

கிரேக்கப் பாவலன் ஈசீயோத் (Hesiod–பொ.ஆ.மு.700), வாரிசுரிமையாக வந்த குடும்பச் சொத்தைத் தம்பி பெர்சிஸ் (Perses) என்பவனோடு மிகச்சரியாகப் பங்கிட்டுக்கொண்டான். மொத்தச் சொத்துக்கும் ஆசைப்பட்ட தம்பி பெர்சிஸ், சொத்து சரியாகப் பிரிக்கப்படவில்லை என்று வழக்கிட்டு, நடுவர்களுக்குக் கையூட்டிக் கூடுதல் சொத்தை அடைந்துகொண்டான்.
அதன் மறுவினையாக ஈசீயோத், ‘உழைப்பும் ஊழிகளும்’ (Works and Days) என்றொரு நெடும்பாட்டு எழுதினான். தம்பிக்கு அண்ணன் எழுதிய அப்பாட்டில் ஊழிகள் ஐந்தாகப் பிரிக்கப்படுகின்றன: பொற்காலம், வெள்ளிக்காலம், வெண்கலக்காலம், வீரக்காலம், இரும்புக்காலம். கல்வி, அஞ்சாமை, புகழ், கொடை ஆகிய நான்கினால் மனிதர்களுக்குப் பெருமிதம் வரும் என்கிறார் தொல்காப்பியர் (தொல்,/பொருள்,/மெய்ப்பாட்டியல்-9).