

கல்விப் புலத்தின் விவாதப் பொருளாக இதுநாள் வரை இருந்துவந்த நுழைவுத் தேர்வு, இன்றைக்குப் போராட்டக் களத்தின் மையப் பொருளாகியிருக்கிறது. தலைநகர் டெல்லியில் நுழைவுத் தேர்வு தொடர்பான போராட்டங்கள் நடந்தேறியுள்ளன. இத்தகைய சூழலில், நுழைவுத் தேர்வுகள் இன்றுவரை என்ன சாதித்திருக்கின்றன என்பதை ஆய்வுசெய்வது அவசியம்.
நுழைவுத் தேர்வின் வரலாறு
இந்தியாவில் முதன்முதலாக 1961ஆம் ஆண்டு ஐஐடி மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 1980களில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வியில் நாடு முழுவதும் ஒரே மாணவர் சேர்க்கை முறையை உருவாக்கும் நோக்கில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
நம் நாட்டில் பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், மதிப்பீட்டுத் தரநிலைகள் ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. இந்த வேறுபாடுகளை ஓரளவு சமன்படுத்தி, மாணவர்களின் திறனை ஒரே அளவுகோலில் மதிப்பிடும் நோக்கத்துடன்தான் நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
திரிந்துபோன நோக்கம்
கல்வித் துறையில் புதிய ஒழுங்குமுறைகள் (Regulations) அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம், அவற்றின் பக்கவிளைவாகப் புதிய வணிக வாய்ப்புகளும் உருவாவது வழக்கமாகிவிட்டது.
எடுத்துக்காட்டாக, முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டபோது, சுரண்டல் நோக்கம் கொண்ட ஆய்விதழ்கள் (Predatory Journals) பெருகின. அதோடு, பணம் பெற்றுக்கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வழங்கும் நிறுவனங்களும் உருவாகின. அதேபோல், கோடிக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலக் கனவுகளும் வணிக மாதிரியாக மாற்றப்பட்டன.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்களின் சாதனைகளைத் தங்கள் கல்வி நிறுவனங்களின் வெற்றியாக முன்னிறுத்தி வானொலி, காணொளி, சமூக ஊடகங்கள், நாளிதழ்கள் என எல்லா வழிகளிலும் விளம்பரப்படுத்தினர். அதன் பலனாக, பயிற்சி மையங்களின் வணிகம் அபரிமிதமாக வளர்ச்சி பெற்றது.