பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு: சமூகத்தின் கடமை என்ன?

அச்சமின்றி வாழும் பெண்களால்தான் சமூகம் உண்மையில் முன்னேறும்
பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு: சமூகத்தின் கடமை என்ன?
Updated on: 
3 min read

சிறுமிகள், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகிவருவது வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டு ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை மாலை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில், பிஹாரிலிருந்து பிழைப்பு தேடி வந்த தொழிலாளர் தம்பதியின் மூன்று வயதுப் பெண்குழந்தை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தது.

தந்தையுடன் பணிபுரிந்த இளைஞர், பிஸ்கெட் தருவதாகக் கூறிக் குழந்தையை அழைத்துச் சென்றதாகக் காவல் துறை தெரிவித்தது. அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவர் குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

அன்று இரவு ஒதுக்குப்புறத்தில், கொடூரமான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுப் புதரில் கைவிடப்பட்டிருந்த குழந்தையைப் பெண் ஒருவர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்.

மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட குழந்தை, ஜூன் 15ஆம் தேதி காலை உயிரிழந்தது. வீட்டுக்கு வெளியே விளையாடச் சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பவே இல்லை. இச்சம்பவம் மக்களிடையே எழுப்பிய கேள்வி ஒன்றுதான்; பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எப்போது முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்?

வன்முறையின் பல முகங்கள்

வீடு, பள்ளிக்குச் செல்லும் வழி, விளையாடும் இடம் என எங்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். அறிமுகமானவர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என யாரிடம் இருந்தும் ஆபத்து வரலாம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை, 2026 மே மாதம் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 10,046 வழக்குகள் பதிவாகியுள்ளன. தென்னிந்திய மாநிலங்களிலேயே இது அதிகம். பெண்களும் பெண் குழந்தைகளும் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவது அரசின் கடமையும் ஒட்டு மொத்தச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்புமாகும்.

பாதுகாப்பாக வாழ்வது ஒவ்வொரு பெண்ணுக்கும் அடிப்படை உரிமை. ஆனால், உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல்ரீதியிலான அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொள்கிறார்.

குடும்ப வன்முறை, கணவன் அல்லது நெருங்கிய துணையின் துன்புறுத்தல், பாலியல் தொல்லை, பணியிடப் பாகுபாடு, வரதட்சிணைக் கொடுமை, ஆணவக் கொலை, ஆள் கடத்தல், பாலியல் சுரண்டல், குழந்தைத் திருமணம் என வன்முறையின் பட்டியல் நீள்கிறது.

Loading content, please wait...

X