

பூவுலகின் நீடித்த தன்மையைப் பேணுவதற்கான கோளியக்க வரம்புகளை (planetary boundaries) ஒன்பதாகச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். இதில் ஆறு முதல் ஏழு வரம்புகளை நாம் மீறிவிட்டோம்.
மீதமுள்ளவற்றையும் விரைவில் மீற உள்ளோம் என்பதை நமது செயல்பாடுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மீறினால் அவற்றை மீண்டும் சீரமைக்க முடியாது. ஒட்டுமொத்தமாக உலகின் நிலை இதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமையும் கவலைக்குரியதாகவே உள்ளது.
நீர்வளம்
கடந்த 50 ஆண்டுகளில் மழைப்பொழிவு அளவு சராசரி 950 மி.மீ. என்பது மாறாமல் இருந்தாலும், மழை பொழியும் நாள்களின் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 1970-80களில் ஆண்டுக்கு 60 நாள்களில் மழை பரவலாகப் பெய்துவந்தது. கடந்த 2015-2025 வரை ஆண்டுக்கு 40 நாள்களில் கொட்டித் தீர்த்துவிடுகிறது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுக் கடுமையான சேதாரம் ஏற்படுகிறது.
தமிழகத்தின் நீர்வரத்தை எதிர்கொள்ளப் பல ஏரிகளும் குளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதைப் பண்டைய மக்கள் மிகக் கவனமாகப் பாதுகாத்துவந்தனர். அது இப்போது முற்றிலும் கைவிடப்பட்டு அரசின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் பங்கேற்பு இல்லாத நீர் மேலாண்மையில் முறைகேடுகளும் குளறுபடிகளும் மேலோங்கி உள்ளன.
தமிழகத்தில் மழைநீரைச் சேமிக்கக்கூடிய வாய்ப்புள்ள கட்டிடங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. இதில் அரசுக் கட்டிடங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அடங்கும். குடிநீருக்காக ஆண்டுக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.18,000 கோடிவரை அரசு செலவிடுகிறது. வீட்டுக்கு வீடு குடிநீர் புதைதொட்டிகள் (sump) அமைக்க அரசு நிதி உதவியளித்தால் ஐந்து ஆண்டுகளில் குடிநீர் வழங்கலை முற்றிலும் மக்கள்மயமாக்கிவிட முடியும்.
ஆற்று மணலைக் கொள்ளையடிப்பது, ஆற்றில் கழிவுநீரைக் கலப்பது, கசடுகளைக் குவிப்பது போன்ற செயல்கள் தொடர்கின்றன. இதைத் தடுக்க அரசு, நீதிமன்றங்கள், மக்கள் என்கிற முக்கூட்டு நடவடிக்கை அவசியம். கழிவுநீரைத் தூய்மையாக்கும் வடிப்பான் வசதிகளைச் செய்து நீரைத் தூய்மையாக்கிய பின்னரே வெளியேற்ற வேண்டும். பொதுவெளியில் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளையும் வீடுகளையும் உடனடியாகத் தடுத்துத் தண்டிக்க வேண்டும்.
குறிஞ்சி நலம்
தமிழ்நாட்டின் மலை வளமே அனைத்து மக்களுக்கும் உயிராதாரம். மலைப் பகுதிகளில் சட்டபூர்வ, சட்டத்துக்குப் புறம்பாக மலையைச் சுரண்டும் சுரங்கங்கள் (quarries) அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பாறைகளை உடைத்து மலைகளைக் கரைக்கின்றன. நீதிமன்றங்கள் கண்டித்தாலும், இன்னும் பல குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது.