

ஐயம் கொள்பவர் அழிவார் என்று ஒரு கருத்து. ஐயம் கொள்பவரே அறிவார் என்று மற்றொரு கருத்து. ஐயம் என்றால் சந்தேகம். பிங்கல நிகண்டு ஐயத்தைக் ‘கடுத்தல்’ என்றும் வழங்குகிறது. ஐயம் பெருவழக்கான சொல்தான். ஆனால் ஐயத்துக்கு நிகர்ச்சொல்லாக நிகண்டு சொல்கிற கடுத்தலை அறிந்ததில்லை. தென்தமிழ்நாட்டில் இன்றும் வழக்கில் இருக்கும் ‘கடுத்தல்’ என்ற சொல்லுக்கு அழுத்தமான வலி என்று பொருள். “ஆத்தை, நல்லாக் கடுக்குது.” கடுக்குமாறு கடிப்பது கட்டெறும்பு.
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியின் முதல்பாட்டு ‘உயர்வுஅற உயர்நலம் உடையவன் எவன்அவன், மயர்வுஅறு மதிநலம் அருளினன் எவன்அவன், அயர்வுஅறும் அமரர்கள் அதிபதி எவன்அவன், துயர்அறு சுடர்அடி தொழுதுஎழுஎன் மனனே’ என்று அமையும். எவன் முழுநலம் நிறைந்தவனோ, எவன் ஐயம்திரிபு இல்லாத அறிவைத் தருகின்றவனோ, எவன் அயர்வையும் சாவு அச்சத்தையும் அறுத்தவர்களுக்குத் தலைவனோ, துயர் அறுக்கும் அவனது சுடர்அடிகளைத் தொழுக.
பொசுக்பொசுக்கென்று வந்தவர் போனவர் கால்களில் விழாமல், அறிவைத் தருகிறவர் கால்களில் மட்டும் விழுக என்று காலடி காட்டுகிறது.
பாட்டில் இடம்பெறும் ‘அருளினன்’ என்கிற சொல்லுக்கு நம்பிள்ளை எழுதிய ஈடு முப்பத்தாறாயிரப்படி உரையில், ‘முலைக்கடுப்பாலே தரையில் பீச்சுவாரைப் போலே அருளிக்கொண்டு’ நிற்பதாக விளக்கம். முலைக்கடுப்பு என்பது பிள்ளைத்தாய்ச்சியருக்குப் பால் கட்டிக்கொள்ளும்போது உண்டாகும் வலி.
அப்போது, பிள்ளை அருந்தாவிட்டாலும், கடுத்தல் தாளாமல் வீணாய்ப்போனாலும் போகட்டும் என்று தானாகவே பீச்சுவர் தாய்மார். அதுபோலவே, அருளை வேண்டுவார் இல்லாவிட்டாலும், தன்னியல்பினாலும், கடுத்தல் தாளாமலும், தானாகவே பீச்சுவார் உயர்நலத்தார். முலைக்கடுப்பைப் போலவே நீர்க்கடுப்பும் சீதக்கடுப்பும்கூட உண்டு.
அழுத்தமான வலியைக் குறிக்கும் ‘கடுத்தல்’ ஐயத்துக்கு ஈடுசொல் ஆனது எப்படி? ஐயமும் அழுத்தமான வலிதான். அறிவில் உணரப்படும் வலி. தெளிவடையும்வரை தேள்கொட்டியதுபோலக் கடுக்கும். தலைவன் தலைவியைப் பார்க்கிறான். அழகி என்றால் பேரழகி. ஐயம் கடுக்கிறது. காதில் குழை அணிந்திருக்கும் இவள் தெய்வமகளோ? மயில் மாதிரி அசைகிறாளே, மயிலோ? மானுடப் பெண்தானோ? ஐயத்தால் மயங்குகிறது நெஞ்சு என்று மறுகுகின்றான்.