

தமிழகத்தில் புற்றுநோய் தொடர்பான புள்ளிவிவரங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் அதன் கீழ் இயங்கிவரும் தேசிய நோய்த்தொற்றியல் நிறுவனமும் வெளியிட்டிருக்கின்றன.
புற்றுநோய் தடுப்பு, தொடக்கக் காலக் கண்டறிதல் தொடர்பான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய முக்கியக் காலக்கட்டத்தில் இருக்கிறோமா என்கிற கேள்வியை இந்தத் தரவுகள் எழுப்புகின்றன. அனைத்து ஆய்வாளர்கள், அரசு, மக்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய தகவல்கள் இவை.
தொடரும் அறியாமை
இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் 19 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே புதிதாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு 2026ஆம் ஆண்டில் 93,876 எனத் தெரியவந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை 2030இல் ஏறக்குறைய 99,478 ஆகவும் அதிகரிக்கக்கூடும் எனப் புள்ளியியல் கணக்கீட்டின்படி மதிப்பிடப்பட்டுள்ளது. இது கணித அடிப்படையில் மட்டுமானது.
2015-17 தரவுகளை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையில், பாதிப்புகளின் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கும் என்றே முழு அறிக்கையைப் படித்த பின்னர் உணர முடிகிறது.
மொத்தமாகப் பார்க்கையில், 0–74 வயதுக்குள் ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாழ்நாள் வாய்ப்பானது, பெண்களில் 11 பேரில் ஒருவருக்கும் ஆண்களில் 12 பேரில் ஒருவருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதைவிடக் கவலைக்குரிய விஷயம், நல்ல கல்வியறிவு கொண்ட, ஓரளவு விழிப்புணர்வு உள்ள பலரும் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள் என்பதை இந்த ஆய்வறிக்கை பதிவுசெய்கிறது.