

இன்றைய தேர்தல் களத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போக ஏராளமான சலுகைகளையும் இலவசங்களையும் பிரச்சாரத்தின்போது வாக்குறுதிகளாக வாரி வழங்கிவருகிறார்கள். இவையெல்லாம் சாத்தியமா இல்லையா என்பது தெரியவில்லை.
உண்மையில், மக்களுக்கு அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய வாக்குறுதிகள் என்ன? குடிமைச் (சிவில்) சமூக அமைப்புகள் இது தொடர்பாகத் தற்போது பேசத் தொடங்கியுள்ளன.
குடிமைச் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ள ‘நாட்டைக் காப்போம்’ அமைப்பினர் மதுரையில் ஒரு வாரம் இது தொடர்பான விவாதங்களை நடத்தியதும் கவனிக்கத்தக்கது. பொதுவாக, குடிமைச் சமூகத்தின் சார்பில் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
வேலைவாய்ப்பு
அமையவுள்ள புதிய அரசு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியம். தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு வேலைக்காகப் பதிவுசெய்து காத்திருப்போரில் ஆண்கள் 24 லட்சம்; பெண்கள் 28 லட்சம்.
பதிவுதாரர்களில் 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 23 லட்சத்து 27 ஆயிரத்து 649 பேர். இந்த எண்ணிக்கை மிகவும் கணிசமானது. இளைஞர்களுக்குக் கல்வியை அளிப்பதோடு, அந்தந்தத் தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசு விரிவுபடுத்த வேண்டும்.
கல்வியோடு தொழில் சார்ந்த திறன் பெற்றவர்களால் மாநிலத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்பு உயரும்போது, வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு குறையும். தமிழக இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
போதை இல்லாத் தமிழகம்
மனித நலன், சமூகப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சிக்குப் போதையில்லாச் சமூகம் மிகவும் அவசியம். போதைப்பொருள்கள் உடல்நலனையும் மனநலனையும் தீவிரமாகப் பாதித்து, குடும்பங்களையும் சமூக உறவுகளையும் சிதைக்கின்றன; குற்றச்செயல்கள், வன்முறை ஆகியவற்றுடன் வறுமையையும் அதிகரிக்கின்றன.
எனவே குடிப் பழக்கம், போதைப்பொருள் பழக்கங்களிலிருந்து தமிழக இளைஞர்களை மீட்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். படிப்படியாகத் தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.