மரத்தின்மேல் உட்கார்ந்திருந்த வேலனிடம், நாவல்பழம் பறித்துப் போடச் சொன்னாள் தமிழ்க்கிழவி. பதிலுக்கு, ‘அரியது எது?’ என்று விளக்கச் சொன்னான் வேலன்.
கிழவி சொன்னாள்: ‘மானிடராகப் பிறப்பது அரியது; மானிடராகவே பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, பேடு (பால் நடுநிலை) இல்லாமல் பிறப்பது அரியது...’ (ஔவை, தனிப்பாடல் திரட்டு). நிற்க.
ஒருவருக்குப் பேச இயலவில்லை; ஒருவருக்கு நடக்க இயலவில்லை; ஒருவருக்குப் பார்க்க இயலவில்லை; ஒருவருக்குக் கேட்க இயலவில்லை; ஒருவருக்கு முறையாகச் சிந்திக்க இயலவில்லை. இயலாமை கேலி செய்யப்படுகிறது.
இயலாமையைக் கேலி செய்யலாமா என்று இப்போது கேள்வி எழுப்பப்படுகிறது. நியாயம்தான். இயலாமை குற்றமா?
உடல்சார்ந்தும், மனம்சார்ந்தும் மனிதரின் இயல்புநிலை (ability) இன்னது என்று வைத்துக்கொண்டு, அந்த இயல்புநிலையில் மாறுபாடுகள் ஏற்படும்போது, அதனை இயலாமைநிலை (disability) என்று வகைபிரிக்கிறது சமூகம்.
இந்த வகைப்பாட்டினால் இயலாமைநிலையினர் என்று பிரிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உருவாகும் அழுத்தங்கள், மாற்றங்கள், அவர்கள் எதிர்பார்க்கின்ற சமநிலை, நீதி ஆகியவற்றை ஆராய, ‘இயலாமை ஆய்வுத் துறை’ (Critical Disability Studies) என்ற புதிய ஆய்வுத் துறையே உருவாகியிருக்கிறது.
இணைநிலையே முக்கியம்
இயலாமை பற்றிய கேலி ஒருவரைத் துன்புறுத்தும்; ஆளுமையைக் குலைக்கும்; பிற மனிதர்களுடனான இணைநிலையை அழித்து, அவரைக் கீழிறக்கிவைக்கும். ஒருவரது இயலாமையை நோய்நிலையாகக் கருதும் சமூகம், அவர்மீது இரக்கம் காட்டும்.
‘உன்னால் இயலாது; என்னால் இயலும்; உதவட்டுமா?’ என்று சிறுமைப்படுத்தும். இயலாதநிலையினர் எதிர்பார்ப்பது இதுவா? ஒருவேளை அவர்கள் இப்படிச் சொல்லக்கூடும்: ‘நீங்கள் உதவ வேண்டாம்; உங்களிடமிருந்து எங்களை விலக்கிவைக்காமல், உங்களோடு எங்களை இணை வையுங்கள்; இயலாமை என்பது குறையானால், அதன் அடிப்படைக் காரணங்களை ஆராயுங்கள்.’
அவர்கள் எதிர்பார்ப்பது இரக்கத்தை அல்ல, இணைநிலையைத்தான் என்பதை அரசு புரிந்துகொண்டதன் விளைவாகத்தான், இயலாதவர்கள் (disabled) என்ற சொல் களையப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் (differently abled) என்ற சொல் உருவாக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உருவாக்கப்பட்டது; மெரினா கடற்கரைக்குச் செல்ல மரப்பாதை அமைக்கப்பட்டது; நகரப் பேருந்துகளில் தாழ்தளம் அமைக்கப்பட்டது; பிறரோடு தொடர்பாட முடியாமல் தனக்குள்ளே சுருங்கிக்கொண்டவர்களுக்காக ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட்டது; பொதுநடைபாதைகளில் வழிகாட்டும்விதமாக மஞ்சள் கரட்டு ஓடுகள் பதிக்கப்பட்டன.