சங்கப் புலவர் பேரெயில் முறுவலார் பெண்பால் புலவராகவே இருக்க வேண்டும் என்கிறது ஓர் இணையக் களஞ்சியம். ஏனென்றால் புன்முறுவல் பெண்கள் வழக்கம் என்கிறது தரப்படும் விளக்கம். பெண்களாயினும் ஆண்களாயினும், புன்சிரிப்பும் பெருஞ்சிரிப்பும் மனநிலை சார்ந்ததா, சமூகம் பழக்கியபடி நடிக்கிற நம் பால்நிலை சார்ந்ததா? பெருஞ்சிரிப்பு என்ன பெண்களுக்குப் புறம்பா? திருமணத்துக்குக் காலம்கடத்துகிற தலைவனிடம் உர்ரென்று இருக்கிறாள் தலைவி. ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையில் இட்டதெல்லாம் மறந்துவிட்டதா?’ என்கிறான் தலைவன்.
தலைவி கடுகடுக்கிறாள்: ‘பாறையைக் குத்திய யானையின் தந்தங்கள் ஒடிவதுபோல, உன்னிடம் சிரித்த என் வெண்பற்கள் உடைந்துபோகட்டும்.’ (குறுந்.169). கலங்கிப்போயிருக்கும் தலைவியிடம் தோழி சொல்கிறாள்: ‘ஈறு தெரிவது மாதிரி சிரித்துக்கொண்டு தலைவனோடு இன்பமாகத் திரிந்தாயே, அதெல்லாம் இயல்பைத் தொலைத்துத் துன்பப்படுவதற்குத்தானா?’ (குறுந்.381).
புத்தரின் கண்டனம்
பெண்கள் புன்முறுவலாக மட்டும் அல்லாமல் சிரிப்பாணியாகவும் சிரித்திருக்கிறார்கள். ‘அதுதான் கோளாறு. சிரித்ததனால் பாஞ்சாலி பட்ட பாடு தெரியுமில்லையா?’ என்று பொதுச்சமூகம் பாடம் சமைத்துப் பெண்களுக்குப் புகட்டும். ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’, ‘செல்லம் சிரிப்பாணி, சீரங்கத்துக் குந்தாணி’ என்று பழமொழிகள் கட்டும்.
புன்முறுவல் என்ன ஆண்களுக்குப் புறம்பா? கூத்தப்பெருமானின் கொவ்வைச் செவ்வாய்க் குமிழ்சிரிப்பும் புத்தர் பெருமானின் கடைவாய்க் குமிழ்சிரிப்பும் புன்முறுவல்கள்தாம். பெருஞ்சிரிப்பின் மேல் புத்தருக்குக் கண்டனமே இருந்திருக்கிறது. புத்தரின் உரைத் தொகுப்பான அங்குத்தர நிகாயம் (3.107),
‘...பல் தெரியும் மிகைச்சிரிப்பு சிறுபிள்ளைத்தனம்... புன்முறுவலே போதுமானது’ என்கிறது. ‘உலகம் எரிந்துகொண்டிருக்கும்போது என்ன சிரிப்பும் களியாட்டமும்? இருளால் மூடப்பட்டிருக்கும்போது வெளிச்சத்தை அல்லவா தேட வேண்டும்?’ என்று தம்மபதத்திலும் (146) அறிவுரைக்கிறார் புத்தர். துன்பத்தைக் கடந்துவிட்டவர் முறுவலிக்க வேண்டியதுதான்.
ஆனால் துன்பத்தில் தோய்ந்திருக்கிறவர், அதைக் கடக்கிற வேலையைச் செய்யாமல் சிரிக்கிற வேலையை எப்படிச் செய்ய முடியும்? பெண்களை மட்டும் சிரிக்க வேண்டாம் என்று சொன்ன பொதுச்சமூகத்தின் அறிவுரைக்கும் நிலைமை புரியாத யாருமே சிரிக்க வேண்டாம் என்று சொன்ன புத்தரின் அறிவுரைக்கும் எவ்வளவு வேறுபாடுகள்.