

புகழ்பெற்ற சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில் ஜனவரி 7ஆம் தேதி தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். பல சுற்றுச்சூழல் நூல்களை எழுதியிருக்கும் மாதவ் காட்கில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாவலர் எனப் போற்றப்படுபவர். ஹார்வர்டு பல்கலைக்கழகம், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும், ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.
பத்ம பூஷண், பத்ம விபூஷண், ஐ.நா.வின் ‘சாம்பியன் ஆஃப் எர்த்’ போன்ற பல விருதுகளைப் பெற்றவர். இவை அனைத்தையும் காட்டிலும், ஒரு சூழலியல் செயல்பாட்டாளரைப் போலவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பை வலியுறுத்திய கல்வியாளர் என்பது அவருடைய தனிச்சிறப்பு.
அறிக்கையும் எதிர்வினையும்: மேற்குத் தொடர்ச்சி மலையின்மீது படர்ந்துள்ள மரங்கள் அம்மலையைப் பற்றியிருப்பதைவிட இறுக்கமாக, நம் அரசாங்கங்களும் மலையை மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் நிறுவனங்களும் அதைப் பற்றியிருக்கின்றன. இந்த இரும்புப்பிடியைக் கைவிட அவர்களுக்குச் சற்றும் விருப்பம் கிடையாது.
ஆகவேதான், கடந்த 2011இல் மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத் தொடர்ச்சி மலைச் சுற்றுச்சூழல் வல்லுநர் குழுவின் அறிக்கை வெளியானபோது, அது அவர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. அந்த அறிக்கையில் அப்படி என்னதான் இருந்தது? மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ச்சியின் பெயரால் நிகழும் அழிவுகள் பற்றி அது எச்சரித்ததோடு நில்லாது, அதற்கான தீர்வுகளையும் முன்வைத்திருந்தது.
அந்த அறிக்கை நிறைவுசெய்யப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும், அதை உரிய காலத்தில் வெளியிடாது, சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகம் காலதாமதம் செய்தது. பின்னர் வழக்குத் தொடுக்கப்பட்டு அதை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டியிருந்தது. அறிக்கை வெளியானதும் காலதாமதத்துக்கான காரணம் புரிந்தது.
அறிக்கை சுட்டிக்காட்டிய அபாயங்களைவிட, அதற்கான தீர்வுகளே அரசுகளுக்கு ஒவ்வாமையாக இருந்தன. மத்திய அரசும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாநில அரசுகளும் அறிக்கையைக் கடுமையாக எதிர்த்தன. அரசியல் கட்சிகளில் பாஜக முதல் சிபிஐ (எம்) வரை அனைத்து ஆண்ட, ஆள்கின்ற அரசியல் கட்சிகளையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைய வைத்த பெருமை அந்த அறிக்கைக்கு உண்டு.
காட்கில் அறிக்கை ஒரு போலி அச்சுறுத்தல் என்று இகழப்பட்டது. அதற்கு எதிர்வினையாக, ‘நாங்கள் ஒன்றும் சோதிடர்கள் அல்ல’ என்றார் காட்கில். அறிக்கை முற்றிலும் அறிவியல் அடிப்படையில் அமைந்த ஆய்வு முடிவுகளைச் சார்ந்திருந்தது என்பதுதான் அதன் பொருள்.