

இத்தனை வாரங்களாகப் பெண்களுக்கு அவசியமான விஷயங்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம் நண்பர்களே. இந்த வாரத்தில் இருந்து இருபாலருக்கும் பொதுவான சில விஷயங்கள் குறித்து நாம் சிந்திக்கலாம். நேரமேலாண்மையைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு அக்கறை இருக்கிறது? 24 மணி நேரம் இருக்கிற ஒரு நாளை அழகாக, அர்த்தமுள்ளதாகச் செலவிடுவது நம் கையில்தான் இருக்கிறது என்பதை ஏனோ பல சந்தர்ப்பங்களில் மறந்துவிடுகிறோம். குவாலிடேட்டிவ் நேரம் என்கிற தரமுள்ள நேரத்தை இனம்கண்டு அதற்கேற்பத் திட்டமிடுவது வெற்றிகரமாக வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான விஷயம்.
எட்டு மணி நேரம் நாம் தூங்குவதாகவே வைத்துக்கொள்வோம். மீதி 16 மணி நேரம் இருக்கிறது. நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தால் அதற்கும் குளிக்க, சமைக்க, மற்ற வேலைகளைச் செய்யவும் 12 மணி நேரத்தை ஒதுக்கிவிடுவோம். மீதி இருக்கிற நான்கு மணி நேரத்தில் இரண்டு மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பத்திரிகைகள் படிப்பது என வைத்துக்கொண்டாலும் மீதி இருக்கும் இரண்டு மணி நேரத்தை நமக்காக எனச் சேமிக்கக் கற்க வேண்டும்.