இன்றிருக்கும் மனித வகைக்கு ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (Homo sapiens) என்று இடைக்கால ஐரோப்பாவில் பெயர் சூட்டப்பட்டது. எந்த ஒன்றையும் யார் எப்படிக் கண்டறிந்து, எந்த மொழியில் வெளிப்படுத்தினாலும், அதற்குப் பெயரிடுவதற்கு என்றே வேறு தனிச் செம்மொழிகள் வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொன்று. ஐரோப்பாவில் அது இலத்தீனம். அதன்படி இன்றைய மனிதர்களுக்கு வைக்கப்பட்ட இலத்தீனப் பெயர் ஹோமோ சேப்பியன்.
ஹோமோ-மனிதர்; சேப்பியன்-அறிவுள்ளவர்கள். ஹோமோ சேப்பியன் - அறிவுள்ள / சிந்திக்கிற மனிதர்கள். ‘உயிரி வகைப்பாட்டியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஸ்வீடன் அறிவியலாளர் கார்ல் லினேயஸ் 1758இல் இந்த இலத்தீனப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.
சிந்தனையின் வலிமை
அறிவு என்ன மனிதர்களுக்கு மட்டுமான மொத்தக் குத்தகையா என்கிற கேள்வியும் சிந்திக்கும் மனிதர்களால் பின்னாளில் எழுப்பப்பட்டது.
மனிதர்கள் உயிரி வகையாகவேதான் இருக்க வேண்டுமா, உயிரி-அல்லாத மனிதர் (non-biological humans) தோன்ற முடியாதா, உணர்வு-இல்லாத மனிதர் (non-conscious humans) உருவாக முடியாதா - இதுபோன்ற செய்யறிவுக் கேள்விகளும், அவ்வாறு தோன்றினால், இன்றிருக்கும் உயிர்-உணர்வு-மனித இனம் அன்றும் இருக்குமா என்கிற கேள்விகளும் இப்போது சிந்திக்கப்படுகின்றன. நிற்க.
மனிதப் பேரினத்துக்குள் அடங்குவதாகச் ‘சிந்திக்கத் தெரிந்தவர்’ என்கிற சிற்றினமும், அதனுள் அடங்குவதாக வருணம், சாதி, உள்ளார்-இல்லார் போன்ற குற்றினங்களும் உருவாகிவிட்டன. ‘இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்’ என்று ஔவைகூட ஒரு வகைமுறையை முயன்று பார்க்கிறாள்.
இத்தகைய குற்றின வகைமைகளில் மற்றொன்று ‘ஹோமோ ஃபிலசாஃபிகஸ்’ (Homo philosophicus). மெய்-இயல்-மனிதர். யார் அவர்? மெய்யைத் தேடுகிறவரா? மெய் என்று சொல்லப்படுகின்றவற்றை ஐயப்படுகிறவர். அவற்றால் ஏற்கப்பட்டவற்றைவிட, மறுக்கப்பட்டவற்றை, விடுபாடுகளை, ஒதுக்கப்பட்டவற்றைத் தேடுகிறவர்.
வீதிகளில் சுற்றிவந்து நிலைகுத்திவிடுகிற தேர்போல, ஏதோ சில உண்மைகளைக் கண்டறிந்து, அத்தோடு காரியம் முடிந்தது என்று அந்த உண்மைகளையே தொழுதுகொண்டு நிலைகுத்திவிடுகிற இயல்பில்லை ஒரு மெய்-இயல்-மனிதரின் இயல்பு. ஓடிக்கொண்டே இருக்கிற உலகத்தைப் போலத் தேடிக்கொண்டே இருக்கிற இயல்பு அவருடையது.
நிலையில்லாமல் இடங்களை மாற்றிக்கொண்டே இருக்கிற நாடோடிபோல, மெய்-இயலாளர் ஓர் அறிவோடி. அறிவுநிலைகளை, இதுவரையிலான உண்மைகளைப் புதிய பொருள்கோள் முறைகளால் மறித்து மாற்றிக்கொண்டே இருப்பார்.