

குழந்தைகள் பாதுகாப்பு இன்று தமிழகத்தின் மிகப் பெரிய மனித உரிமைச் சவாலாக மாறியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வேண்டிய சமூகமே அவர்களுக்கு அச்சமூட்டும் இடமாக மாறியிருப்பது பெரும் அவலம். இந்திய மக்கள்தொகையில் ஏறக்குறைய 39% பங்குள்ள குழந்தைகள், ‘நாட்டின் எதிர்காலம்’ என்று போற்றப்பட்டாலும், பாதுகாப்பிலும் உரிமைகளிலும் புறக்கணிக்கப்படுவது மிகப் பெரிய கொடுமை.
அருகில் இருக்கும் ஆபத்து
உலகச் சுகாதார நிறுவனம், யுனிசெஃப் ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். உலக அளவில் 5 பெண் குழந்தைகளில் ஒருவரும், 13 ஆண் குழந்தைகளில் ஒருவரும் பாலியல் வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
மேலும், 94.6% பாலியல் குற்றங்கள் குடும்பத்தினர், உறவினர், அண்டை வீட்டினர், ஆசிரியர் போன்ற நம்பிக்கைக்கு உரியவர்களாலேயே நிகழ்கின்றன. குடும்ப மரியாதை, அச்சம், சமூக அவப்பெயர் காரணமாகப் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கே வராமல் மறைக்கப்படுகின்றன.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் மக்களவையில் 22.05.2012 அன்று நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், குழந்தைகளின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பது வேதனையளிக்கிறது.
‘குழந்தைகளின் அன்பால் மலர்ந்த வெற்றி’ என்று பெருமிதம் கொள்ளும் தமிழகத்தின் புதிய அரசு, அந்த அன்புக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. அந்த நன்றிக்கடன், குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, நலன், உரிமைகளை ஆட்சியின் முதன்மைப் பொறுப்பாக மாற்றும்போதுதான் நிறைவேறும். குழந்தைகள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கும் அரசே உண்மையான குழந்தை நேய அரசாகும்.
சமூகப் பாதுகாப்பு
இந்த அரசு உண்மையான குழந்தை நேய அரசாக மலர வேண்டும் எனில், போக்சோ சட்ட அமலாக்கம் வெறும் குற்றவியல் நடவடிக்கையாக மட்டும் அல்லாது, குழந்தைகள் பாதுகாப்பை மையமாகக் கொண்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பாக மாற்றப்பட வேண்டும். அதற்கான பின்வரும் நடவடிக்கைகள் உறுதியுடன் செயல்படுத்தப்படுவது காலத்தின் அவசியமாகும்.
போக்சோ சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் 30 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட்டு, காவல் துறையின் விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் ஓர் ஆண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் இக்காலவரையறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.