

கடந்த சில மாதங்களாக ஜென் ஸீக்கள் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டத்தின் நீட்சியாக விளைந்த கரப்பான் ஜனதா கட்சி தேசிய அரசியலிலும் சமூக வெளியிலும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. கொடி இல்லை, அலுவலகம் இல்லை, தேர்தல் அறிக்கை இல்லை - இருந்தது வெறும் கேலியும் கோபமும், ஒரு திரையில் பரவும் வேகமும் மட்டுமே.
இடம் மாறும் நம்பிக்கை: ‘தனிமனிதராக இருக்கும்போது பகுத்தறிவோடு சிந்திப்பவர், ஒரு திரளின் அங்கமாக மாறும்போது தர்க்கத்தைவிட உணர்ச்சியாலும் ஒரு படிமத்தாலும்தான் இயங்கத் தொடங்குகிறார்’ என்பது பிரெஞ்சு சமூக உளவியலாளர் லெ பான் சுட்டிக்காட்டிய பழைய உண்மை. ஆனால், இன்று அந்த உண்மை ஏன் இவ்வளவு வேகமாகவும் பெரிதாகவும் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, அவர் காலத்தில் இல்லாத புதிய மாற்றங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.
முதலில் தெரிவது ஒரு முரண் - தனிமையான திரள். ஒவ்வொருவரும் தங்கள் அறையில், தங்கள் கைப்பேசியுடன் தனியாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அந்தத் தனிமையிலேயே லட்சக்கணக்கானோருடன் ஒரே விநாடியில் அவர்கள் இணைந்துவிடுகிறார்கள் - ஒரு ஹேஷ்டேக் மூலமோ, ஒரு ரீல்ஸ் காணொளிப் பதிவின் பின்னூட்டப் பெட்டி மூலமோ. முன்பு திரளாகக் கூடுவதற்கு மைதானமோ பேரணியோ தேவைப்பட்டது; இன்று தேவையில்லை. தனிமையும் திரள் உணர்வும் ஒரே நேரத்தில் நிகழும் இந்தப் புதிய மனநிலைதான், கரப்பான் ஜனதா கட்சி போன்ற இயக்கங்களை உடனடியாக உருவாக்குகிறது.