சென்னையின் அறியப்படாத முகங்கள் | சென்னை 387

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய பொருளாதார, அரசியலால் தோன்றிய மாநகரம் இது
சென்னையின் அறியப்படாத முகங்கள் | சென்னை 387
Updated on
3 min read

சென்னை நாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்த மாநகரம் உருவான கதையையும் சற்றே திரும்பிப் பார்க்கலாம். ஆங்கிலேயர்கள், செங்கல்பட்டு நாயக் வழியாக சந்திரகிரி ராஜாவிடம் 1639இல் ஒரு நிலத்தை வாங்கினர்.

தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் அமைந்துள்ள இடம் அது. எட்டு மூலக்கோண வட்டக் கோட்டையையும், வடக்கிலும் தெற்கிலும் மூன்று தெருக்களில் செங்கற்களால், இரண்டடுக்கு மெத்தை வீடுகளையும், இதைச் சுற்றிலும் தோட்டத்தையும் 1640இல் உருவாக்கினர். இது வெள்ளையர் நகரம் எனப்பட்டது.

தங்களின் தேவைகளுக்காக அருகில் பிறரும் வசிப்பதை வெள்ளையர் ஊக்குவித்ததால் இந்தியர், போர்த்துகீசியர், ஆர்மீனியர்களின் வசிப்பிடம் 1700களில் உருவானது. 2.5 கி.மீ. சுற்றளவில் 17 அடி கனத்திலான செங்கல் சுவர் சதுரவடிவில் கட்டப்பட்டது.

இங்கு குடிசைகளும் நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளும் இருந்தன. தெருக்கள் அகலமாக அமைக்கப்பட்டன. மரங்களும் வளர்க்கப்பட்டன. இதை உள்ளூர்வாசிகள் ‘சின்னப்பட்ணம்’ என்றும், ஆங்கிலேயர்கள் ‘கறுப்பர் நகரம்’ என்றும் அழைத்தனர்.

1714இல் ‘மதறாஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த இரண்டு நகரங்களின் ஒருபுறம் கடலும், மற்றொருபுறம் நதியும் இருந்தன. ஆங்கிலேயர்களின் வியாபாரப் பொருளாதார நலனுக்காக உருவாக்கப்பட்ட இச்சிறு பகுதிதான் ‘சென்னைப் பட்டணம்’.

திருவல்லிக்கேணியை 1658ஆம் ஆண்டிலும், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூரை 1693ஆம் ஆண்டிலும் வாங்கிய ஆங்கிலேயர்கள் பிற நிலப்பரப்புகளைப் படையெடுப்புகளால் ஆக்கிரமித்தனர்.

குவிமைய ஈர்ப்பு

வெவ்வேறு மொழிகளைப் பேசுவோரையும் ஆயிரக்கணக்கான கி.மீ. நிலப்பரப்பையும் நிர்வகிக்கும் அதிகாரக் குவிமையமாக உருவெடுத்தது சென்னை.

நில, நீர்வழிப் போக்குவரத்து உருவாக்கத்தாலும் ஏற்றுமதி, இறக்குமதியாலும் சென்னை துறைமுகமாகியது. டிராம் வண்டிகள் மணிக்கு 1.5 கி.மீ. வேகத்தில் சென்றன. கடற்கரையின் வடகோடியில், பொது அஞ்சல் அலுவலகம் 1884 மே 1அன்று கட்டப்பட்டது; 33 கிளைகளும், 120 அஞ்சல் பெட்டிகளும் இருந்தன.

துணி, கண்ணாடி, சோப்பு, அலுமினியம் போன்றவற்றை உற்பத்திசெய்யும் ஆலைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. இதையடுத்து, ஜமீன்தார்களும் பணக்காரர்களும் சென்னையில் குடியேறினர்.

இவர்கள் நாடகங்களைக் காணக் கூடினர்; கலைஞர்கள் புரசைவாக்கத்தில் தங்கினர். பொருட்காட்சிகளும் வேடிக்கைகளும் நிகழ்ந்தன. 1903 டிசம்பரில் சென்னைப் பொதுஜன தோட்ட வேடிக்கையைக் (The Peoples’s Park Fair) கூட்டம் கூட்டமாகக் கண்டனர்.

‘வீட்டிலேயே பல நாள்களாய் அடைந்து இருக்கின்ற பெண்களுக்கு ஒரு நாழிகையேனும் (24 நிமிடங்கள்) உலகத்தைக் காண்பதற்கு இவ்வேடிக்கை காரணமாக இருந்தது’ என ஒரு பத்திரிகை 1904 ஜனவரியில் எழுதியது.

விக்டோரியா பப்ளிக் ஹாலில் 1913 ஜூலை 29 இரவு 9.30 மணிக்கு, ஆப்ரிக்காவிலிருந்து வந்து டி.கே.கான் நிகழ்த்திய மாய வித்தைகளைக் காணப் பெருங்கூட்டம் கூடியது.

இதைக் காண்பதற்கு 1ஆவது, 2ஆவது, 3ஆவது வகுப்புகளுக்கு முறையே ரூ.3, ரூ.2, ரூ.1 எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இவை சென்னையில் வர்க்கப் பாகுபாடும் தோன்றியதைக் காட்டுகின்றன.

சென்னையில், ‘ஹிந்து, முகமதிய மக்களுக்கென உருவாக்கப்பட்ட விக்டோரியா காஸ்ட் அண்டு கோஷா மருத்துவமனை’யில் 1901இல் எட்டு மாதங்களில் சைதாப்பேட்டை, கும்பகோணம், திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 112 பேர் சிகிச்சை பெற்றனர். அனைத்துச் சாதியினரும் தத்தம் சமூக மாணவர்கள் கல்வி பயில்வதற்காக ஜார்ஜ் டவுனில் விடுதிகள் கட்டினர்.

‘சென்னையில் தொழில் செய்து ஒவ்வொரு சாதியினரும் பணக்காரர்கள் ஆவதால், நாமும் அவ்வாறு செய்ய வேண்டும்; இதில் வெற்றியடைந்த பின்னர் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்’ என ஒரு சாதியினர் 1914இல் தீர்மானித்தனர்.

‘சென்னையில் நாம் எவ்வித வசதிகளையும் செய்யாமலிருந்தது, நம் சாதிக்கே பெருங்குறையாகும். இச்சென்னையிலும் நம் குலத்தவரால் பள்ளிக்கூடம், தங்குமிடம், வியாபாரம், பத்திரிகை முதலான அவசியமானவற்றை உருவாக்கினால், நம் சாதியினர் உள்ள இடங்களில் நன்மை விளையும்’ என 1910களில் ஒரு சாதியினர் முடிவுசெய்தனர்.

அவர்களில் 500 குடும்பத்தினர் சாதிச் சங்கத்தை ஏற்படுத்தினர். இவ்வாறு சென்னைக்கு ஒவ்வொரு சாதியினரும் மதத்தினரும் மொழியினரும் வந்துசேர்ந்தனர்.

அரசியல், சமூக, மத இயக்கங்களும் சென்னையில் வலுவடைந்தன. சிந்தாதிரிப் பேட்டையில் 1877இல், ‘வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இருக்கும் ஒத்துமைப் பேதகங்கள்’ என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார்.

அன்றைய பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருந்த கோட்டையில் 1906 செப்டம்பரில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அறிஞர்களும் வியாபாரிகளும் சுதேசியம், தீபாவளி நன்கொடை தொடர்பாக உரையாற்றினர்.

இதில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாகக் கலந்துகொண்டனர். அரசாங்க, ஆசாரச் சீர்திருத்தங்கள், மகளிர், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றச் சபைகளாலும், மது ஒழிப்பு, ‘தியசாபிகல் சொசைட்டி’ போன்றவற்றின் மாநாடுகளாலும் சென்னை பரபரப்பாகவும் இரைச்சலாகவும் இருந்ததாக 1908இல் ஒரு பத்திரிகை எழுதியது.

முதல் உலகப் போரின்போது ஜெர்மானியக் கப்பல் எம்டன், 1914 செப்டம்பர் 22 இரவு 9.40க்குத் துறைமுகத்துக்குத் தென்கிழக்குக் கடலில் தோன்றி, பீரங்கிக் குண்டுகளை வீசியது.

அவை சூளை, வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் விழுந்தன. பேரச்சத்தில் மக்கள் சென்னையைவிட்டு வெளியேறினர். நெருக்கடியைச் சமாளிக்கப் புறநகரான சைதாப்பேட்டையில் மக்களை அரசு குடியேற வைத்தது.

இழந்தவை திரும்புமா?

இம்மாற்றங்கள் நிகழ்ந்தபோது சென்னையின் இயற்கை வளங்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் (1860-1920) வர்ணிக்கப்பட்டுள்ளன. 1920களில் ஈக்காட்டுத்தாங்கலுக்கு மேற்கே மலைபோல் வளர்ந்த காடுகள் இருந்தன.

அக்காட்டுக்குள் குறவர்கள் 20 குடிசைகளில் வசித்தனர். கூரைகளைச் சுரைக்கொடிகள் மூடியிருந்தன. மூங்கில் கூடைகள் பின்னுதலும், கருவேப்பிலை சேகரித்தலும் அவர்களது தொழில். கீழ்ப்பாக்கம் வாடகை பங்களாவில் 1915இல் இயங்கிய மாதர் கிறிஸ்துவக் கல்லூரி மருதாணி வேலியால் சூழப்பட்டிருந்தது.

இது பங்களா, வீடுகளுக்குத் தனியாகச் சுற்றுச்சுவர் கட்டும் வழக்கம் இல்லாததைக் காட்டுகிறது. இக்கல்லூரி நிரந்தரக் கட்டிடத்தில் செயல்பட்டபோது, அதன் இயற்கை அழகை அங்கு பணியாற்றிய நீலாம்பாள் ஒரு பத்திரிகையில் 1917 ஜூலையில் எழுதினார்.

‘ஆங்கிலேயர்களின் செளகரிய காதலாற் கொண்ட நுங்கைபாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரியின் அருகில் நிசப்தமாய் ஓடி, கடலில் சேரும் கூவம் நதியில் மீன்களைப் பிடிக்க ஆடவர் உல்லாசமாகத் திரிவர்.

கல்லூரியில் மரகதம் போன்ற பசும்புற்களும், கோரமாய் அடர்ந்துள்ள மா, வில்வம், வேம்பு, அரசு, பூவரசு, கொன்னை, புன்னை, வாழை, பருமூங்கில் முதலியனவும், ரோஜா, சூரியகாந்தி, கேந்தி, சிவந்திப் பூக்கள் நிறைந்திருக்க தேனீக்களின் ரீங்காரமும், புல்வெளியில் ஆடு, மாடுகள் தழைகுழைகளை அனுதினமும் மேய்ந்து அந்திப்பொழுதில் செல்வதையும் காணலாம்.

மூன்றாவது மெத்தையிலிருந்து பார்த்தால் தொலைதூரத்தில் வளர்ந்திருக்கும் மரங்களும், புகைவண்டி ஓடும் காட்சியும், பரங்கிமலையின் மாட்சிமையும் கண்களைக் கவரச் செய்யும்’ என அதில் வர்ணித்துள்ளார்.

‘திரிசூலம் மலைமீது நின்று பார்த்தபோது, சென்னைக் கடலில் நீராவிக் கப்பலும், கலங்கரை விளக்கமும் கண்களுக்குப் புலனாகின’ எனத் திருவரங்க நீலாம்பிகை ஒரு பத்திரிகையில் 1939இல் வியந்து எழுதினார்.

கோடையிலும் சென்னையில் தண்ணீர் செழிப்பாக இருந்ததை அன்றைக்கு வெளியான செய்திகள் காட்டுகின்றன. ஆறுகள், தாங்கல்கள், தடாகங்கள், தோப்புகள், மான்கள், பூனைகள், பன்றிகள், நரிகளும் சென்னையில் இருந்தன.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய பொருளாதார, அரசியலால் தோன்றிய சென்னை பெருநகரமாக மாறியதால், அக்காலச் செழுமையான இயற்கை வளங்களை வார்த்தைகளில்தான் இன்றைக்குக் காண முடிகிறது. இழந்தவற்றை இனி மீட்க இயலுமா?

- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com

சென்னையின் அறியப்படாத முகங்கள் | சென்னை 387
பன்முகத்தன்மையே சென்னையின் பலம் - ரோஜா முத்தையா நூலக இயக்குநர் க.சுந்தர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in