திமுகவை வளர்த்தெடுத்த ஆணிவேர்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 90

புதுக்கோட்டை துரை மதிவாணன், தன் கைப்பட எழுதி வழங்கிய கடிதமும், அவரது வாழ்க்கை வரலாறு நூலும்.

புதுக்கோட்டை துரை மதிவாணன், தன் கைப்பட எழுதி வழங்கிய கடிதமும், அவரது வாழ்க்கை வரலாறு நூலும்.

Updated on
4 min read

சென்னை மாகாணத்தின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம் அதாவது புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மாவட்டத்தில் அன்றைக்கு திமுகவின் முக்கியத் தலைவராக அருணாசலம் இருந்தார். திருச்சி மாவட்டம் என்பது மிராசுதார்கள் நிறைந்த காவிரி வளம் நிறைந்த பூமியாகும்.

அன்றைய காலத்தில், அன்பில் தர்மலிங்கம், எம்.எஸ்.மணி, புதுக்கோட்டை துரை மதிவாணன் போன்றவர்கள் திமுகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கள முன்னோடிகளாக விளங்கினர். அப்போதெல்லாம் அன்பில் தர்மலிங்கத்தை ‘அன்பு... அன்பில்’ என்றுதான் சுருக்கமாக கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் அழைப்பது வழக்கம். அன்றைய திருச்சி மாவட்டத்தில் லால்குடி ஊராட்சி மன்ற பகுதி உறுப்பினராக இருந்தார். ஜில்லா போர்டு மெம்பர் என்றும் கூறுவார்கள்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அன்பு, அண்ணாவோடு மிகவும் நெருக்கமாக இருந்தார். அதேபோல், துரை மதிவாணனும் அண்ணாவுக்கு நல்ல அறிமுகம். திமுகவின் முக்கிய தலைவர்கள் புதுக்கோட்டை வரும்போதெல்லாம் அவர்களை உபசரித்து, இரவு நேரப் பொதுக் கூட்டங்களுக்கு சைக்கிளிலோ, மாட்டு வண்டிகளிலோ அல்லது பிற வாகனங்களிலோ அழைத்துச் செல்வது மதிவாணன்தான்.

திமுகவில் உள்ள தொண்டர்கள் ஒருவருக்கொருவர் அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் என்றுதான் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வது வழக்கம். அப்போது மாவட்டச் செயலாளர் தேர்தல் நடந்தது. புதுக்கோட்டைக்குச் சென்ற அன்பில், மதிவாணனைச் சந்தித்து மாவட்டச் செயலாளர் தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கான வேலைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி மாவட்டச் செயலாளராக அன்பில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் சுற்றிச் சுழன்று செயலாற்றினார் மதிவாணன். அதேபோல் தானும் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வானார்.

மாவட்டச் செயலாளர் போட்டியில் அன்று களத்தில் இருந்தவர்கள் அன்பில், திருச்சி எம்.எஸ்.மணி, தாத்தையங்கார்பேட்டை முத்துக்கருப்பன் ஆகியோர்தான். அன்பிலைப் பொறுத்தவரை எல்லா தலைவர்களோடும் சிரித்த முகத்தோடு பழகும் தன்மையுடையவர். அதேபோல் பிற கட்சித் தலைவர்களிடமும் வேடிக்கையாகப் பேசி அவர்களையும் கவர்ந்து விடுபவர். அவர்களின் நட்பையும் பெற்றவர்.

அன்றைய காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவர் காமராஜருக்கு நெருங்கியவராக இருந்த திருச்சி டி.எஸ்.அருணாசலம், அன்பிலைப் பார்த்து ‘எல்லா கட்சிக்காரங்களும் உன்னை விரும்புறாங்கய்யா’ என்று பெருமையாகச் சொன்னதுண்டு.

திருச்சி மாவட்டத்தில் அன்றைக்கு 10 தாலுகாக்கள் இருந்தன. வட்டச் செயலாளர் தாலுகாவுக்கு 6 பிரதிநிதிகள் என 60 பேர் வாக்களித்து மாவட்டச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திமுகவின் சட்டதிட்டங்களிலும் இவ்வாறே வரையறுக்கப்பட்டிருந்தது. அன்பிலுக்காக புதுக்கோட்டை வட்டாரத்தில் கொளத்தூர், ஆலங்குடி, திருமயம், புதுக்கோட்டை நகரம் ஆகிய பகுதிகளில் அன்பிலை ஆதரித்து வாக்கு சேகரித்து வெற்றி பெற வைத்தார் மதிவாணன். அண்ணாவின் நெருங்கிய சகாவான வழக்கறிஞர் எம்.எஸ்.வெங்கடாச்சலம், வேலாயுதம்பாளையம் ரத்தினவேலு உள்ளிட்டோர் மதிவாணனுடன் இணைந்து களப்பணியாற்றினர்.

1960 - 62 காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் திமுகவினரின் செயல்பாடுகள் முழு வீச்சில் இருந்தன. ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள், காவலர் கூட்டம் (அப்போது திமுகவில் காவலர் கூட்டம் என்று ஒரு அணி இருந்தது), மாநாடு என அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டே இருந்தன. அந்த வகையில் 1962 தேர்தலுக்கு முன் திருச்சி மாவட்டம் சார்பில் கலைஞர், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வரவழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்காக ஒவ்வொரு தாலுகாவும் ஆயிரம் ரூபாய் நிதி தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை.

இதற்கு முன்பு 6.2.1959-ம் ஆண்டில் புதுக்கோட்டையில் மாநிலப் பொதுக் குழு நடத்தப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நேரத்தில்தான் துரை மதிவாணனுக்கு திருமணம் நடந்தது. திருமண வேலைகளோடு பொதுக்குழு நடத்துவதற்காக மாவட்டச் செயலாளர் அன்பில், எம்.எஸ்.மணி, திருச்சி பராங்குசம் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு நிதி வசூலிப்பில் ஈடுபட்டார். ஏறத்தாழ 4 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

அன்றைக்கு திருச்சி மாவட்டத்தில் தீரர்கள் அடங்கிய கட்சியாக திமுக இருந்தது. தஞ்சாவூருக்கு கலைஞர் வரும்போதெல்லாம் திருச்சிக்கும் வந்து கூட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. திராவிடப்பண்ணை முத்துகிருஷ்ணன் என்பவர் பதிப்பகம் நடத்தி வந்தார். அங்கு கட்சி தொடர்பான பிரசுரங்கள் தயார் செய்வதுண்டு.

அன்றைக்கு திருச்சி வட்டாரத்தில் துரை மதிவாணன், அன்பில் தர்மலிங்கம், பொன்மலை பராங்குசம், திருச்சி எம்.எஸ்.மணி, நாதன் கம்பெனி பாண்டுரங்கன், திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன், எஸ்.ஏ.ஜி. ரஃபி, ஐ.எம்.ஷெரீப், திருவெறும்பூர் காமாட்சி, பெரியசமி, முருகேசன், துறையூர் து.ப.அழகுமுத்து (இவர் பின்னாளில் திமுக கொறாடாவாக இருந்தார்), குளித்தலை முத்துகிருஷ்ணன், கந்தசாமி, இளமுருகு, பொற்செல்வி, மணப்பாறை குமாரவேலு, கணபதி, அரியலூர் சிவபெருமாள், பெரம்பலூர் குணசேகரன், வேலாயுதம்பாளையம் ரத்தினவேலு, கொப்பம்பட்டி ஆறுமுகம், கல்லக்குடி தம்புசாமி என பல முக்கிய தலைவர்கள் இருந்தனர்.

இவர்களோடு திருச்சி சங்கரன் பிள்ளை, வானமாமலை, எம்.எஸ்.வெங்கடாச்சலம், தாத்தையங்கார்பேட்டை முத்துக்கருப்பன், மணப்பாறை கரு.தமிழழகன் (இவர் சம்பத்தின் தீவிர ஆதரவாளர்), திருச்சி நெடுமாறன் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பொதுமக்கள், தொண்டர்களிடம் சென்று நிதி வசூல் செய்து, பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதுண்டு. கட்சிக்காக எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, செலவு விவரங்கள் உள்ளிட்ட கணக்கு விவரங்களை தவறாமல் மாவட்டக் கழகத்திடம் ஒப்படைத்து விடுவார்கள். இதுதான் வரையறுக்கப்பட்ட நடைமுறையாக அன்றைக்கு இருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே துரை மதிவாணன் ஈவிகே சம்பத்தின் ஆதரவாளராக இருந்தார். வேலூரில் நடைபெற்ற தலைமை செயற்குழுவில் சம்பத்துக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு மிகவும் வேதனைப்பட்டார். இதுகுறித்து அன்பிலிடம் துரை மதிவாணன் கடுமையாகப் பேசியது உண்டு.

இதற்கிடையே ஈவிகே சம்பத் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனால் திமுகவுக்குள் குழப்பம் நிலவியது. சென்னை திருவொற்றியூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சண்முகம் இல்லத்தில் அண்ணா தலைமையில் காவலர் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன், கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டுக்கு மதிவாணன் சென்றார். அதற்கு முதல் நாள் வெளிவந்த ‘முரசொலி’ பத்திரிகையில், திமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக கலைஞரின் அறிக்கை வெளிவந்திருந்தது. மதிவாணனோடு உடன் சென்ற திருச்சி ஐ.எம்.ஷெரீப், கலைஞரின் காலில் விழுந்து, ‘பொருளாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை நீங்கள் திரும்பப்பெற வேண்டும்’ என்று கதறி அழுதார். அப்போது கலைஞர், ‘நீங்கள் காவலர் கூட்டத்துக்குச் செல்லுங்கள். நான் பின்னால் வருகிறேன்’ என்று கூறினார்.

இத்தகைய சூழலில், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் சம்பத்திடம் சென்று பேசி அவரை சமாதானப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அவரும் காவலர் கூட்டத்தில் பங்கேற்க வருவதாக செய்தி பரவியது. இதனால் கூட்டத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காரசாரமாகப் பலர் பேசினர். அவர்களை அண்ணா சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. கண்கலங்கிய அண்ணா, தழுதழுத்த குரலில் பேசினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது.

திமுகவில் ஈவிகேஎஸ் சம்பத்தின் பிரச்சினை பெரிதாக அப்போது பேசப்பட்டது. இது அண்ணாவின் தம்பிகளை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதுகுறித்து என்னிடமும் மதிவாணன் சொன்னதுண்டு. இவ்வாறெல்லாம் அன்றைக்கு இருந்த எத்தனையோ தலைவர்கள் திமுகவை அரும்பாடுபட்டு வளர்த்தார்கள். வியர்வை சிந்தி வளர்த்த அந்த கட்சிதான் இன்றைக்கு ஆல விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்கிறது.

திமுகவில் இருந்து 1962 - 63-களில் விலகிய ஈவிகே சம்பத் ‘தமிழ் தேசியக் கட்சி’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். திமுகவில் இருந்து சம்பத் விலகுவதற்கான காரணங்களுள் முக்கியமானது அரசியலில் சினிமா மாயை இருக்கக் கூடாது என்பதுதான். திராவிடம் என்பது தமிழ் தேசியத்தோடு கூடிய தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும். அதை நோக்கியே திமுக பயணிக்க வேண்டும். தன்னொழுக்கம் வேண்டும், சுய புகழ்ச்சி, துதிபாடுதல் கூடாது என்றெல்லாம் தனது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்தார்.

<div class="paragraphs"><p>புதுக்கோட்டை துரை மதிவாணன், தன் கைப்பட எழுதி வழங்கிய கடிதமும், அவரது வாழ்க்கை வரலாறு&nbsp;நூலும்.</p></div>

புதுக்கோட்டை துரை மதிவாணன், தன் கைப்பட எழுதி வழங்கிய கடிதமும், அவரது வாழ்க்கை வரலாறு நூலும்.

சம்பத்துக்கும் கலைஞருக்கும் இடையே பனிப்போர் இருந்துகொண்டே இருந்தது. அது இலைமறை காயாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே வந்தது. இந்த விவகாரம் அண்ணாவுக்கு தெரிய வந்தபோதும் அதை கண்டும் காணாமல் இருந்து விட்டார்.

திமுகவில் இருந்து சம்பத் வெளியேறியபோது அவரோடு மதிவாணனும் வெளியேறினார். மேலும் கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன், கோவை செழியன், பொறையாறு ஜம்பு, கரு. தமிழழகன், ஆர்.எஸ்.பாண்டியன், மதுரை ஆ.ரத்தினம், ஜெயகாந்தன் போன்ற பலரும் விலகி தமிழ் தேசியக் கட்சியில் இணைந்தனர். பின்னாளில் கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோரின் விருப்பத்தின்பேரில் 1964-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரை குற்றாலத்தில் சந்தித்து தமிழ் தேசியக் கட்சியை காங்கிரசுடன் இணைத்துக் கொண்டார் சம்பத். அப்போது பழ.நெடுமாறனும் இருந்தார். தமிழ் தேசிய கட்சியைப் பற்றி விரிவான பின்னர் பதிவு செய்கிறேன்.

அன்றைக்கு இருந்த திமுக தொண்டர்கள் தன்னலம் கருதாமல் கட்சிக்காக அரும்பாடு பட்டார்கள். அதுவும் தேர்தல் என்று வந்து விட்டால், தூக்கத்தை மறந்து இரவும் பகலும் வெற்றிக்காக உழைத்தார்கள். அன்றைக்கு தேர்தல் செலவுக்கு என்று தொண்டர்களுக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை. அவர்களே தங்கள் கைக்காசை செலவழித்து தேர்தல் பணியாற்றினார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைக்குப் போட்டியிட்ட இரா.செழியன், வெறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மட்டுமே தேர்தல் செலவு செய்து வெற்றி பெற்றார். அதற்கு காரணம் திமுகவின் பிரச்சாரங்கள், அண்ணாவின் தாக்கம் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ரூ.50 கோடி, 60 கோடி என செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அந்த அளவுக்கு அரசியல் இன்றைக்கு ‘காஸ்ட்லி’யாகி விட்டது.

அன்றைக்கு எங்கள் ஊர் பக்கத்தில் திராவிட மணி என்ற ஒரு பேச்சாளர் இருந்தார். கட்சி அலுவலகத்திலேயே தங்குவார். கூழோ, கஞ்சியோ குடித்துவிட்டு இரவில் அங்கேயே தூங்குவார். மறுநாள் காலை எழுந்து பம்ப் செட்டில் வேட்டை, சட்டையை ‘ஏரோப்ளேன்’ பிராண்ட் நீலக்கலர் சோப்பால் துவைத்து, காயப்போடுவார். பின்னர் குளித்து விட்டு வெள்ளை வெளேர் என்று இருக்கும் வேட்டி சட்டையை அணிந்து கொண்டு சைக்கிளிலோ, மாட்டு வண்டியிலோ கட்சி பிரச்சாரத்துக்குக் கிளம்பி விடுவார். இப்படி 24 மணி நேரமும் கட்சி... கட்சி... என்று வாழ்ந்து மறைந்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள்.

இன்றைக்கு திராவிட இயக்கத்தில் இருந்து நான் விலகி இருந்தாலும் கலைஞர் மீது எனக்கு இருந்த தனிப்பட்ட மரியாதையும், அன்பும் இன்றும் குறையவில்லை. என்னையும் அவர் அப்படித்தான் தனது இறுதிகாலம் வரை வைத்திருந்தார். ‘ராதா’ என்று அன்புடன் என்னை அழைப்பார். அரசியல் கட்சிகளிலேயே ‘முதல் செய்தித் தொடர்பாளர்’ என்ற பணியை எனக்குத் தந்து பெருமைப்படுத்தியவர் கலைஞர். என் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தார். நானும் அவரது நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தேன்.

ஆனால் இன்றைக்கு கட்சியி்ல் ஏற்பட்ட மாற்றங்கள், கட்சி போகும் போக்கு இவை பற்றியெல்லாம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை...

(தொடர்வோம்...)

<div class="paragraphs"><p>புதுக்கோட்டை துரை மதிவாணன், தன் கைப்பட எழுதி வழங்கிய கடிதமும், அவரது வாழ்க்கை வரலாறு&nbsp;நூலும்.</p></div>
காங்கிரஸ் தேசிய தலைவராக தமிழரை நியமிக்க விரும்பிய நேரு - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 89

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in