

ஒவ்வொரு தேர்தலின்போதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கடந்தகால / நிகழ்கால நலத்திட்டங்களின் பயனாளிகளாகவே பெண்களைப் பார்க்கின்றன. தமிழ்நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியாக இருக்கும் பெண்களை, அவர்களின் பிரத்யேகக் கோரிக்கைகளின் அடிப்படையில் வாக்காளர்களாகக் கட்சிகள் பெரும்பாலும் பார்ப்பதில்லை.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பெண்களே அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர். பெண்களின் வாக்குகள் (72.54% வாக்குப்பதிவு) ஆண்களைவிடச் சற்று அதிகம். இந்தப் பங்கேற்பு அவர்களது அரசியல் ஈடுபாட்டைத் தெளிவாக உணர்த்துகிறது. இருந்தாலும், அவர்களின் அன்றாட எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அரசியல் கட்சிகள் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை.
பெண்கள் எதிர்பார்ப்பது மாதாந்திரப் பணவரவோ, அவற்றுக்கான அடையாளத் திட்டங்களோ மட்டுமல்ல; அன்றாட வாழ்க்கையில் அவர்கள் நம்பியிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள், அதற்கான கொள்கை மாற்றங்கள் போன்றவற்றைத்தான்.
அவர்களின் கோரிக்கைகள் தலைப்புச் செய்திகளாக இடம்பிடிக்கக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமல்ல. பாதுகாப்பான பயணம், கண்ணியமான வேலை, குடும்பப் பொறுப்புகளுடன் இணைந்து வேலையும் பார்ப்பதற்குத் தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகள் போன்றவைதான்.
நம்பிக்கையின்மை
சென்னையில் பொதுக் கழிப்பறைகளைப் பெண்கள் பயன்படுத்துவது குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக ஜூன் 2024இல் நான் மேற்கொண்ட களப்பணியில் - கோரிக்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் இடையிலான இந்த இடைவெளியைக் காண முடிந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், புதிதாகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை பெரும்பாலும் பெண்களால் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
பாதுகாப்பு சார்ந்த கவலைகள், யாரெல்லாம் கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த உத்தரவாதமற்ற தன்மை போன்றவையே இதற்கான காரணங்களாகக் கூறப்பட்டன. இந்தப் பதில்கள், பெரும்பாலான நேரம் பொது வசதிகளைப் பயன்படுத்துவதில் பெண்களின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கின்றன.
இவை கூறவரும் செய்தி ஒன்றே: பெண்களின் அரசியல் தேர்வுகளை வடிவமைப்பது உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அறிவிப்புகள் மட்டுமே அல்ல; அரசின் கொள்கைகளும் திட்டங்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையைக் கண்ணியமாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுமா என்பதிலேயே அடங்கியுள்ளது.
பெண்களின் குரலுக்குச் செவிமடுப்பது என்பது, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் அமைப்புகளில் கவனம் செலுத்துவதாகவே இருக்க முடியும்.