அனைத்துக்கும் அரவிந்தன் | அஞ்சலி

அனைத்துக்கும் அரவிந்தன் | அஞ்சலி
Updated on
2 min read

நிலை​யாமையை அறி​வால் அறிந்​தா​லும் அதை மனிதர்க்கு உணர்த்த வேண்​டும் என்​ப​தற்​காக இயற்கை சில அதிர்ச்​சிகர​மான சம்​பவங்​களை அவ்​வப்​போது நிகழ்த்​திக் காட்​டு​கிறது. எழுத்​தாளர் அரவிந்​தனின் அகால மரணத்தை அப்​படித்​தான் பார்க்​கிறேன்.

உணவுக் கட்​டுப்​பாடு, முறை​யான உடற்​ப​யிற்சி என உடல்​நலம் பேணுவ​தில் பெருங்​கவனத்​தோடு இருந்த அரவிந்​தன் தம் அறு​பத்​திரண்​டாம் வயதில் திடுமென இறந்து போனார். காப்பி குடித்​து​விட்டு இன்​னும் சற்று நேரம் ஓய்​வெடுக்​கலாம் என்று படுத்​தவர் திரும்ப எழவில்​லை. நேற்​றிரவு என்​னிடம் பேசி​னார், எனக்​குச் செய்தி அனுப்​பி​னார், இன்று பேசுவ​தாகச் சொன்​னார் என்​றெல்​லாம் சமூக ஊடகங்​களில் நண்​பர்​கள் பதறுகின்​றனர். இத்​தனை நண்​பர்​களின் நல்​லெண்​ணத்​தில் வீற்​றிருக்​கும் அவரை இத்​தனை எளி​தாக, சீக்​கிர​மாகவா மரணம் நெருங்​கும்?

1990களில் தொடங்கி முப்​பத்​தைந்து ஆண்​டு​களாக ஊடகத்​தி​லும் நவீன இலக்​கி​யத்​தி​லும் காத்​திர​மாக இயங்கி வந்​தவர். இந்​தியா டுடே, காலச்​சுவடு, உலகத்​தமிழ்​.​காம். இந்து தமிழ் திசை, மின்​னம்​பலம், சமயம்​.​காம், நம்ம சென்னை எனப் பல அச்​சு, இணைய இதழ்​களில் பணி​யாற்றி ஒவ்​வொன்​றி​லும் தம் சுவடு​களைப் பதித்​தவர். இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்​பிதழ்​களின் ஆசிரிய​ராகப் பணி​யாற்​றிய போது தமிழில் அது​வரை இல்​லாத வகை​யில் பல்​வேறு முன்​னெடுப்​பு​களைச் செய்​தார்.

இலக்கியம் மட்​டுமல்ல, சிறு​வர், பெண்​கள், இளைஞர் உள்​ளிட்ட பல்​வேறு பிரி​வினருக்​கு​மான தேவை​களை நவீனப் பார்​வையோடு நிறைவேற்​றும் வகை​யில் அவர் செயல்​பாடு​கள் இருந்​தன. இதழிய​லா​ள​ருக்கு இருக்க வேண்​டிய அடிப்​படைப் பண்​பு​களான கருத்து வேறு​பாடு​களை இணக்​க​மான முறை​யில் விவா​திப்​பதும் அனை​வருட​னும் நட்பு பேணுவதும் அவருக்கு இயல்​பாகவே கைவந்​திருந்​தன.

சிறுகதை, நாவல் என்று தம்மை எழுத்​தாள​ராக​வும் நிறு​விக் கொண்​ட​வர். நான்கு சிறுகதைத் தொகுப்​பு​கள், இரண்டு நாவல்​கள் (பயணம், பொன்​னகரம்) அவர் பங்​களிப்​பு. சென்னை மொழியை இழி​வான​தாகக் கருதும் பொது​மனோ​பாவத்​துக்கு எதி​ரான பார்வை கொண்ட அவர், சென்​னை​யின் வழக்கு மொழி​யில் ‘பொன்​னகரம்’ நாவலை எழு​தி​னார். சென்னை வாழ்​வின் பல பகு​தி​களை தம் வாழ்​வனுபவத்​தோடு இணைத்து எழு​திய வாசிப்​புச் சுவை கொண்ட நாவல் அது.

இரண்​டாண்​டுக்கு முன் வெளி​யான ‘வெல்​கம் டூ மில்​லெனி​யம்’ சிறுகதைத் தொகுப்​பில் அத்​தனை நவீன மனதுடன் கதை சொல்லி வாசகக் கவனத்தை ஈர்த்​திருந்​தார். சிறுகதை அவருக்கு மிக​வும் பிடித்த இலக்​கிய வடிவம். ஓய்​வற்ற தம் வேலை நெருக்​கடிக்கு இடையே கொஞ்​சம் அவகாசம் கிடைத்​தால் சிறுகதை எழுத உட்​கார்ந்​து​விடு​வார். எழுத்​தாளர் முகாம் ஒன்​றில் பதினைந்து நாட்​கள் தங்​கக் கிடைத்த வாய்ப்​பில் கிட்​டத்​தட்ட நாளொன்​றுக்கு ஒரு சிறுகதை என்​னும் வேகத்​தில் ஒரு தொகுப்​புக்​கான கதைகளை எழு​தி​விட்​டார்.

பாலசரஸ்​வதி தேவி​யின் வாழ்க்கை வரலாறு, டி.எம்​.கிருஷ்ணா​வின் மூன்று நூல்​கள் என பத்​துக்​கும் மேற்​பட்​ட​வற்றை ஆங்​கிலத்​திலிருந்து மொழிபெயர்த்​தவர். சில்​வியா பிளாத்​தின் வாழ்வை அடிப்​படை​யாகக் கொண்ட புனை​வாகக் கோனி பால்​மன் எழு​திய ‘என் கதை உன் கதை’ நாவல் அவர் மொழிபெயர்ப்​பில் கடந்த ஜனவரி மாதம் வெளி​யா​யிற்​று. ஏராள​மான மொழிபெயர்ப்​பு​கள் வந்து குவி​யும் இக்​காலத்​தில் ஒரு​ நாவலை மொழிபெயர்க்​கத் தேர்ந்​தெடுக்​கும் திறனும் அதன் அத்​தனை கூறுகளை​யும் கொண்டு வந்து விடும் ஆற்​றலும் அவருக்கு இருந்தன என்​ப​தன் வெளிப்​பா​டாக இந்​நாவல் அமைந்து வரவேற்பு பெற்​றது.

சுந்தர ராம​சாமி​யின் தாக்​கம் பெற்ற இலக்​கியப் பார்வை இவருடையது என்​றாலும், தர்க்க ரீதி​யாகத் தம் கருத்தை முன்​வைக்​கும் ஆய்​வெனத் தம் விமர்​சனக் கட்​டுரைகளை எழு​தி​னார். ஜெய​காந்​தன், இமை​யம், ஜே.பி.​சாணக்யா ஆகியோர் படைப்​பு​கள் பற்றி அவர் எழு​திய கட்​டுரைகள் மிக​வும் முக்​கிய​மானவை. கிட்​டத்​தட்​டப் பத்​துக் கட்​டுரை நூல்​களை வெளி​யிட்​டுள்​ளார். சமீப காலத்​தில் தம் விமர்​சனப் பார்​வையை முன்​வைத்து சிறப்​பான உரைகளை​யும் ஆற்​றத் தொடங்​கி​யிருந்​தார். நாமக்​கல்​லில் டி.எம்​.கிருஷ்ணா பற்​றிய உரை, ஓசூரில் புரவி இலக்​கியக் கூடு​கை​யில் ஆற்​றிய உரை ஆகிய​வற்​றைக் கேட்​டோர் போற்​றினர்.

இதழியல், இலக்​கி​யம் இரண்​டுக்​கும் ஆதா​ரக் கரு​வி​யாகிய மொழியைச் சரி​யாகக் கையாள வேண்​டும் என்​ப​தில் மிகுந்த கவனம் கொண்​ட​வர். ஆர்​வத்​தா​லும் சுய அனுபவத்​தா​லும் தொடர்ந்து தாம் கற்​றுக் கொண்​ட​வற்​றைப் பிறருக்​கும் பயன்​படும் வகை​யில் இந்து தமிழ் திசை, மின்​னம்​பலம் ஆகிய இதழ்​களில் தொடர்​கட்​டுரைகளாக எழு​திப் பின் ‘ஒருசொல் கேளீர்!’ என்​னும் நூலாக்​கிக் கொடுத்​துள்​ளார். செம்​மை​யாக்​கம் அவரது முக்​கிய​மான பணி​களுள் ஒன்​று. அவர் கைபட்ட பிறகு தம் கதையோ கட்​டுரையோ துலங்​கு​வதை உணர்ந்​தோர் பலர். இப்​படி அவர் திறன்​கள் பல. அனைத்​துக்​கும் அரவிந்​தன் என்றே சொல்​லலாம்.

அனைத்துக்கும் அரவிந்தன் | அஞ்சலி
பேரவைத் தேர்தல் 2026: ஐடி துறைக்கு விடிவுகாலம் பிறக்குமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in