தவெகவை நோக்கி நகர்ந்த வாக்காளர்கள்!

திமுக - அதிமுகவுக்கு மாற்றாக தவெகவுக்கு மக்கள் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்கள்
தவெகவை நோக்கி நகர்ந்த வாக்காளர்கள்!
Updated on
3 min read

தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிகத் தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

1967-க்குப் பிறகு திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சி மாறி மாறித் தமிழகத்தில் அமைந்த நிலையில், முதல் முறையாக மூன்றாவதாக ஒரு கட்சிக்குத் தமிழக மக்கள் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்கள். இதன்மூலம் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

பதினேழாவது சட்டமன்றத்தை அமைப்பதற்காகத் தமிழகத்தில் ஏப்ரல் 23இல் நடைபெற்ற தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாயின. இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் இடையே நான்கு முனைப் போட்டி நிலவியது.

ஆளும் திமுக, அதன் கூட்டணிக்குள் ஏற்கெனவே இருந்த கட்சிகளோடு புதிய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்துப் பரப்புரை மேற்கொண்டது.

அதிமுகவும் தங்கள் கூட்டணியைப் புதுப்பித்துக்கொண்டதோடு, 2011-21 காலத்தில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களைப் பரப்புரையில் முன்வைத்தது.

தவறான கணிப்புகள்

தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவியிருந்தாலும், திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே நேரடியான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு முந்தைய, வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணித்தன. அதிமுகவுக்குச் சாதகமாகவும் கணிப்புகள் வெளியாயின.

புதிய வரவான தவெக குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறும் என்றே கணிப்புகள் சுட்டிக்காட்டின. ஆனால், பெரும்பாலான கணிப்புகள் பொய்த்துப் போயிருப்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது முதலே தமிழகத்தில் எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட தவெக நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. மாறாக, கடந்த காலத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் போட்டியில் இருந்த திமுக - அதிமுக இடையே இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில்தான் போட்டி நிலவியது.

இதன்மூலம் தமிழகத்தை 1967-க்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலைமையில் அமைந்த கூட்டணிகள் முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளன.

இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாகத் தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்கிற சூழல் இருந்தது, அது தற்போது மாறியிருப்பதை மக்களின் தீர்ப்பு உணர்த்துகிறது.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக மூன்று பொதுத் தேர்தல்களில் திமுக வெற்றிபெற்றது. தற்போது ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு திமுக தோல்வியைத் தழுவியுள்ளது.

இதன்மூலம் 1971-க்குப் பிறகு திமுக தொடர்ச்சியாக ஆட்சிக்கு வர முடியாது என்கிற எதிர்மறையான நிலைமை இத்தேர்தலிலும் தொடர்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெற்றி பெறுவதற்குத் தடுமாறிவரும் அதிமுக, இத்தேர்தலிலும் தோல்வியடைந்ததன் மூலம் 2019, 2021, 2024ஐ தொடர்ந்து இப்போதும் பெரும் பின்னடைவையே சந்தித்திருக்கிறது.

இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளில் இருந்து கணிசமான வாக்குகளைப் பெற்றதன் மூலம், காலங்காலமாக அபிமானக் கட்சிக்கே தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்கிற தோற்றமும் மாறியிருக்கிறது. அத்துடன், இரண்டு திராவிடக் கட்சிகளும் தவெகவைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டனவோ என்கிற கேள்வியும் எழுகிறது.

எதிர்பாராத வெற்றி

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சியோ, கூட்டணியோ அறுதிப் பெரும்பான்மையைப் பெறாமல் இருந்ததில்லை.

முதல் முறையாக தமிழகத்தில் எக்கட்சிக்கும் / கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் தவெக அறுதிப் பெரும்பான்மைக்கான எண்ணிக்கைக்கு நெருக்கத்தில் இருக்கிறது.

ஆட்சியமைக்கப் போதுமான எண்ணிக்கையைப் பெறுவதில் மற்ற கட்சிகளின் ஆதரவு இக்கட்சிக்குத் தேவைப்படலாம். சிறிய கட்சிகளின் ஆதரவு மூலம் அது சாத்தியப்படக்கூடும். அதேநேரத்தில், குதிரைப் பேரத்துக்கு வித்திடாமல் ஆட்சி அமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் 2024இல் தொடங்கப்பட்ட ஒரு கட்சி இரண்டே ஆண்டுகளில் இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்துத் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. 1972இல் அதிமுக என்கிற புதிய கட்சியைத் தொடங்கி, 1977இல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். 20 ஆண்டுகள் திமுகவில் பயணித்தவர்.

திரைப் பிரபலம் என்கிற பிம்பம் விஜய்க்கு இருந்தாலும், அரசியல் பின்புலம் ஏதும் இல்லாமல் இரண்டு ஆண்டுகளில் ஒருவரால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது பழைய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்றே பொருள்.

தேர்தலுக்கு முன்னர் தவெகவுக்கு வாக்களிப்பவர்கள் பற்றிச் சமூக ஊடகங்களில் எதிர்மறையாகப் பகடி செய்யப்பட்டது. வாக்கு அரசியலில் வெற்றி பெறுவது யாராக இருந்தாலும், நேரடியாகத் தேர்தலில் பங்கேற்கும் மக்களாட்சி ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்பதே நிதர்சனம். அதைத் தமிழக வாக்காளர்களும் உணர்த்தியிருக்கிறார்கள்.

புதுவையில் தக்கவைப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.

2006-க்குப் பிறகு புதுச்சேரியில் இரு கட்சிகளின் ஆட்சி மாறி மாறி நடைபெற்றுவந்தது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே கட்சி / கூட்டணி ஆட்சிக்கு வந்திருப்பதன் மூலம் பழைய முறைக்கு புதுச்சேரி திரும்பியிருக்கிறது.

இத்தேர்தலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் பேசுபொருளாக அமைந்தாலும், எளிமையான முதல்வர், இரட்டை இன்ஜின் சர்க்கார் என்கிற கோஷங்களுக்கு புதுச்சேரி மக்கள் மீண்டும் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்கள்.

போட்டி போட்டுக்கொண்டு என்.டி.ஏ. - காங்கிரஸ், திமுக கூட்டணி வாக்குறுதிகள் அளித்திருந்தாலும், நீண்ட காலம் முதல்வராக இருந்திருக்கும் என்.ரங்கசாமியின் தனிப்பட்ட செல்வாக்கு என்.டி.ஏ. கூட்டணிக்கு உதவியிருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைவதில் கடைசிவரை நீடித்த குழப்பம் உள்ளிட்ட பிரச்சினைகள் இக்கூட்டணிக்குப் பாதகமாக அமைந்துவிட்டதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

மேலும் தமிழகம் போல் அல்லாமல் புதுச்சேரியில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தவெக, அங்கும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. தொடர்ச்சியாக ஒரு கட்சி / கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது, அதன் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு. அதையே புதுச்சேரி வாக்காளர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

தவெகவை நோக்கி நகர்ந்த வாக்காளர்கள்!
யார் இந்த ஜோசப் விஜய்? - தமிழகத்தில் தடம் பதித்த தவெக தலைவரின் பின்புலம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in