விசயநகரமான ஹம்பிக்கு உலாப் போயிருந்தோம். ஒரு காலத்தில் அது வெற்றித் திருநகர். கோயில்களாலும் சிற்பங்களாலும் ஆன கலைக்கூடம். ஒவ்வொரு மன்னரும் தங்கள் பெருமையை நிறுவச் செதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.
வெற்றித் திருநகரைத் தோற்கடித்தவர்களோ, அந்தப் பெருமையைக் குலைக்க, எல்லாவற்றையும் உடைத்தும் சிதைத்தும் குவித்திருக்கிறார்கள். சிதைந்தவற்றை எடுத்து அடுக்கி, இயன்றவரை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது தொல்லியல் துறை.
அளவிலாப் பண்டங்கள்
வெற்றித் திருநகரின் ஒவ்வொரு கோயிலுக்கு முன்பாகவும் நேரும் சீருமாக ஒரு கடைவீதி அமைக்கப்பட்டிருக்கிறது. விரூபாட்சர் கோயில் கடைவீதி, கிருஷ்ணர் கோயில் கடைவீதி, விட்டலர் கோயில் கடைவீதி, அச்சுதராயர் கடைவீதி. எல்லாமே கல்தளங்கள், கல்தூண்கள், கல்கூரைகளால் ஆனவை. சில ஒற்றைத் தளங்கள்; சில இரட்டைத் தளங்கள்.
இப்போது வெறும் கல் அடுக்குகளாக எஞ்சியிருக்கும் அந்தக் கடைவீதிகள் தங்கள் பெருவாழ்வுக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்? காவிரிப்பூம்பட்டினத்தை முன்வைத்து, ஒரு பெருநகரக் கடைவீதியின் உயிர்ப்பைப் பட்டினப்பாலை பதிவு செய்திருக்கிறது. துங்கபத்திரைக் கரையோரம் இருக்கும் ஹம்பிக்காவது பார்த்துத் தெரிந்துகொள்ள மிச்சம் மீதி இருக்கிறது.
காவிரிக் கரையோரம் இருந்து, கடலுக்குள் காணாமலே போய்விட்ட காவிரிப்பூம்பட்டினத்துக்கோ, பட்டினப்பாலைப் பதிவு மட்டும்தான் இருக்கிறது. காவிரிப்பூம்பட்டினக் கடைவீதிக்கு, வணிகப் பொருள்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் வந்து குவிந்தன.
கடல்வழியாகக் குதிரைகள், தரைவழியாக மிளகு மூடைகள், வடமலையில் இருந்து மணியும் பொன்னும், குடகுமலையில் இருந்து சந்தனம், பாண்டிநாட்டுத் தென்கடல் முத்து, சோழநாட்டுக் கீழ்க்கடல் பவளம், கங்கை வெளியிலும் காவிரி வெளியிலும் விளைந்தவை, ஈழத்தில் இருந்தும், காழகம் என்கிற பர்மாவில் இருந்தும் வந்தவை - இப்படிப் பல பண்டங்கள் அளக்க முடியாத அளவில் குவிந்திருக்கின்றன.