

ஒரு சிறுவன் அழுகிறான். அண்ணன் சமாதானம் சொல்கிறான்... ‘நாளைக்கு அய்யாகிட்ட சொல்லி அல்வா வாங்கித் திம்போம், அழுகாதே.’ அல்வா என்கிற சொல்லைக் கேட்டதும் ஒரு கணம் அழுகை நிற்கிறது. வயிற்றுக்கடுப்பு வந்தபோது அய்யா வாங்கிக் கொடுத்த அந்த அல்வாவின் சுவை நினைவுக்கு வருகிறது. ஆனால், சுருதி குறைந்திருந்தாலும் அடுத்த கணமே மீண்டும் அழத் தொடங்குகிறான். அந்தச் சிறிய தருணத்தை - பசியும் ஆசையும் குழந்தைத்தனமான தந்திரமும் கலந்த அந்த ஒரு கணத்தை - நாற்பது வருடங்களுக்குப் பிறகும் வாசகர்கள் மறக்கவில்லை. அதை எழுதியவர் ச.தமிழ்ச்செல்வன்.
‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற அவருடைய வாழ்க்கையும், கரிசல் மக்களின் வெயிலும் இமயமலைச் சிகரங்களின் பனியும் கலந்த சற்றே பெரிய ஒரு சிறுகதைதான். திருப்பங்கள் பல நிறைந்த அவரது பெரும் பயணத்தில் இப்போது, மூன்று மாதத் தாமதத்துக்குப் பிறகு, சர்ச்சைகளைக் கடந்து வந்த ஒரு விருது அவருடைய எழுத்துப் பயணத்துக்கு மரியாதை செய்திருக்கிறது.