

மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுத் துறை வங்கி ஒன்றின் கராத் கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்த ரவிகிரண் லாடே, நவம்பர் 13 அன்று தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினாலும் மண்டல நிர்வாகக் காணொளிக் கூட்டங்களில் மற்ற அதிகாரிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட அவமதிப்புகளும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும்தான் இந்த முடிவை நோக்கித் தள்ளின என்று கடிதத்தில் பதிவுசெய்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடுமையான வேலைப் பளு, மோசமான பணிச்சூழல் ஏற்படுத்தும் மன அழுத்தம் காரணமாக நேரும் மரணம் அல்லது தற்கொலையை ‘கரோஷி’ என்று குறிப்பிடுகின்றனர் ஜப்பானியர்கள். 2024இல் மட்டும் ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்தியாவில் அப்படியான பகுப்பாய்வு இல்லை என்றாலும் அதே ஆண்டு, இந்தியாவில் பதிவாகியுள்ள 1 லட்சத்து 70 ஆயிரத்து 246 தற்கொலைகளில், பல ஆயிரம் பேர் பணியிடத்து வேலைச் சுமை காரணமாகத் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று புரிந்துகொள்ள முடியும்.
10 ஆண்டுகளில் 500 தற்கொலைகள்
வணிக இதழ் பத்திரிகையாளர் தமல் பந்தோபாத்யாய ஆகஸ்ட் 2025இல் எழுதிய கட்டுரையில், வங்கித் துறையில் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 500க்கு அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாகப் பதிவுசெய்திருந்தார்.
எந்தெந்த வங்கி, எந்த அதிகாரி, என்ன சூழலில் தனது இன்னுயிரைப் போக்கிக்கொண்டார் என்று இதயத்தை உலுக்கும் விவரங்களோடு வந்திருந்த கட்டுரை அது.
கடந்த 10 ஆண்டுகளில் 500 பேர் என்பது தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை. அந்த முடிவை நோக்கிப் போய், நல்வாய்ப்பாகக் குடும்பத்தை நினைத்தோ நண்பர்கள் வழங்கிய ஆறுதல் சொற்களாலோ அந்த எண்ணத்திலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை யாருக்குத் தெரியும்? அவர்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்ததா என்பதும் இன்னொரு கேள்வி.