

அண்மையில் வெளியான, பல்கலைக்கழகங்களுக்கான க்யூ.எஸ். (Quacquarelli Symonds) தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் 11 இந்தியப் பல்கலைக்கழகங்களே இடம்பெற்றுள்ளன. எட்டு ஐஐடி நிறுவனங்கள் இதில் அடக்கம்.
உலகிலேயே மிக அதிகமான கல்வி நிலையங்களைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு இது பெருமை சேர்க்கிறதா? உண்மையில், கடந்த ஆண்டுகளைவிட இந்த முறை இந்தியாவின் நிலை சற்று மேம்பட்டிருந்தாலும், உலகளாவிய கல்விசார் நற்பெயர் என்கின்ற முக்கிய அம்சத்தில் நம்மால் இன்றளவும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மட்டுமே கல்வியின் இலக்காகக் கருதும் அணுகுமுறை, முன்னேறும் அறிவுசார் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியாது. உலக அரங்கில் உயர்ந்து நிற்க விரும்பும் ஒரு நாட்டுக்கு, ஆரோக்கியமான கல்விக் கொள்கைகளும் சுதந்திரமான ஆராய்ச்சிச் சூழலும் இன்றியமையாதவை.
தன்னாட்சி - உயிர்நாடி
தகவல் தொடர்பு சவாலாக இருந்த காலத்தில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் தன்னாட்சிக் கொள்கை உருவாக்கப்பட்டது. தற்போது தனிமனிதச் சுதந்திரம், பொறுப்புணர்வு, ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படைச் சித்தாந்தமாக அது பரிணமித்துள்ளது.
எண்ணற்ற நோபல் பரிசுகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் உலகுக்குத் தந்துள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி பெற்றவை. எனவே, கல்வியின் வளர்ச்சிக்கு இந்தச் சித்தாந்தம் ஓர் உயிர்நாடி.
தன்னாட்சி என்பது கல்வி, நிதி, நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளிலும் முழுச் சுதந்திரத்துடன் செயல்படுவது. ஆனால், நம் நாட்டில் இக்கொள்கை அரைகுறை வடிவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது, கல்விச் சுதந்திரம் மட்டும் வழங்கப்பட்டு, தன்னாட்சி பெற்ற கல்வி நிலையங்கள் எனப் பல கல்வி நிறுவனங்கள் பிரகடனப்படுத்தப்படுகின்றன.
தேசிய அளவில் அங்கீகாரங்களையும் தரச்சான்றுகளையும் பெறும் நோக்கில் இத்தகைய தவறான முன்னுதாரணங்கள் உருவாகியுள்ளன.
இந்த நிலைப்பாடு தனியார் தன்னாட்சி நிறுவனங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.