

பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் இருந்து இந்தியாவில் நீதி பரிபாலனம் எவ்வாறெல்லாம் இருந்தது என்பதையும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் குறித்தெல்லாம் கடந்த அத்தியாயங்களில் சுருக்கமாகப் பதிவு செய்திருந்தேன். அதேபோல், நீதிமன்றங்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து வரும் வழக்கு விவகாரங்கள் குறித்தும் பார்த்தோம்.
அந்த வகையில் தற்போது பூதாகரமாகக் கிளம்பியிருக்கும் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் நாடெங்கும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மக்களவைத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர்.
அதில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் இதற்கு முன்பும் பல நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறி பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
1990-ம் ஆண்டு காலகட்டத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் வி.ராமசாமி. அவர் பதவி வகித்த காலத்தில், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு ஆடம்பரமாக செலவு செய்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 1991 -ம் ஆண்டு பிப்.1-ம் தேதி, அவரை பதவி நீக்கக் கோரியும், அவருக்கு வேறு எந்த சட்டப் பணிகளையும் ஒதுக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தும் ஒரு தீர்மானத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் நிறைவேற்றியது.
பாரதிய ஜனதா கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மான அறிவிப்பைச் சமர்ப்பித்தன. 1991-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட மக்களவைத் தலைவர் ரபி ரே, இந்த விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபோத் தின்கர்ராவ் தேசாய் மற்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தார். அந்தக் குழு 14 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் ராமசாமி குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியது.
மேலும் நீதிபதி வி.ராமசாமி மீதான பதவி நீக்க தீர்மானம், 1993-ம் ஆண்டு மே 10-ம் தேதி மக்களவையில் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் வைக்கப்பட்டது. நீதிபதி ராமசாமி சார்பில், பிரபல வழக்கறிஞரும், காங்கிரஸ் அரசியல்வாதியுமான கபில் சிபில் வழக்காடினார். இதற்காக நாடாளுமன்றத்தில் சாட்சிக் கூண்டு அமைக்கப்பட்டு அதில் நின்று கொண்டு அவர் தனது வாதங்களை எடுத்து வைத்தார். தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சபையில் இருந்த உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாததால், அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் நீதிபதி வி.ராமசாமி பதவி நீக்கம் செய்யப்படவில்லை.
இதேபோல், இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 8-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மீது பதவி நீக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தீர்மானங்கள் கொடுத்தது உண்டு. நீதிபதிகள் எந்தவித அரசியல் தலையீடுகளுக்கும், ஆட்சி அதிகாரங்களுக்கும் வளைந்து கொடுக்காமல் துலாக்கோல் போல் நீதி வழங்க வேண்டும் என்று நம்முடைய அரசியல் சட்டங்கள் சொல்கின்றன.
நீதி துறையின் சுதந்திரம் அதாவது அரசியல் தத்துவமான செப்பரேஷன் ஆஃப் பவர்ஸ் என்பார்கள். அதன்படி நாடாளுமன்றம், நீதிமன்றம், அமைச்சரவை ஆகிய மூன்று துறையும் சுதந்திரமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்குள் இயங்க வேண்டும். ஒரு துறை மற்றொரு துறையின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது; செலுத்தவும் கூடாது. நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக ஏதேனும் வழக்குகள் வந்தால் அதை நீதிமன்றங்கள் சீராய்வு செய்து, அந்தச் சட்டங்கள் தவறானவை என்பது வழக்கு விசாரணையின் முடிவில் தெரிய வந்தால் அதன் மீது சட்டத்தின் பார்வையில் தீர்ப்பு வழங்குவதுதான் (ஜுடிசியல் ரிவியூ) நீதிபதிகளின் பணி.
அமெரிக்க அரசமைப்புச் சட்டம், பிரிட்டன் மரபுகள் அதாவது பிரிட்டனில் எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் நீதிபதிகள் நீக்கம் என்ற ஷரத்து கிடையாது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனத்தில் இந்த ஷரத்து சேர்க்கப்பட்டது. நீதிபதிகள் பதவி நீக்கம் என்பது மிகவும் சிக்கலான, நீண்ட நெடிய தொடர் பணியாகும். அதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே ஆளுங்கட்சியே நினைத்தாலும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 124(4)-ன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், பிரிவு 217, 218-ன்படி உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான விளக்கம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நீதிபதிகள் நீக்கம் கோரும் தீர்மானத்துக்கு மக்களவையில் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும். இந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா அல்லது நிராகரிக்கலாமா என்பது குறித்து மக்களவைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவரான துணை குடியரசுத் தலைவரும் மட்டுமே முடிவு செய்வார்கள்.
அந்தத் தீர்மானத்தை ஏற்பதாக இருந்தால், அதற்காக ஒரு விசாரணைக் குழு அமைப்பார்கள். அந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்கள் இடம்பெறுவார்கள். அந்தக் குழு கொடுக்கும் பரிந்துரையின் பேரில் தீர்மானத்தைக் கொண்டு வரலாம். இதுகுறித்தான விவாதம் நாடாளுமன்ற அவை மற்றும் மாநிலங்களவையில் நடக்கும்போது சம்பந்தப்பட்ட நீதிபதியோ அல்லது அவரது சார்பில் வேறு ஒரு வழக்கறிஞரோ தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம். அந்த வகையில்தான் நீதிபதி வி.ராமசாமிக்கு ஆதரவாக கபில் சிபில், கருத்துகளை முன்வைத்தார். இதுதான் சட்டரீதியான நடவடிக்கை.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்படும். அல்லது சம்பந்தப்பட்ட நீதிபதியே தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்யலாம். அவ்வாறு செய்துவிட்டால், அந்தப் பிரச்சினை அதோடு முடிவுக்கு வந்து விடும். அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
ஒருவேளை நீதிபதி அதற்கு ஆட்சேபம் தெரிவித்தால், குற்றம் நிரூபிக்கப்பட்ட அந்த நீதிபதிக்கு உச்ச நீதிமன்றத்திலோ, அல்லது உயர் நீதிமன்றத்திலோ அவருக்கு வழக்குகள் ஒதுக்க மாட்டார்கள். மேலும் அவர் நீதிமன்றத்தில் அமரவோ, விசாரிக்கவோ முடியாது. இது ஒரு மரபு. சம்பந்தப்பட்ட நீதிபதியின் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதுகுறித்தான அறிக்கையை பிரதமருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அனுப்பி வைப்பதும் உண்டு.
நீதிபதி வி.ராமசாமியின் மீது குற்றச்சாட்டுகள் கூறியது போன்ற மேலும் சில நீதிபதிகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதுபற்றி சுருக்கமாகப் பார்ப்போம்...
நீதிபதி செளமித்ரா சென். இவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். 1984-ல் ஒரு வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ரிசீவராக இருந்தபோது, ரூ.33.23 லட்சத்தை முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் செளமித்ரா சென் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தலைமை நீதிபதி பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை அன்றைய குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பி வைத்தார். இதற்கிடையே, செளமித்ரா சென் மீதான பதவி நீக்கத் தீர்மானம் 2011-ல் ராஜ்யசபா மற்றும் மக்களவையில் விசாரணை நடந்தபோது, தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, நீதிபதி செளமித்ரா சென், தனது பதவியை ராஜினாமா செய்தார். சுதந்திர இந்தியாவில், பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் உயர் நீதிமன்ற நீதிபதி இவரே.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.டி.தினகரன், 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் பி.டி.தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சர்ச்சைகள் வெளிவந்ததால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் சிக்கிம் உயர் நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.
இவர் மீது 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி உட்பட இந்திய பார் கவுன்சிலின் பல உறுப்பினர்கள் பி.டி.தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவர் தனது சொந்த ஊரான அரக்கோணத்தில் தமிழ்நாடு நில சீர்திருத்தங்களால் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமான சொத்துகள் வாங்கியதாகக் கூறப்பட்டது. இவர் மீதும் பதவி நீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
ஊழல் மற்றும் நீதித்துறை அலுவலகத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், நீதிபதி தினகரனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை ராஜ்யசபா தலைவர் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நீதிபதி தினகரன் எந்த நீதித்துறை செயல்பாடுகளையும் செய்யவில்லை. பின்னர், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை ஜூலை 29, 2011 அன்று ராஜினாமா செய்தார்.
அடுத்ததாக நீதிபதி பார்த்திவாலா. மே 2022 முதல் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக பதவி வகித்தவர். 2015-ல் தேச துரோக வழக்கு விசாரணையின்போது, ‘இடஒதுக்கீடு நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து விட்டது’ என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
‘அவர் சாதி வெறி மனப்பான்மை கொண்டவர் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அந்த தீர்மானம் என்னவானது என்றே தெரியவில்லை.
அடுத்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குங்குலி. தன்னிடம் பயிற்சிக்கு வந்த குவாலியர் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்தார்.
விசாரணை முடிவில், குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் இல்லை என்று சொல்லப்பட்டது. இதற்கிடையே மாநிலங்களவையில் அவருடைய பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேநேரம், பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிகளின் அறிக்கை அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் சட்ட நடவடிக்கையில் இருந்து கங்குலி தப்பித்தார்.
அவரைத் தொடர்ந்து பிரச்சினையில் சிக்கியவர் ஆந்திரா - தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.வி.நாகார்ஜுன ரெட்டி. இவரது பதவிக் காலத்தில், தலித் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான பாகுபாடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் மாநிலங்களவை உறுப்பினர்கள், பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் அந்த தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் சட்ட நடவடிக்கையில் இருந்து நாகார்ஜுன ரெட்டி தப்பித்தார்.
அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா. 2018-ம் ஆண்டு, சட்டத் துறையிலேயே எப்போதும் நடந்திராத வகையில் இவர் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கூட்டாக உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே இவருக்கு எதிராக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அதில், தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா, சிலருக்கு மட்டும் வழக்குகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கிறார் என்று குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, ‘தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் அலுவல் நிர்வாகத்தைச் சார்ந்தவை. அதை தவறான நடத்தை என்று சொல்ல முடியாது. அவர் ஏதாவது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் தீர்மானம் கொண்டு வாருங்கள்’ என்று கூறி, பதவி நீக்கத் தீர்மானத்தை மாநிலங்களவைத் தலைவராக இருந்த வெங்கய நாயுடு ஏற்க மறுத்து, அதை தள்ளுபடி செய்துவிட்டார்.
அடுத்ததாக நீதிபதி எஸ்.என்.சுக்லா. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். 2018-ம் ஆண்டு காலகட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்ததாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார்.
மேலும், விசாரணை முடிவு வரும் வரை அவருக்கு எந்த வழக்கும் ஒதுக்கக் கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்பேரில் எஸ்.என்.சுக்லா மீது நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு தீபக் மிஸ்ரா கடிதம் எழுதினார். பதவி நீக்கும் தீர்மானத்தைக் கொண்டுவரவும் பரிந்துரைத்தார். ஆனால் 2020-ம் ஆண்டில் ஓய்வு பெறும் சூழலில் அவர் பதவி விலகவில்லை. அதேநேரம், ஓய்வு பெறும் வரை அவருக்கு வழக்குகளும் ஒதுக்கப்படவில்லை.
சமீபத்தில் சிக்கலில் மாட்டியவர் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. டில்லியில் உள்ள அரசு பங்களாவில் வசித்த நிலையில், கடந்த மார்ச் மாதம், அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின்போது, வீட்டில் உள்ள ஓர் அறையில் எரிந்த நிலையில், 500 ரூபாய் கட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். அவருக்கு வழக்குகள் எதுவும் ஒதுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் விசாரணை குழு விசாரித்ததில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.
தொடர்ந்து, அவரை பதவி விலகும்படி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் பதவி விலகவில்லை. அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மக்களவைத் தலைவரிடம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனு அளித்தனர். இதை ஏற்ற மக்களவைத் தலைவர், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
தற்போது, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனுடைய நிலை என்ன ஆகும் என்பது தெரியவில்லை. திருப்பரங்குன்றம் வழக்கில் மத விஷயங்களில் தலையிட்டு விட்டார் என்று எதிர் தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. அவரது தீர்ப்பில் கருத்து வேறுபாடு இருந்திருந்தால் மேல் முறையீடு செய்திருக்கலாம்.
(தொடர்வோம்...)