மத்திய-மாநில உறவு: குழுக்கள் பரிந்துரைப்பது என்ன?

தேசிய இறையாண்மையை மாநில உரிமைகளோடு இசைவிப்பதுதான் கூட்டாட்சிக் கோட்பாடு
மத்திய-மாநில உறவு: குழுக்கள் பரிந்துரைப்பது என்ன?
Updated on
3 min read

மத்திய - மாநில உறவு குறித்து ஆராய்வதற்காக இதுவரை பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்தியக் கூட்டாட்சிக் கட்டமைப்பை மறுசீரமைக்கவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைத் தமிழ்நாடு அரசு ஏப்ரல் 2025இல் அமைத்திருந்த நிலையில், தனது முதல் தொகுதி அறிக்கையை பிப்ரவரி 2026இல் தமிழக அரசிடம் அக்குழு சமர்ப்பித்தது.

நீக்கங்கள், சேர்க்கைகளோடு ஏறத்தாழ 54 அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள், ஏழு சட்டத் திருத்தங்கள், புதுச் சட்டங்கள், ஒரு புது அட்டவணை ஆகியவை மத்திய – மாநில உறவு பற்றிய குரியன் ஜோசப் குழு அறிக்கையின் முதல் பகுதி பரிந்துரைகள்.

இக்குழு, தன் சிந்தனைக்கு - கூட்டாட்சிக் கோட்பாட்டின் சம்பிரதாயமானவற்றோடு வேறு இரண்டு அடிப்படைகளையும் காட்டுகிறது: இன்றைய இந்தியா 1950களில் இருந்திருந்தால் நம் அரசமைப்புச் சட்டத்தின் போக்கே வேறாக இருந்திருக்கும் என்பது முதலாவது அடிப்படை.

தேசப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த அச்சத்தால் ஒற்றை அரசுக்கான அம்சங்கள் அரசமைப்புச் சட்டத்தில் தூக்கலாகிவிட்டன. அறிக்கைக்கு இவ்வகைச் சிந்தனை அடிப்படையாவதால் மலைக்கவைக்கும் எண்ணிக்கையிலான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை அதுவே நியாயப்படுத்திக்கொள்கிறது.

மறுமுனைக்கு நகர்வு

நம் அரசமைப்புச் சட்டத்தின் வரலாற்றை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளும் வழக்கத்துக்கு இந்தக் குழுவும் விலக்கல்ல. இதுபற்றி 1967 மே, 13 ‘ஸ்வராஜ்யா’ இதழில் கே.சந்தானம் எழுதியிருந்தார். அதில், ‘1946இல், நாட்டின் தற்காப்பு, வெளி உறவு, தொலைத்தொடர்பு, இவற்றின் துணைப் பணிகள் - இந்த வரம்புக்குள்ளேயே மத்திய அரசு செயல்படலாம் என்கிற நோக்கத்தோடுதான் அரசமைப்பு நிர்ணய அவை தொடங்கியது.

பிரிவினை தவிர்க்க முடியாது என்று ஆகி, பாகிஸ்தான் பிரிந்துபோக அனுமதித்தபோது, அரசமைப்பு நிர்ணய அவையின் உணர்வு எதிர்முனைக்குச் சென்றது. அது ஒற்றை அரசு முறையைக் கோராவிட்டாலும், பெரும் வலுவுள்ள மத்திய அரசுக்கான கோரிக்கைகள் எழுந்தன. இறுதியாக, இன்றைய அரசமைப்புச் சட்டம் உருவானது. இது கூட்டாட்சி அமைப்பு’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி, அதீத வலுவுள்ள மத்திய அரசு என்பதிலிருந்து, இறுதியாகக் கூட்டாட்சி என்கிற மறுமுனைக்கு அரசியல் நிர்ணய அவை நகர்ந்தது.

குரியன் குழுவின் அணுகுமுறைக்கு இரண்டாவது அடிப்படை தாராளமய, உலகமயச் சீர்திருத்தங்கள். குழு இதை விரிவாகப் பேசியிருந்தால் காலத்தை முந்திக்கொண்ட ஒப்பற்ற அறிக்கை ஒன்று உருவாகியிருக்கலாம்.

1991இல் அதீதக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட பொருளாதாரத்தைப் போலவே கல்வியும் மத்திய, மாநில அரசுகளின் தேவைக்கு அதிகமான கட்டுப்பாட்டிலிருந்து விடுபட வேண்டும் என்பது குழுவின் பரிந்துரை. தாராளமயத்திலும் உலகமயத்திலும் தேசியம், தேசிய அரசு, தேசிய எல்லைகள் எல்லாம் தேய்ந்துபோய் வரலாற்று எச்சங்களாகிவிடும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in