

தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை - தொடர்ச்சியாக இரண்டு முறை ஓர் அரசியல் கட்சி வென்றிருக்கிறதா என்பது பற்றி அவ்வப்போது ஆராய்ச்சிகள் (!) நடத்தப்படுகின்றன. அண்மைக் கால வரலாற்றில், இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த கட்சி என்கிற பெருமையை 2016இல் அதிமுக பெற்றது.
எனினும், அதற்கு முன்பாகவும் தொடர்ச்சியாகத் தேர்தலில் கட்சிகள் வென்ற நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 1952, 1957, 1962 தேர்தல்களில், தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் 1952இல் அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைந்தது.
1957, 1962இல் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்றது. திமுகவும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. 1967, 1971 தேர்தல்களில் திமுக இதைச் சாத்தியப்படுத்தியது. இதில் 1967இல் அண்ணா தலைமையிலும், 1971இல் மு.கருணாநிதி தலைமையிலும் திமுக தேர்தலை எதிர்கொண்டது.
அதிமுக இந்தச் சாதனையைத் தனித்தனியாக வெவ்வேறு காலக்கட்டங்களில் இரண்டு முறை படைத்திருக்கிறது. 1977, 1980, 1984 தேர்தல்களில் தொடர்ச்சியாக மூன்று முறை அதிமுக வென்றது. முதல் இரண்டு தேர்தல்கள் எம்.ஜி.ஆர். தலைமையிலும், 1984இல் எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதும் அதிமுக எதிர்கொண்டது.
ஆனாலும், தேர்தலில் வென்றால் எம்.ஜி.ஆர். முதல்வர் என்று கூறியே 1984 தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. 1984க்குப் பிறகு 2016இல் அதிமுக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா தலைமையில் இது சாத்தியமானது. ஒரே மண்டலத்தில் முதல்வர் வேட்பாளர்கள் தமிழகத் தேர்தல் வரலாற்றில் 2011க்கு முன்புவரை காவிரி - டெல்டா மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இருந்து முதல்வர் வேட்பாளர்கள் களம் கண்டதில்லை.
தெற்கு மண்டலம், கொங்கு மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை மண்டலம் எனத் தமிழ்நாட்டின் வெவ்வேறு மண்டலங்களில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள். இதில் முதன்மைக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் காவிரி - டெல்டா மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டதில்லை என்கிற குறை இருந்தது. இக்குறை 2011இல் தீர்ந்தது. முதன்மைக் கட்சிகளான திமுக, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் காவிரி - டெல்டா பகுதியில் போட்டியிட்டது கவனிக்கவைத்தது.
காவிரியை ஒட்டிய குளித்தலை தொகுதியில் 1957இலும், டெல்டா மாவட்டமான தஞ்சையில் 1962இலும் மு.கருணாநிதி போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால், இந்தத் தேர்தல்களில் அவர் முதல்வர் வேட்பாளராக இருந்ததில்லை. அண்ணாதான் அப்போது திமுக தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் இருந்தார். பின்னாள்களில் மு.கருணாநிதி முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு - சென்னையில் உள்ள தொகுதிகளில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், 2011இல் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருந்த கருணாநிதி, டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். இதேபோல ஜெயலலிதா 1991-96 (பர்கூர்), 2002-06 (ஆண்டிபட்டி) என முதல்வராக இருந்தபோது வடக்கு, தெற்கு மண்டலத் தொகுதிகளில் இருந்துதான் தேர்வுசெய்யப்பட்டிருந்தார்.
ஆனால், 2011இல் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருந்த ஜெயலலிதா, காவிரி - டெல்டா மாவட்டமான திருச்சியில் உள்ள ரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். ஆக, திமுக - அதிமுக என இரண்டு முதன்மைக் கட்சிகளின் தலைவர்களும் முதல் முறையாகக் காவிரி - டெல்டா பகுதியில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டது அப்போது மட்டுமே!
‘மைனாரிட்டி அரசு’
தமிழக அரசியல் வரலாற்றில் 2006ஆம் ஆண்டு தேர்தல் சற்று வித்தியாசமானது. அதற்கு முன்பு (1952 விதிவிலக்கு. அப்போது ஆந்திரம், கர்நாடகம்-கேரளத்தின் சில பகுதிகள் இணைந்து மதராஸ் மாகாணமாக இருந்தது) தமிழகத் தேர்தல் களத்தில் கூட்டணிகள் இருந்தது உண்டு. ஏதோ ஒரு கூட்டணி வெற்றிபெற்றதும் உண்டு.
ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகளைக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சி தனிப்பட்ட முறையில் பெற்றுவிடும். ஆட்சியமைக்கப் பிற கட்சிகளின் தயவு தேவைப்பட்டதில்லை. ஆனால், 2006 சட்டமன்றத் தேர்தல் இதை மாற்றி எழுதியது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, புதிதாகத் தொடங்கப்பட்ட தேமுதிக என மும்முனைப் போட்டி நிலவியது.
விஜயகாந்தின் கட்சியான தேமுதிக எவ்வளவு வாக்குகள் பெறும், யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்று கணிக்க முடியாமல் இருந்தது. அந்தத் தேர்தல் முடிவு முந்தைய தேர்தல் முடிவுகளுக்கு மாறாக அமைந்தது. தேர்தலில் 163 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. ஆனால், திமுக தனியாக 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது.
தனிப் பெரும்பான்மைக்கு 22 இடங்கள் குறைவாக இருந்தது. என்றாலும் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகளின் ஆதரவுடன் திமுக தனியாக ஆட்சியமைத்தது. கடைசிவரை காங்கிரஸ் ஆதரவுடன் ஐந்து ஆண்டுக் காலத்தையும் திமுக நிறைவுசெய்தது. இதற்கு முன்பு முதன்மைக் கட்சி தனியாக அறுதிப் பெரும்பான்மை பெறாமல் இருந்ததில்லை.
2006இல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி அமைந்திருந்தாலும், ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்கிற வசவுச் சொல்லுக்கு அக்கட்சி தப்பவில்லை. 10 ஆண்டுகள் கழித்து 2016 தேர்தலில் திமுக தோல்வி அடைந்திருந்தாலும், 89 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
இப்போதுவரை இத்தனை தொகுதிகளை ஓர் எதிர்க்கட்சி தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெற்றதில்லை. ஆக, தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆளுங்கட்சியாகவும், அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் கொண்ட எதிர்க்கட்சியாகவும் திமுக பங்காற்றியிருக்கிறது.