

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ள உலக நாடுகள் ஓரணியாகக் கைகோத்து, ஐக்கிய நாடுகள் அவையின் ஒருங்கிணைப்புடன் ஆண்டுதோறும் பன்னாட்டுக் காலநிலை உச்சிமாநாடுகளை நடத்திவருகின்றன.
தற்போது 31ஆவது மாநாடு (COP 31) துருக்கி நாட்டின் ஆன்டாலியா நகரில் நவம்பர் 9 முதல் 20 வரை நடைபெற்று வருகிறது.
பொதுவாக, இந்த மாநாடுகளில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நாடுகளின் பொறுப்பு, நிதிப் பங்களிப்பு, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காலநிலை மாற்றம் என்பது...
காலநிலை மாற்றம் என்பது பூமியின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒட்டுமொத்தப் பூமியின் காலநிலை அமைப்பில் ஏற்படும் நிரந்தர மாற்றங்களைக் குறிக்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் இயற்கைச் சீற்றங்கள் பேரழிவுக்கு வழிவகுத்துவிடுகின்றன.
குறிப்பாக நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதால் கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் போன்ற பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) வளிமண்டலத்தில் அதிகமாக வெளியாகின்றன.
இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை விண்வெளிக்குத் திரும்ப விடாமல் பூமியிலேயே தடுத்து நிறுத்துவதால், புவி வெப்பமாதலுக்கு (Global Warming) முதன்மைக் காரணமாக ஆகின்றன.
தவிர காடுகளை அழித்தல், நவீன விவசாய முறைகள், தொழிற்சாலைச் செயல்பாடுகள், வாகனங்கள் வெளியிடும் புகை போன்றவை கார்பனை உறிஞ்சும் இயற்கை அமைப்புகளைக் குறைத்து வெப்பநிலையை அதிகரிக்கின்றன.
இதன் விளைவாகத் துருவப் பகுதிகள், மலைகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் கடல் நீர்மட்டம் உயர்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளைக் கடல் விழுங்கிவிடுகிறது.
தவிர, கடல் நீர் அமிலத்தன்மையை அடைவதுடன், தாவரங்கள் - விலங்குகளின் வாழிடங்கள் மாறி உயிர்ப்பன்மை பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாகக் கடுமையான வெப்ப அலைகள், எதிர்பாராத பெருவெள்ளம், நீண்ட கால வறட்சி, வலுவான புயல்கள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
எப்போது, எப்படித் தொடங்கியது?
ஒவ்வொரு நாட்டின் தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம், மின்உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் கருத்தில்கொண்டு, அவற்றைக் கட்டுப்படுத்த 1992இல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சிமாநாட்டில் (Earth Summit), ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றக் கட்டமைப்பு உடன்படிக்கை (UNFCCC) உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 1995 முதல் ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளில் மாநாடு நடத்தப்படுகிறது. இதுவே ‘காப்’ (COP - Conference of the Parties) என்று அழைக்கப்படுகிறது. 2015இல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரிஸ் ஒப்பந்தம் உருவானது.
இதன்படி, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிட்டு, உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழாகக் கட்டுப்படுத்தி, 1.5 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்கும் இலக்கை நோக்கி நகர்வதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. ஒவ்வொரு நாடும் தனது கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தேசியத் திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் இந்த மாநாட்டில் முக்கியமான தீர்மானமாக இருந்தது.
காலநிலை நிதி
காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கும் அதன் பாதிப்புகளிலிருந்து மக்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கும் தேவைப்படும் நிதியே காலநிலை நிதி (Climate Finance) எனப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, நிலக்கரி சார்ந்த மின்உற்பத்தியைக் குறைத்து, சூரிய ஒளி, காற்றாலை ஆகிய மரபுசாரா மின்உற்பத்தியை அதிகரிப்பது, வெள்ளம், வறட்சியை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவது, கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது, காலநிலைக்கு ஏற்ற வேளாண் முறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றுக்குப் பெரும் முதலீடு தேவைப்படுகிறது.
குறிப்பாக, தொழில்மயமாக்கலால் அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்ட வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பதே இந்தக் கருத்தின் அடிப்படை. இவ்வாறு உருவாக்கப்பட்ட காலநிலை நிதியை மானியமாகவோ, குறைந்த வட்டிக்குக் கடனாகவோ, தொழில்நுட்ப உதவியாகவோ கொடுக்கலாம்.
யார் எவ்வளவு நிதி வழங்க வேண்டும், அது எவ்வாறு வழங்கப்பட வேண்டும், உண்மையில் இவ்வாறு வழங்கப்படும் நிதியும் அதன் பலன்களும் பாதிக்கப்பட்ட நாடுகளை முறையாகச் சென்றடைந்து, அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அளவிடப்பட்டிருக்கின்றனவா என்பது உள்ளிட்ட பல தலைப்புகள் இந்த மாநாடுகளில் முக்கிய விவாதங்களாகப் பேசப்படுகின்றன மாநாட்டின் முடிவில் புதிய தீர்மானங்கள் ‘காப்’ நாடுகளுக்கு வலியுறுத்தப்படுகின்றன.
பாகு மாநாட்டின் முக்கியத்துவம்
2024இல் அஸர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற சர்வதேசக் காலநிலை உச்சிமாநாடு (COP29), காலநிலை நிதி தொடர்பான புதிய இலக்கை நிர்ணயித்தது.
அதன்படி வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு வழங்கும் காலநிலை நிதியை ஆண்டுக்கு 100 பில்லியன் டாலரிலிருந்து 2035ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலராக உயர்த்த ஒப்புக்கொண்டன.
மேலும், அரசு - தனியார் முதலீடுகள் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் பயன்படுத்தி ஆண்டுக்கு 1.3 லட்சம் கோடி டாலர் நிதியைத் திரட்டுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய நிலை
தற்போது துருக்கியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் (COP31), ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது, நிதி வழங்குவதற்கான வழிமுறைகளை உறுதிப்படுத்துவது ஆகியவை பற்றி விவாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, வளரும் நாடுகளுக்கு நிதி எளிதாகச் சென்றடைவது, கார்பன் கடன்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்ற அம்சங்கள் கவனம் பெற்றுள்ளன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகள் வளரும் நாடு, வறிய நாடு, முன்னேறிய முதலாம் உலக நாடு என்கிற எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதையும் பாதிக்கின்றன.
ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் பொருளாதார வலிமை எல்லா நாடுகளுக்கும் சமமாக இருப்பதில்லை. எனவே, காலநிலைப் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல; அது உலகளாவிய சமத்துவம், பொருளாதார நீதி, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமை ஆகியவற்றோடும் தொடர்புடையது. நாடுகளின் வாக்குறுதிகள் செயல்பாடுகளாக மாறும்போதுதான் இத்தகைய மாநாடுகளின் உண்மையான வெற்றி உறுதியாகும்.