

பல ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் வாழ்ந்து கொண்டிருந்த மணிக்கொடி எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயரை ஒருநாள் சந்திக்கச் சென்றோம். அப்போது, “சதுர் நாட்டியத்திலே கொடிகட்டிப் பறந்த தஞ்சை ஞானா பற்றி தெரியுமா?” என்று அவர் கேட்டபோது திகைத்துப் போனோம். எங்கள் குழுவில் யாருக்கும் ஞானா பற்றி தெரியவில்லை.
“அவள் பிறந்தது திருவாரூர். அய்யாஸ்வாமி நட்டுவனாரின் பெயர்த்தி. 3 வயதில் அடவுகளைக் கற்ற விதமே அவள் அபூர்வப் பிறவி என்பதைப் புரியவைத்துவிட்டது. அவளுக்குப் பாடம் கற்பித்த நட்டுவனார்கள் ‘இவள் ஓதாது உணர்ந்தவள். இவளுக்கு கற்பிக்க எங்களிடம் ஒன்றும் இல்லை’ என்று கூறிவிட்டனர். மைசூர் மகாராஜா அவளது நடனத்தைப் பார்த்துவிட்டு தன் கைகளாலேயே தங்கக் காசுகளை அள்ளி கனகாபிஷேகம் செய்தார். சென்னைக்கு விஜயம் செய்த வேல்ஸ் இளவரசருக்கு முன்னால் நடனமாடி அவரை வியக்கவைத்து, வெகுமதி வாங்கி வந்தாள்.
கருப்பு தேகம், கழுத்தில் ருத்ராட்சம், வெள்ளைச் சீலை - இதுதான் அவள் ஒப்பனை. அவள் நடந்து வந்தால், நடனமாது என்று நம்பவே முடியாது!’ - இவ்வாறு கூறிய ஸ்வாமிநாத ஆத்ரேயரிடம், “தஞ்சை ஞானா பற்றி மேலும் கூறவேண்டும்” என்றோம். “ராம்! ராம்!” என்று கூறி புன்னகைத்த அவர், மவுனத்தில் ஆழ்ந்தார். கூடுதல் தகவல்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள் என்பதுதான் அதன் பொருள்.
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தனியார் வாசக சாலைகள், மூத்த இசை ரசிகர்கள் என பல இடங்களில் தேடியும் தஞ்சை ஞானா பற்றி நாட்டிய சுவடுகள் எதுவும் தஞ்சாவூரில் கிடைக்கவில்லை.
சமீபத்தில், இசை அறிஞர் தஞ்சை பி.எம்.சுந்தரம் எழுதிய ‘மரபு தந்த மாணிக்கங்கள்’ என்ற நூலைக் காண நேர்ந்தது. தொன்றுதொட்டு தெய்வத்துக்கு தங்களை அடிமையாக்கிக் கொண்ட தேவரடியார்களின் பெருமை வாய்ந்த வழித்தோன்றல்களான 118 நடனக் கலைஞர்கள் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. தமிழகமெங்கும் ஊர் ஊராகச் சென்று சேகரித்த தகவல்களுடன் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட அரிய நூல்.
இதில் தஞ்சை ஞானா பற்றிய தகவல்கள் 2 பக்க அளவில் மட்டுமே உள்ளன. எனினும், அவர் காலத்து சதிரின் நடைமுறை பற்றி இந்நூல் பேசுகிறது. இதையடுத்து, டோனாவன் ரோபர்ட் என்பார் எழுதிய ‘தஞ்சையின் எழில்மிகு நாட்டியக்காரர் ஞானாவைத் தேடி’ என்ற கட்டுரை கிடைத்தது. (தமிழாக்கம் ச.வின்சென்ட்). ராயபுரம் ரயில் நிலைய மண்டபத்தில் வேல்ஸ் இளவரசரின் வரவேற்பில் தஞ்சை ஞானாவின் சதுர் நாட்டியம் நிகழ்த்திக் காட்டப்பட்டதை இக்கட்டுரை விவரிக்கிறது.
வேல்ஸ் இளவரசர் எட்வர்டுடன் திருவிதாங்கூர் மகாராஜா, விழிய நகரம், கொச்சின் மகாராஜாக்கள், ஆற்காடு மகாராஜா ஆகியோர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர். இந்த நடன நிகழ்ச்சியை வில்லியம் ரசல் ஹோவர்ட், ஜெ.டிரூகே ஆகிய இரண்டு மேலைநாட்டு எழுத்தாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
குயின்லேண்ட் டைம்ஸ் இதழில் (1876 பிப்ரவரி) வெளிவந்த செய்தியில், ‘ஞானா - அலங்கார அணிகள் ஜொலிக்க மேடையில் தோன்றினார். மேடை மீது மெல்லெனச் சிற்றடிகள் எடுத்துவைத்து, காதலனைத் தேடும் பாவனையில் கரங்கள் அபிநயித்தன. காதலனாக வேல்ஸ் இளவரசரையே உருவகித்து அவரை நெருங்கி பாதங்களை வணங்கியபோது இளவரசர் எட்வர்ட் முகத்தில் புன்னகை, வெட்கம். அப்படியே ஞானா பின்னோக்கிச் சென்று மறைகிறாள். இளவரசர், ஞானாவை பாராட்டி விலை உயர்ந்த வெகுமதிகளை அளித்தார்’ என்று விவரிக்கப்பட்டுள்ளது.
பாகவதமேளா நாட்டிய நாடகங்களில் இடம்பெறும் ஸ்வர ஜதிகளை சூலமங்கலம் சீதாராம பாகவதரிடம் கற்று,அவற்றை பிரபலமடையச் செய்தார் ஞானா. அவரிடம் இருந்து காட்டுமன்னார்கோவில் நட்டுவனார் முத்துக்குமரன் அபிநயக் கலையின் நுட்பங்களைக் கற்று, அவரது சீடர்களான மிருணாளினி சாராபாய், எம்.கே.சரோஜா ராம்கோபால், ருக்மிணிதேவி அருண்டேல், கமலா லட்சுமண் ஆகியோருக்கு பயிற்றுவித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
தஞ்சை ஞானாவின் புகைப்படங்கள் நான்கு மட்டுமே கிடைத்துள்ளன. ஒன்று பெர்லின் அருங்காட்சியகக் காப்பகத்திலும், மற்றொன்று பிரான்ஸ் கலைக் காப்பகத்திலும் உள்ளன. அங்கு அவர் பயன்படுத்திய சலங்கை முதலான ஆடல் அணிகலன்களும் இருப்பதாக ஒரு வாய்மொழித் தகவல் கூறுகிறது. வரலாற்று எழுத்தாளர் ஜேதேந்திரா ஹர்ஸ்பெல்ட், ஞானாவின் வாழ்க்கை பற்றி வாய்மொழியாக கிடைத்த தகவல்களைக் கொண்டு ஒரு ஆவணம் உருவாக்கியுள்ளார்.
ஞானாவின் புகழ் கடல் கடந்தும் பரவியது. இலங்கை சென்று ஏழு நடனக் கச்சேரிகளில் பங்கு பெற்றார். அவரோடு திருவாரூர் கோபால நட்டுவனாரும், தமது வாழ்நாள் முழுவதும் ஞானாவின் மிருதங்க வித்வானாக இருந்த மன்னார்குடி கோபாலனும் உடன் சென்றனர். பின்னாளில் தனது சொந்த ஊரான திருவாரூருக்கு திரும்பினார் ஞானா.
திருவாரூர் கோயிலில் தேவதாசிகளுக்கான பணிகளாக பல்வேறு முறைகள் அனுசரிக்கப்பட்டன. ஞானா, கோயிலின் உள் பிரகாரத்துக்கு வெளியே
‘சின்ன முறை’ நடனமாடுவது வழக்கம். பிரகாரத்துக்குள் ‘பெரிய முறை’ ஆட விரும்பிய ஞானாவுக்கு, அவர் கடல் கடந்து சென்றதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த ஞானா, தனது நடனக் கலையைத் துறந்தார். ஆலயச் சேவையில் இருந்து வெளியேறி பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்றார்.
1857-ல் பிறந்த ஞானா, தமது இறுதிக்காலம் வரை இல்லற இன்பத்தை நுகராது, துறவு பூணாமலே துறவை மேற்கொண்டு வாழ்ந்தவர். 1922-ல் மறைந்தார். உண்மையில் அவர் இறக்கவில்லை. தஞ்சையின் சதுர் நாட்டிய வரலாற்றின் பக்கங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.