சண்டையிடப் பயந்தவர்கள்கூட, அதைப் பார்க்க விரும்புவார்கள். சண்டை போட்டால்தானே சட்டை கிழியும்? பார்த்தால் கிழியாது இல்லையா! ஆகவே, சண்டையை ‘இட்டிலர் ஆயினும் பார்க்க, அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.’ சண்டை போடாவிட்டாலும்கூடச் சண்டையைப் பார்ப்பதும் கேட்பதுமே போதுமான வீரம்தான் என்று நம்புகிற சண்டைப் புதுமையருக்காக, ஒரு சண்டையை ஒலியும் ஒளியுமாய்க் காட்டுகிறார் அருணகிரிநாதர்
(திருப்புகழ் 150:5):
ஒன்றென் றென்றும் துன்றும் குன்றம்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடிஎன விழுமெழு படிகளும் அதிர்பட
ஒண்சங் கம்சஞ் சஞ்சஞ் சஞ்சென்று
ஒலிசெய மகபதி துதிசெய அசுரரை, அடுவோனே!
கடகட கடகடவென வாய்விட்டுப் படித்தால், நம் புலன்களுக்குமுன் அந்தச் சண்டை நிகழும். அச்சண்டையைப் போட்டவன் முருகன். வானத்தை முட்டுமாறு உயர எழுந்து, மனிதர்களைக் கடக்க விடாமல் மறித்து நின்றது குருகுமலையின் மீது சினம்கொண்ட குறிஞ்சித் தலைவன் முருகன், தன் கைவேலை எடுத்து வீசினான்.
டுண்டுண் டிண்டிண் என்று ஒலி எழுமாறு மோதிய வேல், மலையைத் துளைத்துப் பிளந்துவிட்டது. கிடுகிடுத்தது உலகு. சஞ்சஞ்சங்கென்று முழங்கியது சங்கு. நெஞ்சில் உரமும்இன்றிச் சண்டைத் திறமும்இன்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தேவர்களும் இந்திரனும் சண்டைவீரன் முருகனை வந்தனை செய்தார்கள். வெற்றிவேல் வீரவேல்.
உக்கிர வீரன்
ஏறிக்கடப்பார் எவருமே இல்லை என்று வடக்கில் இறுமாந்துகிடந்த மேருமலைமீது ஏறி, அதனைச் செண்டால் அடித்தான் உக்கிரப் பாண்டியன் என்று மேருவைச் செண்டால் அடித்த படலத்தில் தொன்மக்கதை சொல்கிறது திருவிளையாடல் புராணம். உக்கிரப் பாண்டியனாக வந்தவனும் முருகன்தான் என்பது நம்பிக்கை.