018 ஜூலையில்தான் நியூட்ரோஃபியூரான் உள்ளிட்ட 20 விதமான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்தது.
