

போர்கள், சம்பந்தப்பட்ட நாடுகள் மீதும் சம்பந்தப்படாத நாடுகள் மீதும் தாக்கம் செலுத்தக்கூடியவை. அரசியல் போக்குகளை - குறிப்பாகத் தேர்தல் அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் ஆற்றல் போர்களுக்கு உண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரை, பல்வேறு போர்கள் தேசிய அரசியலிலும் மாநிலங்களின் அரசியல் போக்கிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன – சில தருணங்களில் நேரடியாகவும், பல தருணங்களில் மறைமுகமாகவும்!
அண்டை நாடுகளுடனான போர்
1960களின் தொடக்கத்தில் இந்தியாவுக்குள் சீனாவின் ஊடுருவல், சீனாவுடனான போரில் (1962 அக்டோபர் - நவம்பர்) கிடைத்த தோல்வி போன்றவை, அதுவரை பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்த ஜவாஹர்லால் நேருவுக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தின.
1962 பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை காங்கிரஸ் பெற்றிருந்தாலும், 1963இல் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் (உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபரூகாபாத், அம்ரோகா, குஜராத்தில் உள்ள ராஜ்கோட்) அக்கட்சி தோல்வியடைந்தது.
நேருவின் மறைவுக்குப் பின்னர் பிரதமர் (1964) ஆன லால் பகதூர் சாஸ்திரிக்குப் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டன.
1965இல் இந்தியா - பாகிஸ்தான் போரைச் சாதுரியமாகக் கையாண்டது தனிப்பட்ட வகையில் அவரது செல்வாக்கை உயர்த்தியது. அவரது மறைவுக்குப் பின்னர் பிரதமரான இந்திரா காந்தி, காங்கிரஸின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி எடுத்தார்.
1967 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், சென்னை மாகாணம், பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோற்று ஆட்சியை இழந்தது. சென்னை மாகாணத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக வெடித்த போராட்டமும், இன்னபிற காரணிகளும் திமுக கூட்டணிக்குப் பெரும் வெற்றி தேடித்தந்தன.
அந்தக் காலக்கட்டத்தில், வியட்நாம் மீதான அமெரிக்காவின் போர், சர்வதேச அளவில் விமரிசிக்கப்பட்டது.
இவ்விஷயத்தில் அமெரிக்காவை லால் பகதூர் சாஸ்திரி கண்டித்திருந்ததால், இந்தியாவுக்கான உணவுப் பொருள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அனுப்புவதை அமெரிக்கா குறைத்தது. ஏற்கெனவே வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பின்னர், தனது ஆட்சிக்காலத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்கா சென்று இந்திரா காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு எட்டப்படாததால் சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா உறவை ஏற்படுத்திக்கொண்டது.
அதேவேளையில், 1960களில் நிலவிய அரிசிப் பஞ்சத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திய திமுக, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்று வாக்குறுதி அளித்தது. 1967 தேர்தலில் அக்கட்சியின் வெற்றிக்கு, அதுவும் ஒரு காரணியாக அமைந்தது.
அரசியல் ‘நெருக்கடி’
1971 மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 352 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. 1971 டிசம்பரில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி, வங்கதேசத்தை உருவாக்கியது போன்றவை இந்திரா காந்தியை மிகப் பெரிய தலைவராக உயர்த்தின.
அதன் பலனாக 1972இல் பிஹார், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது.
எனினும், 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசு ஊழியரான யஷ்பால் கபூரைத் தனது தேர்தல் முகவராக இந்திரா காந்தி பயன்படுத்திக்கொண்டதாக, அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கு, 1975இல் இந்திரா காந்திக்குப் பெரும் தலைவலியானது.
அவரது வெற்றி செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீட்டில் அவரது வெற்றி செல்லுமா, செல்லாதா என்பது குறித்த விசாரணை பின்னர் நடைபெறும் என்றும், அதுவரை அவர் பிரதமராகத் தொடரலாம் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை மட்டும் கிடையாது எனத் தீர்ப்பளித்தது.
இதனால் பதவிக்கு நெருக்கடி வரக்கூடும் என நினைத்த இந்திரா காந்தி 1975 ஜூன் 25இல் நெருக்கடிநிலையை அமல்படுத்தினார்.
முன்னதாக 1962 சீனப் போர், 1971 பாகிஸ்தான் போரின்போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
1975இல் இந்திரா காந்திக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது, ‘அரசமைப்புச் சட்டக்கூறு 352இன் விதிகளின் கீழ் உள்நாட்டில் பிரச்சினை ஏற்படும்போதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தலாம்’ என மேற்கு வங்கத்தின் அப்போதைய முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய் யோசனை சொல்ல, அதைச் செய்துகாட்டினார் இந்திரா காந்தி.
பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டது, பத்திரிகைகளின் செயல்பாடுகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது என நாடே பரபரப்பாக இருந்த நிலையில், 1977இல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
1971 பாகிஸ்தான் போருக்கு முன்னதாக, கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்டிருந்த கலகங்கள் காரணமாக, இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனப் பேசப்பட்டது.
அப்போது - பிற்காலத்தில் அரசியல்ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இன்னொரு விஷயத்துக்கான ஏற்பாடும் நடந்தது.
1971 ஜூலை 2இல், உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (மிசா - Maintenance of Internal Security Act) கொண்டுவரப்பட்டது.
நெருக்கடிநிலைக் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவதற்கான ஒரு கருவியாக அதை இந்திரா காந்தி பயன்படுத்தினார். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “இன்றைக்கும் பல போராட்டங்களில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டால், அடையாளம் காட்டச் சொல்லும்போது மிசாத் தழும்பு என்று கூறி எனது கையில் இருக்கும் தழும்பைக் காட்டுவேன்” என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
போர் தந்த வெற்றி - தோல்விகள்
1999 மே - ஜூலையில் நடைபெற்ற கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்தியது, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. 1999 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த மக்களவைத் தேர்தலில் அக்கூட்டணி மீண்டும் வென்றது.
2009 மே மாதம் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது; தமிழர்கள் கொல்லப்பட்டது போன்றவை காங்கிரஸ், திமுக மீது கடும் விமரிசனத்துக்கு வழிவகுத்தன.
எனினும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதே காலக்கட்டத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
ஆனால், அந்த விமரிசனம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட பின்னர், 2011இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.
2019 பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய பாலாகோட் தாக்குதல் பிரதமர் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது.
அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக 303 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. கேரளத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மேற்காசிய நாடுகளில் வேலை பார்த்துவரும் நிலையில், அம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மேற்காசியப் போர் தாக்கம் செலுத்தும் என்று கருதப்படுகிறது. அது எப்படிப்பட்ட தாக்கம் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in