

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களின் பணியில் அதிக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, பள்ளிக் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கவனம் பெறாத இந்தப் பிரச்சினை பற்றிப் பேசியாக வேண்டிய தேவை உள்ளது.
முக்கியப் பணிகள்
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரையிலான அனைத்து அரசுகளும் நம் குழந்தைகளின் கல்வி தொடர்பாகப் பல்வேறு கல்விக் குழுக்கள், கொள்கைக் குறிப்புகள், கல்வித் திட்டங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்திவருகின்றன.
ஒத்திசைவுப் பட்டியலில் கல்வி உள்ள நிலையில், அதிகார மோதல்களுக்கு இடையே நிதிப் பகிர்வு, நிர்வாக நடைமுறையில் நிலவும் சிக்கல்கள் போன்றவற்றால் அனைவருக்கும் பாகுபாடற்ற, தரமான கல்வி கிடைப்பதில், உறுதியான நிலையை அடைவதில் முழுமை பெறாத நிலை தொடர்கிறது.
சமத்துவம், நவீனத் தொழில்நுட்பம், மாணவர் நேயக் கற்றல் போன்ற சிறந்த கூறுகளை நோக்கங்களாகக் கொண்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025இல் உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அமைந்த புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட புதிய பாடநூல் குறித்த பயிற்சியும் நடத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் அரசு - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஒன்று முதல் மூன்று வகுப்புகள்வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.