

இந்தியா என்கிற நாடு உருவானது ஆங்கிலேயர் ஆட்சியில்தான். பல்வேறு மொழிகள், மதங்கள், பல்வேறு வகையான இயற்கை வளங்கள் போன்றவை நிறைந்த நிலப்பகுதியை ஒன்றிணைத்து, இந்தியா என்கிற ஒரே நாடாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்.
இதற்காக, ஒரே மாதிரியான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லியில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நாடு முழுவதும் நிறைவேற்றப்படும் உத்தரவாத அதிகார முறை இதற்கு அவசியப்பட்டது.
மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை, கட்டுப்பாடுகள் ஆகியவை பொருளாதாரச் சுரண்டலுக்காகவே உருவாக்கப்பட்டன. ஆனால், 1935ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த அதே சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாகவும் அமைந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் அப்போது நடைமுறையில் இருந்த காலனியாதிக்கச் சட்டங்களும் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களும் நீடிப்பது ஒரு வகையில் நகை முரண்.
நோக்கமும் நடைமுறையும்
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தேசப் பிரிவினை, கலவரங்கள், சமஸ்தானங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் எனச் சிக்கலான சூழ்நிலைகள் நிலவின.
புதிதாக உருவாக்கப்பட்ட சில மாநிலங்களின் பலவீனமான நிர்வாகம், பிராந்திய வேறுபாடுகள் மீதான அச்சம், மொழிவழி மாநிலங்கள் மீது போதுமான புரிதலின்மை, வெளிநாட்டு அச்சுறுத்தல் போன்ற காரணங்கள் ஆங்கில அரசின் மையப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீது அரசமைப்பு நிர்ணய அவையில் இருந்தவர்களை நம்பிக்கை கொள்ள வைத்தன.
மத்திய அரசின் அதிகாரம், மாநில நிர்வாகத்துக்கான சட்டப்பிரிவுகள், கூட்டாட்சி நிதி மேலாண்மை அமைப்பு முறை என அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். இதில் சமநிலை பேணுதலே அடிப்படையாக இருந்தது.