

2023 ஜூலையில், ‘மணி கண்ட்ரோல் கான் கிளேவ்’ என்கிற நிதி மேலாண்மைக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்தார் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி. அவரது உரையின் காணொளியிலிருந்து ஒரு துண்டை வெட்டியெடுத்து, ‘டீப் ஃபேக்’ (Deepfake) காணொளியை உருவாக்கிய மோசடியாளர்கள், ஒரு முதலீட்டுத் திட்டத்தில் சேர நாராயணமூர்த்தி விடுக்கும் அழைப்பாக அதை இணையத்தில் பரவவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் பரவிய அந்தப் போலியான காணொளியை உண்மையென நம்பிய சிலர், அதனோடு விளம்பரப்படுத்தப்பட்டிருந்த இணைப்பைச் சொடுக்கினர்; தங்கள் சொந்தத் தகவல்களையும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களையும் கொடுத்தனர்; பல லட்சம் பணத்தை இழந்தனர்.