

ஏப்ரல் 23இல் முதல் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் களம், அனலாகத் தகிக்கிறது. வழக்கமாகப் பல கட்டங்களாக நடத்தப்படும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல், இந்த முறை இரண்டே கட்டங்களாக நடத்தப்படுவது கவனம் ஈர்க்கிறது. ஆனால், வங்க மண்ணின் அரசியல் களத்துக்கே உரிய பரபரப்புக் காட்சிகளுக்கு இந்தத் தேர்தலும் விதிவிலக்கல்ல.
2011-லிருந்து முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறது பாஜக. இண்டியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸுடன் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தனித்துக் களம் காண்கிறது. 2021 தேர்தல் தோல்வி அதிருப்தியால் இடதுசாரிகள் இந்த முறை காங்கிரஸுடன் இல்லை.
போதாக்குறைக்கு, திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹுமாயுன் கபீரின் ‘ஆம் ஜனதா உன்னாயன்’ கட்சியுடன் கைகோத்திருந்த அசதுதீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம், அக்கட்சியுடனான முரண்பாட்டால் தனித்துப் போட்டியிடுகிறது.
இப்படிக் கட்சிகளும் கூட்டணிகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதைவிடவும் அதிகம் பேசுபொருளானது தேர்தல் ஆணையத்துடனான மம்தாவின் மோதல்தான். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) மூலம், 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது இந்தத் தேர்தலின் முதன்மைப் பிரச்சினை ஆகியிருக்கிறது.
பாஜகவின் வியூகங்கள்
2016 சட்டமன்றத் தேர்தலில் மூன்றே இடங்களில் வென்றிருந்த பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றியது. மம்தாவின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராக இருந்த சுவெந்து அதிகாரி, கருத்து முரண்பாட்டால் பாஜகவுக்குத் தாவினார். மம்தா முதல்வர் பதவிக்கு வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்த நந்திகிராம் போராட்டத்தில் முதன்மையாகப் பங்களித்த சுவெந்து, 2021 தேர்தலில் நந்திகிராமிலேயே போட்டியிடுமாறு மம்தாவுக்கு சவால் விடுத்ததுடன் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் அவரைத் தோற்கடித்தும் காட்டினார்.
அதிர்ச்சியடைந்த மம்தா, முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வென்றார். இந்த முறை பவானிபூரில் மீண்டும் மம்தா போட்டியிடுகிறார். நந்திகிராமில் திரிணமூல் காங்கிரஸின் பபித்ரா கரை எதிர்கொள்ளும் விடாக்கண்டர் சுவெந்து, பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் பவானிபூரிலும் போட்டியிடுகிறார்.
‘கட்சி என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன்’ எனப் பணிவு முகம் காட்டினாலும், இந்த முறை பாஜக வென்றால் தனக்குத்தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் சுவெந்து இருக்கிறார். 2021 தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸுக்கு 213 இடங்கள் கிடைத்தன.
இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், இந்திய மதச்சார்பின்மை முன்னணிக் கட்சி (ஐஎஸ்எஃப்) அடங்கிய சம்யுக்தா மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒன்று, ஐஎஸ்எஃபுக்கு ஒன்று என இரண்டே இடங்கள்தான் கிடைத்தன. இடதுசாரிகளுக்குக் கிடைத்தது பூஜ்ஜியம்தான். மறுபுறம், மேற்கு வங்கத்தில் முதலில் எதிர்க்கட்சியாவது, பின்னர் ஆட்சியைப் பிடிப்பது என வியூகம் வகுத்த பாஜக, வெற்றியைக் குறிவைத்துக் கடுமையாக உழைத்துவருகிறது.
மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 27 - 30 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில், வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்கள், மயன்மாரின் ரோஹிங்க்யாக்கள் தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது பாஜக. பொது சிவில் சட்டம், வங்கதேச எல்லையில் தடுப்பு வேலி போன்ற வாக்குறுதிகளையும் பாஜக முன்வைத்திருக்கிறது.
டார்ஜிலிங் பகுதியில் தனி கூர்க்காலாந்து அமைக்கக் கோரி 1980களிலிருந்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்திருக்கிறார். கூடவே, இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மம்தா முட்டுக்கட்டை போட்டதாகவும் விமர்சித்திருக்கிறார்.
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் திரிணமூல் காங்கிரஸைத் திணறடிக்க பாஜக முயல்கிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவரின் தாய்க்கு பானிஹாட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்திருப்பது ஓர் எடுத்துக்காட்டு!
மனம் தளராத மம்தா
வாக்காளர் பட்டியலிலிருந்து 91 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பது இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்சினையாக எதிரொலிக்கிறது. சரியாக வேலை செய்கிறதா எனச் சோதித்தறியப்படாத மென்பொருள் ஒன்றை வைத்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. விளையாட்டுப் பிரபலங்கள், உயரதிகாரிகள், காவல் துறையினர்... ஏன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களின் பெயர்களும் விடுபட்டிருக்கின்றன.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு 24 பரகனா, தெற்கு 24 பரகனா மாவட்டங்களில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன. அதேபோல், வங்கதேசத்திலிருந்து வந்த தலித் சமூகத்தினரான மதுவா சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும் வாக்குரிமை பறிபோயிருக்கிறது.
இதனால், பெரும்பாலும் பாஜக ஆதரவு மனநிலை கொண்ட மதுவாக்கள் இந்த முறை அக்கட்சி மீது அதிருப்தி அடைந்திருக்கின்றனர். நிலைமையைப் புரிந்துகொண்ட பாஜக, அதிகாரிகளின் ஒரு பிரிவினருடன் கூட்டு சேர்ந்து மதுவாக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியல் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வாதாடியதன் மூலம் தனது பிம்பத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறார் மம்தா.
பிஹார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இறுதியாக, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், மேற்கு வங்கத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், இதில் வெகு சிலரே பயனடைவர்; மிகக் குறைந்த நாள்களே எஞ்சியிருக்கும் நிலையில் அனைவராலும் தீர்ப்பாயங்கள் மூலம் தீர்வு பெற முடியுமா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது.திரிணமூல் காங்கிரஸ் நீக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
தொகுதி வரையறை மசோதாவுடன் தொடர்புடையதாக முன்வைக்கப்பட்ட பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, திரிணமூல் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் தோற்கடித்த நிலையில், அக்கட்சிகள் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு எதிரானவை என்கிற முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்கிறது.
ஆனால், திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 37% பேர் பெண்கள் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, தொகுதி வரையறை மசோதாவானது பெருமளவில் வாக்காளர்களை நீக்கவும் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்தவும் பாஜக மேற்கொண்ட சதி என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
2021 தேர்தலின்போது, ‘தீதி... ஓ தீதி!’ என்று மம்தாவை பிரதமர் மோடி பலமுறை சீண்டினார். 49.1 சதவீதம் பெண் வாக்காளர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில், மோடியின் இதுபோன்ற பேச்சுக்கள் மம்தாவுக்கு மேலும் ஆதரவைத் திரட்டவே பயன்பட்டிருந்தன என்பது கவனிக்கத்தக்கது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ‘மாத்ரி சக்தி பரோசா’ என்னும் பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டத்துக்கான அட்டை விநியோகிக்கப்படுவது வாக்காளர்களுக்கு பாஜக கொடுக்கும் லஞ்சம் எனச் சீறியிருக்கிறார் மம்தா.
2021 தேர்தலிலும் பாஜகவினரை ‘வெளியாட்கள்’ என்றே விளித்துப் பரப்புரை செய்த திரிணமூல் காங்கிரஸ், பாஜகவினர் வங்க மண்ணின் பண்பாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் மீனவர்கள், மீன் விற்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறது.
பாஜகவும் காங்கிரஸும் கூட்டு என திரிணமூல் காங்கிரஸும், மோசமான ஆட்சி நிர்வாகத்தால் பாஜகவை மம்தா வளரவிட்டதாக ராகுல் காந்தியும், முஸ்லிம்களுக்கு எதிரான பாஜகவும் - முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாத திரிணமூல் காங்கிரஸும் ‘அண்ணன் - தங்கை’ போலச் செயல்படுவதாக ஒவைஸியும் சகட்டுமேனிக்கு விமர்சித்திருப்பதால் இந்தத் தேர்தல் களம் தகித்துக்கொண்டே இருப்பதில் வியப்பில்லை!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in