

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசுக்கு முன் உள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்று ஊழல் ஒழிப்பு. புரையோடிப் போயிருக்கும் ஊழலை அகற்ற ஒரு துணிச்சலான அரசு மனத்துணிவு கொண்டால் போதும். அதற்கு முதற்கட்டமாக இரண்டு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
ஒன்று, நிர்வாகத்தில் எண்ணிலக்கப் (டிஜிட்டல்) பயன்பாட்டை அதிகரித்தல்; இரண்டு, அதிகாரப் பரவலாக்கம். இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஊழலுக்கான வாய்ப்புகளைக் குறைத்து, பொறுப்புணர்வை அதிகரித்து, ஆட்சியை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டுசெல்லும் திறன் கொண்டவை.
ஆனால், இவை மட்டுமே போதுமானவையல்ல. பொதுவாக, ஊழல் என்பது சிறிய அளவிலான லஞ்சப் பரிமாற்றங்களில் தொடங்கி, பெரிய அளவிலான நிதி மோசடிகள், அரசியல் ஆதாயங்கள், ஒப்பந்த முறைகேடுகள், அதிகாரத் தீவினைகள் எனப் பல வடிவங்களில் வெளிப்படுகிறது.
அரசியல் அறிஞர் ராபர்ட் கிளிட்கார்டு (Robert Klitgaard), ஊழல் என்பது எல்லையற்ற அதிகாரம், அதிகாரியின் தனித்த விருப்பச் சுதந்திரம், பொறுப்புடைமை (Accountability) இல்லாத வாய்ப்பு ஆகிய மூன்று கூறுகளின் இணைப்பாக உருவாகிறது என்று விளக்குகிறார்.
அதாவது, ஒருவரிடமோ அல்லது ஒரு நிறுவனத்திடமோ அதிக அதிகாரம் குவிந்திருந்தால், அந்த அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களின் விருப்பத்துக்கு விடப்பட்டிருந்தால், அவர்கள் செய்த செயல்களுக்கு உரிய கண்காணிப்போ பொறுப்புடைமையோ இல்லாவிட்டால் - ஊழல் உருவாகும் சாத்தியம் அதிகரிக்கிறது. இந்த மூன்று காரணிகளையும் அகற்ற எண்ணிலக்க மயம், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய இரண்டும் பெரிதும் பயன்படும்.
எண்ணிலக்க மயத்தின் பலன்கள்
எண்ணிலக்க மயம் என்பது காகித ஆவணங்கள், நேரடி அலுவலக நடைமுறைகள், மனித முகங்கொடுத்தல் போன்றவற்றில் இருந்து விடுவிப்பதாகும். வழக்கமான நிர்வாக அமைப்புகளில், சேவையைப் பெற மக்கள் அதிகாரிகளை நேரடியாகச் சந்திக்க வேண்டியிருப்பது பல நேரம் லஞ்சம், பரிந்துரை, பாரபட்சம் போன்றவற்றுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன. எண்ணிலக்க முறைகள் அறிமுகப்படுத்தப்படும்போது, இந்த மனித இடைவினைகள் குறைக்கப்படுகின்றன.
எண்ணிலக்க மயத்தின் மிகப்பெரிய பலன் வெளிப்படைத்தன்மை. ஒவ்வொரு விண்ணப்பமும், ஒவ்வொரு ஒப்புதலும், ஒவ்வொரு நிதிப் பரிமாற்றமும் மின்னணுப் பதிவுகளாகச் சேமிக்கப்படுகின்றன. இதனால் எந்த நடவடிக்கை எப்போது நடைபெற்றது, யார் மேற்கொண்டார்கள், எந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதைக் கண்காணிக்க முடிகிறது.