

அண்ணா, ஈவிகே சம்பத், கலைஞர்
திராவிடர் கழகத் தலைவர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரிடம் இருந்து விலகி, பெரும்பான்மையான தொண்டர்களின் ஆதரவோடு 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை அண்ணா நிறுவினார். அதேநேரம் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட பெரியார்தான் என்றும் தனக்குத் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக தலைவர் நாற்காலி பெரியாருக்கு என்பதில் உறுதியாக இருந்தார். எனவே திமுகவின் தலைவராக அல்லாமல், பொதுச் செயலாளர் என்ற பதவியை அண்ணா ஏற்றுக் கொண்டார்.
அதேபோல் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த ஈவிகே சம்பத், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் போன்றோருக்கும், அதற்குப் பின்னால் வந்த கலைஞர் உள்ளிட்டவர்களுக்கும் பொறுப்புகளை வழங்கினார் அண்ணா.
சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில், மூத்த நிர்வாகி பெத்தாம்பாளையம் பழனிசாமி தலைமையில் 1949-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் பெயர்களில் கலைஞர் பெயர் பின்வரிசையில் இருந்தது. அந்தக் கூட்டத்தில் கலைஞர் கலந்து கொண்டதாக தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. திமுகவின் முதல் மாவட்ட மாநாடு திருச்சியில் நடந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்த மாவட்டங்களில் நடைபெற்றன.
நிறைவாக 1951-ம் ஆண்டு டிசம்பர் 13 முதல் 16 வரை 4 நாட்கள் சென்னை தீவுத் திடலில் பெரிய அளவில் மாநிலம் தழுவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை பொறுப்பேற்று நடத்தியவர்கள் மாவட்டச் செயலாளர்களாக இருந்த காஞ்சி மணிமொழியார், நாஞ்சில் மனோகரன் ஆகியோராவர். மாநாடு நடைபெற்ற 4 நாட்களும் தலைவர்களின் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் என தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அண்ணாவின் பேச்சு திமுக தொண்டர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல் ‘உலக வல்லரசுகளின் எழுச்சியும், வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் சுமார் 2 மணி நேரம் ஈவிகே சம்பத் ஆற்றிய உரை தொண்டர்களை எழுச்சி பெற வைத்தது. மாநாட்டில் பேசுபொருளாகவும் அவரது பேச்சு அமைந்தது.
1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அதேநேரம் திராவிட நாடு கொள்கையை ஆதரிப்போருக்கு ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்தது. அந்தத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் கோவை ஜி.டி.நாயுடு போட்டியிட்டார். அவர் ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற திமுக மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரினார். அதேநேரம் திமுகவின் திராவிட நாடு கோரிக்கைக்கு கையெழுத்திட மறுத்துவிட்டார். அந்த தேர்தலில் திமுகவின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானவர் ஏ.கோவிந்தசாமி. அவர் சுயேச்சை சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
கோவிந்தசாமிதான் உதயசூரியன் சின்னத்தை அண்ணாவுக்கும், திமுகவுக்கும் வழங்கியவர். அடுத்து வெற்றி பெற்றவர் எம்.பி.சுப்பிரமணியம். இவர் பின்னாளில் காங்கிரசில் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 1980 காலகட்டங்களில் நியமிக்கப்பட்டார். சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர்.
திமுகவில் இருந்து ஈவிகே சம்பத் வெளியேறியபோது இவரும் வெளியேறினார். பழ.நெடுமாறனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். எனக்கும் மிகவும் நெருங்கிய நண்பர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம்.பி.சுப்பிரமணியம் இருந்தபோது, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் சரி பாதி தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் முதல்வர் வேட்பாளர் பெயரை (கலைஞரை) அறிவிக்கக் கூடாது என்றும் கூறினார்.
அன்றைக்கெல்லாம் பொதுவாக பெரியவர்கள் காங்கிரஸ் அபிமானிகளாக இருந்தார்கள். அதேநேரம் அவர்களின் வாரிசுகள், இளைஞர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர். குறிப்பாக திமுக அபிமானிகளாக இருந்தனர். இதனால் குடும்பத்தில் குழப்பங்களும், சண்டைகளும்கூட ஏற்பட்டது உண்டு. திமுகவில் மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதில் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் கட்சி வீரியமுடன் வளர்ந்தது.
1953-ம் ஆண்டில் இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திமுக மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஜூலை 15-ம் தேதி கல்லக்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை கலைஞர் தலைமையேற்று நடத்தினார். இதில் கலந்து கொண்ட கலைஞர், மன்னை நாராயணசாமி, ராமசுப்பையா உட்பட பலர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்றைக்கு இருப்பதுபோன்ற வசதிகள் எல்லாம் அன்றைக்கு சிறைகளில் கிடையாது. ‘சி’ பிரிவு சிறைப் பகுதியில் 4 வரிசையில் வரிசைக்கு 45 - 50 சிறிய அறைகளில் கைதிகளை அடைப்பார்கள். அலுமினியத் தட்டில் கஞ்சியும், துவரைப் பயிறும் சாப்பிடக் கொடுப்பார்கள். அந்தக் கஞ்சியைக் குடித்துக் கொண்டே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களைக் கூட்டி வைத்து கூட்டங்கள் நடத்தி கட்சியை வலுப்படுத்தினர். திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், வே.சாமிநாத சர்மா, காரல் மார்க்ஸ் போன்றோரின் புத்தகங்களைக் கொடுத்து இளைஞர்களை வாசிக்கச் செய்தனர்.
இந்தப் போராட்டம் நடைபெற்றபோது தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. திமுகவினர் நடத்திய போராட்டத்தை பெரியார் கண்டித்தார். ‘கண்ணீர் துளிகள் நடத்தும் போராட்டம் நாட்டுக்கு விரோதமானது’ என்று விமர்சித்தார். காமராஜருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
இதற்கிடையே திமுக பொதுக்குழு குமாரபாளையத்தில் நடைபெற்றது. அப்போது திராவிட நாடு கோரிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. அடுத்து வேலூர் மாவட்டம் விருதம்பட்டி அரிசி ஆலையில் பொதுக்குழு நடைபெற்றது. அதற்கு முன்னதாக அதேநாளில் வேறொரு இடத்தில் செயற்குழுவும் நடைபெற்றது.
அங்கே ஈவிகே சம்பத்தின் சட்டையைப் பிடித்து சிலர் வன்முறையில் இறங்கினர். இதனால் பிற்பகலில் நடந்த பொதுக்குழுவுக்கு சம்பத்தும் அவரது ஆதரவாளர்களும் வரவில்லை. வேலூர் பொதுக்குழுவில்தான், மதுரை திருப்பரங்குன்றத்தில் மாநில மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டின் செயலாளர்களாக மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் திமுக மாநாடு 4 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடினார்கள். மாநாட்டின் நுழைவுக் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.3 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாளில் திமுக பொருளாளராக இருந்த கலைஞர் உரையாற்றும்போது, மாநாட்டின் வரவு செலவு குறித்துப் பேசினார். அப்போது இந்த மாநாட்டின் மிச்சத் தொகை ரூ.1 லட்சம் என்று அறிவித்தார். இது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ‘இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் வந்துள்ளனர். எப்படியும் 5 லட்சம் ரூபாயாவது மீதியிருக்க வேண்டுமே’ என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர்.
திமுகவில் ஈவிகே சம்பத் பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தபோதுதான் சென்னை திருவொற்றியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டில் திமுக காவலர் கூட்டம் நடந்தது. இதுபற்றி முன்பே கூறியுள்ளேன். சம்பத்தைப் பொறுத்தவரை, ‘சித்தாந்தத்தை நோக்கியே திமுக என்கிற இந்த இயக்கம் செயல்பட வேண்டும்.
மாறாக சினிமா கவர்ச்சி, தனி மனித துதிபாடல் போன்றவை இருக்கக் கூடாது, அதை முன்னிறுத்தி கட்சி செயல்படக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார். இதனாலேயே கட்சியில் பல பிரச்சினைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. பலரின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
சம்பத்தின் கருத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் உடன்பாடு உண்டு என்றாலும் அவரால் தைரியமாக வெளிக்காட்ட முடியவில்லை. அண்ணா, சம்பத்தையும் கைவிடவில்லை. கலைஞரையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இப்படியான சிக்கலில் அன்றைய திமுக தவித்தது.
இந்தச் சூழலில் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக அண்ணா அறிவித்தார். இது கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.எம்.ஷெரீப், கலைஞர் போன்றவர்கள் அண்ணாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என்று அண்ணாவை வேண்டி கேட்டுக் கொண்டனர்.
திருச்சி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.வெங்கடாச்சலம், கரு.தமிழழகன், புதுக்கோட்டை துரை மதிவாணன் போன்றவர்கள் சம்பத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். கலைஞர், அன்பில் தர்மலிங்கம் போன்றவர்கள் சம்பத் ஆதரவாளர்களை கடும் வார்த்தைகளால் எதிர்வினையாற்றினார்கள்.
திருவொற்றியூரில் நடைபெற்ற காவலர் கூட்டத்தின்போது, வேறோர் இடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சம்பத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இது அண்ணாவை சங்கடப்படுத்தியது. எனவே சம்பத் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு நேரில் சென்று அவரை சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். சம்பத்தும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதன் பிறகே காவலர் கூட்டத்துக்கு அண்ணா வந்தார்.
காவலர் கூட்ட மேடையில் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப்போது ஈவிகே சம்பத்துக்கு எதிராக முரசொலி பத்திரிகையில் வெளிவந்த செய்தியைக் காட்டி, ‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்று சம்பத் ஆதரவாளர்கள், முரசொலி பத்திரிகையை அண்ணாவிடம் காட்டி கோபாவேசமாகப் பேசினர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு முரசொலி பத்திரிகையை சம்பத் ஆதரவாளர்கள் விநியோகித்தனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த பேராசிரியர் அன்பழகன், அந்த பத்திரிகையை கொண்டு வாருங்கள் என்று கூறி அதை வாங்கி கோபமாக வீசியெறிந்தார்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு ஆசைத்தம்பியும், கண்ணதாசனும் திமுகவையும், அண்ணாவையும் விமர்சித்து பத்திரிகையில் எழுதியிருந்தனர். காவலர் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் (அவரது பெயர் தெரியவில்லை) எழுந்து, ‘அண்ணாவை இழிவுபடுத்தி பத்திரிகையில் எழுதியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். அப்போது கண்ணதாசன் எழுந்து நின்று, பத்திரிகையில் விமர்சித்து எழுதியதற்காக மன்னிப்புக் கேட்டார். கலங்கிய அவரது கண்களைக் கண்ட அண்ணா, உடனடியாக கண்ணதாசனை அரவணைத்து அவரது கரங்களைப் பற்றி தேற்றினார்.
அதைத் தொடர்ந்து ஆசைத்தம்பி எழுந்து, ‘நான் பத்திரிகையில் எழுதிய கட்டுரை, தோழர் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்’ என்றார். ஆனால் கூட்டத்தில் இருந்தவர்கள் ‘ஆசைத்தம்பி மன்னிப்பு கேட்க விதம் சரியில்லை’ என்று கூச்சலிட்டனர். மீண்டும் எழுந்த ஆசைத்தம்பி, ‘நான் வருத்தம் தெரிவித்த முறை சரியில்லை என்றால் ‘தனிஅரசு’ இதழில் தலையங்கம் பகுதியை ‘மொட்டை தலையங்கமாக’ (அதாவது எதுவும் எழுதாமல் வெற்றிடமாக விடுவது) வெளியிடுவேன்’ என்று ஆத்திரமாகக் கூறி அமர்ந்தார்.
இருந்தபோதும் கூச்சல் அடங்கவில்லை. உடனே அண்ணா மேஜை மீது ஏறி நின்று, ‘தம்பிமார்களே, தோழர்களே அமைதியாக இருங்கள்’ என்று தழுதழுத்த குரலில் கேட்டுக் கொண்டார். இருந்தபோதும் கூட்டத்தில் அமைதி ஏற்படவில்லை. இத்தனை களேபரங்களோடு அந்த காவலர் கூட்டம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் 1956-ம் ஆண்டு திருச்சியில் மாநாடு நடைபெற்றது. அதில், தேர்தலில் திமுக போட்டியிடுவதா? அல்லது தேர்தலை புறக்கணிப்பதா? என தொண்டர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தேர்தலில் போட்டியிடலாம் என்று பெருவாரியானவர்கள் தெரிவித்தனர். அதன்படி தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
1960-ம் ஆண்டு பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக சென்னையில் பொதுக்குழு கூடியது. கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக அரங்கின் ஓர் மூலையில் பொதுச் செயலாளர் தேர்வைப் பற்றி அண்ணாவும், சம்பத்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டியின்றி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அண்ணா கூறினார்.
அதற்கு சம்பத், பொதுச் செயலாளராக நீங்கள் வருவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் தேர்தல் நடக்கட்டும் என்றார். ஆனால் அண்ணா அதற்கு உடன்படவில்லை. உடனே சம்பத், ‘இதுதான் உங்கள் இறுதியான முடிவு என்றால் நீங்களே பொதுச் செயலாளராக இருந்து கொள்ளுங்கள்’ என்று பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டார். இந்த உரையாடல் குறித்து அடுத்தக்கட்ட தலைவர்களிடம் அண்ணா தெரிவித்தார். பின்னர் போட்டியின்றி அண்ணாவே பொதுச் செயலாளராக இருக்கலாம் என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அண்ணா பேசும்போது, “என் தம்பிமார்களே நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை மதிப்பதில்லை; என் பேச்சைக் கேட்பதும் இல்லை” என்று மிகவும் வருத்தமுடன் பேசினார்.
அதையடுத்து, திமுக ஆட்சி மன்றக் குழு, சொத்து பாதுகாப்புக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. ஆட்சி மன்றக் குழுவில் 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் 30-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இதில் நாவலர் நெடுஞ்செழியன் 112 வாக்குகளும், ஏ.கோவிந்தசாமி 102 வாக்குகளும், எம்.பி.சுப்பிரமணியம் 85 வாக்குகளும், கலைஞர் 64 வாக்குகளும், மதுரை முத்து 60 வாக்குகளும் பெற்று ஆட்சிமன்றக் குழுவுக்கு 5 பேர் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சொத்து பாதுகாப்பு குழுவுக்கு நடந்த தேர்தலில் ஈவிகே சம்பத் 98 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் வேலூர் மா.பா.சாரதி, விருத்தாசலம் செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம் சொத்து பாதுகாப்பு குழுவில் 98 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஈவிகே சம்பத்தை திமுக பொருளாளராக ஆக்காமல் ஆட்சி மன்றக் குழுவில் 64 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற கலைஞரை பொருளாளராக அண்ணா நியமித்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஏன், நாவலர் கூட இதுதொடர்பாக அண்ணாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்ததுண்டு.
அண்ணா இவ்வாறு முடிவு எடுத்ததற்குக் காரணம் மதுரை முத்துவும், அன்பில் தர்மலிங்கமும்தான். அவர்கள் இருவரும்தான் அண்ணாவை வற்புறுத்தி, பொருளாளர் பதவியை கலைஞருக்கு வழங்கச் செய்தார்கள் என்றெல்லாம் அன்றைக்கு பேச்சு அடிபட்டது.
பொதுச் செயலாளர் மற்றும் குழுக்கள் தேர்தல் முடிந்த மறுநாள், கே.ஏ.மதியழகன் தென்னகன் பத்திரிகை அலுவலகத்தில் திமுக சார்புடைய வழக்கறிஞர்கள், பட்டதாரிகள், மாணவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது அவர்களிடம், ‘பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் முடிவு எப்படியிருந்திருக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தினர், ‘நீங்களும் சிற்றரசுவும் நின்றிருந்தால் போட்டி கடுமையாக இருந்திருக்கும். ஆனாலும் உங்களுக்கே வெற்றி வாய்ப்பு கிட்டியிருக்கும். நீங்களும் கலைஞரும் போட்டியிட்டிருந்தால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று நீங்களே பொதுச் செயலாளராக ஆகியிருப்பீர்கள்’ என்றனர்.
அப்போது மதியழகன், ‘பொதுச் செயலாளர் பதவிக்கு கலைஞர் போட்டியிடுவார் என்று யார் சொன்னார்கள்?’ என்று மாணவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ‘நாங்கள் பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்தபோது வழியில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது மதுரை முத்துவும், அன்பில் தர்மலிங்கமும், பொதுச் செயலாளர் பதவிக்கு கலைஞர் போட்டியிட உள்ளதாக சொன்னார்கள். அதற்கு நாங்கள், கலைஞர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லையே என்று சொன்னோம்’ என்று மாணவர்கள் கூற, மதியழகன் சிரித்துக் கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியில் திராவிட இயக்கத்தின் தளகர்த்தர்களாக விளங்கியவர்கள் சொ.முருகப்பா, வைகா சண்முகம் ஆகியோராவர். அதற்கு அடுத்தக்கட்ட தலைவராக விளங்கியவர் ஒழுக்கமும், உயர் பண்பும், எளிமையும் ஒருங்கே பெற்ற ராமசுப்பையா. அவருடைய மகன்கள்தான் திரைப்பட இயக்குநர் எஸ்பி. முத்துராமன் மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோர்.
கிழக்கு முகவை மாவட்டத்தில் முக்கியமான தலைவராக விளங்கியவர் ராமசுப்பையா. களப்பணி ஆற்றுவதில் யாருக்கும் சளைத்தவரல்ல. திருக்கோஷ்டியூரில் திமுக சார்பில் கண்ணதாசன் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர்களில் முதன்மையானவர் ராமசுப்பையா.
இன்றைக்கு திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆரம்ப காலகட்டங்களில் கட்சியில் எத்தனையோ விமர்சனங்கள், குழப்பங்கள், கலகக் குரல்கள் இருந்தபோதும் அண்ணா என்ற தனி ஆளுமையால் அவற்றையெல்லாம் சமாளித்து கட்சியை வழி நடத்தினார். கட்சிக்குள் எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருந்தன. முக்கிய நிர்வாகிகள் குழுக்களாகப் பிரிந்து கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தினர். சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் வெளியேறினர். இருந்தபோதும் தன்னுடைய பிரச்சார வலிமையால் மக்களிடம் கட்சியை கொண்டு சென்று, தவிர்க்க முடியாத கட்சியாக திமுகவை வளர்த்தெடுத்தார்.
1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவுக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி கிட்டியது. நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட ஈவிகே சம்பத் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றார். இந்தி திணிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடுமையாகப் போராடினார்; வாக்குவாதம் செய்தார். அதன் பிறகுதான் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று நேருவும் உத்தரவாதம் அளித்தார். அதுகுறித்து அடுத்து பார்ப்போம்...
(தொடர்வோம்...)