ரகு ராய், இந்தியாவின் உயிரையும் வாழ்வையும் படம்பிடித்த, புகழ்பெற்ற நிழற்படக்காரர். 1971இல் வங்கதேச விடுதலைப் போரை, அகதிகளின் வாழ்வை, 1977இல் நெருக்கடிநிலைக் கால அடக்குமுறைகளை, அதிகாரத்தின் முறைகேடுகளை, 1984இல் போபால் நச்சுவளிக் கசிவின் அவலத்தை, இறப்புகளை, அதிகாரத் தருணங்களில் உறைந்த அரசியல் தலைவர்களை, வாழ்வை மட்டுமே வேண்டுகிற எளிய தருணங்களில் உறைந்த மக்களைப் படம்பிடித்தவர்.
அவருக்கு ஒரு கொள்கை இருந்தது: ‘நிழற்படங்கள், அவற்றின் சீர்மையினால், சட்டக அழகினால், ஒளி அமைப்பினால், வண்ணக் கலப்பினால் புகழ்பெறுவதில்லை; அவற்றில் உறைந்திருக்கும் வாழ்வின் துளிகளாலும் உண்மையினாலுமே புகழ்பெறுகின்றன’.
போபாலில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சுவளிக் கசிவினால் இறந்துபோன பெண்குழந்தையை யாரோ ஒருவர் புதைக்கிறார். உடலை மண் மூடியிருக்க, முகம் மட்டும் திறந்திருக்கிறது.
உயிர்அற்ற அந்த முகத்தில், பார்த்த விழி பார்த்தபடி உறைந்திருக்க, மண் பூத்த அந்தத் தருணத்தைக் கண்ணீரே சாட்சியாய்க் காட்சிப்படுத்தியவர் ரகு ராய். கண்ணால் காணும் அவரது படங்கள், காதோடும் பேசும். ரகு ராய் அண்மையில் காலமாகிவிட்டார். அவர் புகழ் வாழ்க.
சொல்லாட்டப் பெருஞ்சித்திரன்
பெருஞ்சித்திரனார் என்கிற சங்கப்புலவர், வறுமையின் நிறம் தெரியுமாறு சொற்களால் சித்திரம் தீட்டியவர்; பாட்டைப் படித்தாலே வயிற்றைப் பசிக்குமாறு வறுமையைச் சித்திரமாக்கியதால்தான் அவர் பெருஞ்சித்திரனார். அவரது பாடல்கள் அழகியலுக்காகப் புகழ்பெற்றவை அல்ல; படிக்கும்போது முகத்தில் அறையும் வறுமைக்காகவும், அவற்றில் உறைந்திருக்கும் வாழ்வின் துளிகளுக்காகவும் புகழ்பெற்றவை.
ஒலியாக எழும் அவரது பாடல்கள், காட்சியாகவும் கண்முன் எழும். ரகு ராய் நிழலாட்டப் பெருஞ்சித்திரன் என்றால், புலவரோ சொல்லாட்டப் பெருஞ்சித்திரன். பெருஞ்சித்திரனார் சொற்களால் தீட்டிய வறுமைச் சித்திரம் இது: இன்னும் சாவு வருகுதில்லையே என்று நாள்களை எண்ணிக்கொண்டும் வாராத சாவை வைதுகொண்டும் வேண்டாவெறுப்பாக வாழ்கிற வயதான தாய்; ஊன்றுகோலோடு சேர்த்து அவளுக்கு மூன்று கால்கள்; நூல்இழைகளைத் தொங்கவிட்டது போலச் சுருங்கிப்போன கன்னங்களில் ஏராளமான கோடுகள்; புரைவிழுந்த கண்களோடு அவளால் முற்றத்துக்குக்கூடப் போக முடியாது.