

பெரோஸ் காந்தி - இந்திரா காந்தி
இந்திய நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த காலத்தில் ஹிந்து சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திரும்பவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே பிரதமருடனான பனிப்போர் காரணமாக குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்த முயற்சிக்கு உடன்படவில்லை.
அதேபோல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மத அமைப்புகளும் எதிர்த்தன. சியாமா பிரசாத் முகர்ஜி, நேரு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். அவரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் அமைச்சரவையில் இருந்து 1950-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ராஜினாமா செய்ததற்கு காஷ்மீர் பிரச்சினை மட்டுமின்றி இந்தப் பிரச்சினையும் ஒரு காரணமாக இருந்தது. இதனால் நேருவின் முயற்சி கைகூடாமல் போனது.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. பிரதமராக நேரு பொறுப்பேற்றார். அதன்பிறகு ஹிந்து சட்ட மசோதாவை, திருமணச் சட்டம், மைனர் மற்றும் கார்டியன் சட்டம், தத்தெடுக்கும் சட்டம், பெண்ணுக்கு சொத்துரிமை சட்டம் என 4 பிரிவுகளாகப் பிரித்து கொண்டுவந்தார். குடியரசுத் தலைவர் உடனான பனிப்போர் தொடர்ந்ததால் இந்த விவகாரம் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டது.
இத்தகைய சூழலில் தான் பிரதமர் நேரு மற்றொரு நெருக்கடியைச் சந்தித்தார். தனது மகள் இந்திரா - பெரோஸ் காந்தி திருமணத்தில் நேருவுக்கு ஏற்கெனவே விருப்பமில்லை. இந்நிலையில், தனது மருமகனும், இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி, நாடாளுமன்றத்தில் 1957, டிசம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுதான் முந்த்ரா ஊழல். சுதந்திர இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய முதல் மிகப் பெரிய ஊழலாக அன்று பேசப்பட்டது.
கல்கத்தாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹரிதாஸ் முந்த்ரா என்பவர், அவரது நிறுவனங்களின் பங்குகளை, எல்ஐசியால் அதிக விலைக்கு வாங்க வைத்து, அதன் மூலம் சந்தை மதிப்பை உயர்த்திக் கொண்டார், இது எல்ஐசிக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியது என்பதுதான் குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத்தில் பெரோஸ் காந்தி எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அன்றைய நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக சம்பந்தப்பட்ட ஹரிதாஸ் முந்த்ரா கணிசமாக செலவு செய்தார் என்று பகிரங்கமாகவே பெரோஸ் காந்தி குற்றம்சாட்டினார்.
மேலும் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சோசலிசம்தான் எங்கள் கொள்கை என்று பறைசாற்றி விட்டு அரசின் பணத்தை தனியாருக்கு தாரைவார்த்து, ஊழலுக்கு எப்படி துணை போனீர்கள் என்று கேள்வி எழுப்பினார். சோசலிச சமுதாயம், தனியார் துறைக்குத் தடை, பொதுத்துறைக்கு ஆதரவு என்ற நேருவின் கொள்கைகளை சிலாகித்து காங்கிரஸார் பிரச்சாரம் செய்துவந்த நிலையில் முந்த்ரா ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து மக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் இருந்தது.
பொதுத்துறை நிறுவனத்தை பலப்படுத்துவதை விட்டுவிட்டு, தனியார் நிறுவன வளர்ச்சிக்கு, பொதுத்துறை நிறுவனத்தின் பணத்தை எப்படி செலவிடலாம்? அது ஊழல்தானே! அதற்குப் பிரதிபலனாகத்தான் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் அவர் பணம் செலவு செய்தார் என்பதே பெரோஸ் காந்தியின் கேள்விகளாக இருந்தன.
ஹரிதாஸ் முந்த்ராவின் 6 நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்கவே ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பணம் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் முந்த்ரா நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன.
இவற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாகக் கொண்டுதான் முந்த்ரா ஊழல் குறித்து பெரோஸ் காந்தி பேசினார். கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாமா? என நியாயமான முறையில் பரிசீலனை செய்திருந்தால் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பணத்தை முதலீடு செய்திருக்காது. இதில் ஏதோ ஒருசிலருக்கு ஆதாயம் கிடைப்பதற்காக இந்த முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் பெரோஸ் காந்தி குற்றம் சுமத்தினார்.
மேலும் அதிகாரம் பொருந்தியவர்களின் பரிந்துரையின் பேரிலேயே இந்த முறைகேடுகள் நடந்துள்ளன என்றார். ‘அதிகாரம் பொருந்தியவர்கள்’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியது தன்னுடைய மாமனார் நேருவைத்தான் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பிரச்சினை பூதாகரமாகவே, பின்னர் விளக்கம் அளித்தார். ஆனால் அந்த விளக்கம் எடுபடவில்லை. எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகளால் ஆளும் கட்சியைத் துளைத்தெடுத்தனர். அதைத் தொடர்ந்து முந்த்ரா ஊழல் குறித்து விசாரிக்க, 1958-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி நீதிபதி எம்.சி. சாக்லா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
கமிஷன் அமைக்கப்பட்ட 3-வது நாளே விசாரணையைத் தொடங்கினார் எம்.சி.சாக்லா. ஏறத்தாழ 3 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. பின்னர் குழுவின் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.
அதில் நிதியமைச்சகம் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் ‘நிதித்துறை செயலாளர் எச்.எம்.படேல் அழுத்தம் கொடுத்துள்ளார். மேலிடம் கொடுத்த நெருக்கடியால் வேறு வழியின்றி, முந்த்ரா பங்குகளை வாங்குவதற்கு ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிகள் தள்ளப்பட்டனர்’ என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் தான் நேரடியாக சம்பந்தப்படாவிட்டாலும், நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கிருஷ்ணமாச்சாரி. தான் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தானும் ஒரு வகையில் பொறுப்பு என்று அந்த முந்த்ரா முறைகேட்டுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகி முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார் கிருஷ்ணமாச்சாரி.
அதேபோல் அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். தன் பதவியின் மீது ஒரு களங்கம் வந்து விட்டால், அது எப்பேர்ப்பட்ட பதவியாக இருந்தாலும் அதை துச்சமென மதித்து உடனடியாக பதவி விலகிய காலம் அன்றைக்கு இருந்தது. ஆனால் இன்றைய நிலை...?
சுதந்திர இந்தியாவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட முதல் மிகப்பெரும் ஊழலான முந்த்ரா ஊழல் தொடங்கி பல்வேறு ஊழல்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இதுகுறித்து நீண்ட பட்டியலே உள்ளது. அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்...
கேரளாவில் காங்கிரஸ் அல்லாத முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் தலைமையில் 1957-ம் ஆண்டு அமைந்தது. ஆட்சிக்கு வந்ததும் கல்வி மேம்பாட்டுக்காக சில சட்டங்களைக் கொண்டுவந்தார் இ.எம்.எஸ். அதேநேரம் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் என ஆங்காங்கே நடைபெற்றன.
இதுகுறித்து விவரம் அறிவதற்காக இந்திரா காந்தியை கேரளாவுக்கு அனுப்பி வைத்தார் பிரதமர் நேரு. கேரளா சென்று விவரங்களை அறிந்தபின், இந்திரா காந்தி கொடுத்த அறிக்கையின் விளைவாக இந்தியாவில் 2-வது முறையாக அரசியல் சட்டம் 356-ஐப் பயன்படுத்தி இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் ஆட்சி கலைக்கப்பட்டது. அதே காலகட்டத்தில்தான் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பிரதாப் சிங் கெய்ரோன், ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இப்படியான சூழலில் பிரதமர் நேரு தனது அரசியல் செல்வாக்கை பன்னாட்டு அளவில் விரிவுபடுத்தத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவும் சோவியத் யூனியனும் உலக அரங்கில் இரண்டு பெரிய வல்லரசுகளாக உருவெடுத்தன, இது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியக் கூட்டமைப்பு (வெஸ்டர்ன் பிளாக்) மற்றும் சோவியத் யூனியன் தலைமையிலான கிழக்குக் கூட்டமைப்பு (ஈஸ்டர்ன் பிளாக்) என உலகை இரண்டாகப் பிரித்தது.
அதேபோல், வடக்கு அட்லாண்டிக் நாடுகளின் ராணுவக் கூட்டணி (நேட்டோ), தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பழைய கூட்டுப் பாதுகாப்பு அமைப்பு (சீட்டோ) ஆகிய இரண்டும் கம்யூனிச பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்டன. நேட்டோ வட அமெரிக்கா / ஐரோப்பாவிலும், சீட்டோ தென்கிழக்கு ஆசியாவிலும் கவனம் செலுத்தின.
மேலும், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளையும் சேராத நாடுகள் ஒருங்கிணைந்து அணிசேரா நாடுகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் உச்சி மாநாடு யூகோஸ்லாவியாவின் பெல்கிரேடில் 1961-ம் ஆண்டு செப்.1 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியா, எகிப்து போன்ற நாடுகளின் தலைவர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். காலனித்துவ நீக்கம், அமைதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இந்த நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதன் தலைவர்களாக ஜவஹர்லால் நேரு (இந்தியா), ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ (யூகோஸ்லாவியா), கமல் அப்தெல் நாசர் (எகிப்து), சுகர்னோ (இந்தோனேசியா), குவாமே நக்ருமா (கானா) ஆகியோர் இருந்தனர். ஐ.நா. சபைக்குப் பிறகு உலக அளவில் இரண்டாவது பெரிய அரசுகளின் குழுவாக இது உள்ளது. இதில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.
இதன் முக்கிய கொள்கைகள், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல், அமைதியான முறையில் சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களைப் பின்பற்றுதல் ஆகியவையாகும். அணிசேரா நாடுகள் இயக்கம் அமைப்பதில் இந்தியப் பிரதமர் நேருவின் பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. உலகத் தலைவர்களில் ஒருவராக நேரு மதிக்கப்பட்டார். சோவியத் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய எதிர் எதிர் நாடுகளின் தலைவர்களான குருசேவ், கென்னடி போன்றவர்களுடன் நல்ல நட்பை பேணினார்.
அதேநேரம் இந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக நேரு இருந்தபோதும், ஆரம்ப காலகட்டங்களில் நேருவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்கள், நாட்கள் செல்லச் செல்ல தங்களுடைய கோபதாபங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். எதிர் வினையாற்றினர். அந்த வகையில் சர்தார் வல்லபபாய் படேல்,நேதாஜி போன்றோர் நேருவுக்கு எதிரான மனப்பான்மையில் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.
அதிருப்தி காரணமாக சிலர் காங்கிரசில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கொள்கைக்கு மாறான சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள். ராஜாஜி சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். சியாமா பிரசாத் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். ஆதரவோடு ஜனசங்கத்தைத் தொடங்கினார். இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்குள் கலகக் குரல்களும் குமுறல்களும் வெளிப்பட்டன. காங்கிரஸின் மூத்த தலைவரான பி.சி.ராய் போன்றோர் கூட நேருவின் கொள்கைகளில் விருப்பமில்லாமல் எதிர்வினையாற்றியதும் உண்டு.
மறுபுறம் காஷ்மீர் விவகாரம், சீனப் படையெடுப்பு, பாகிஸ்தான் அத்துமீறல்கள், உணவுப் பஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற பிரச்சினைகள் நாட்டில் பூதாகரமாக இருந்தன. இப்படியாக நேருவின் கடைசி ஆட்சிக் காலங்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அதேபோல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் இருந்தன.
பெரோஸ் காந்தியிடம் இருந்து பிரிந்த இந்திரா காந்தி, நேருவின் தீன்மூர்த்தி பவன் வீட்டிலேயே தங்கியிருந்தார். இதனால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார் நேரு. இந்தச் சூழலில் வெளிநாட்டுத் தூதராக விஜயலட்சுமி பண்டிட் நியமிக்கப்பட்டதற்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நேருவின் சகோதரி என்ற தகுதியைத் தவிர, வெளிநாட்டுத் தூதராக நியமிக்கப்படும் அளவுக்கு விஜயலட்சுமி பண்டிட்டுக்கு என்ன தகுதி உள்ளது என கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்பினர்.
1950 காலகட்டத்தில் திபெத்தில் சீனா நுழைந்தபோது, இந்தியாவுக்கும் பிரச்சினைகள் வரும் என்று ஏற்கெனவே பட்டேல் கூறியிருந்தார். அதேபோல், சீனர்கள் திபெத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு அனுமதித்ததன் மூலம் சீனர்கள் நம் எல்லை வரை தொடர்வார்கள் என்று 1954-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் எச்சரித்தார்.
அன்றைய ராணுவத் தளபதியாக இருந்த கே.எஸ்.திம்மையா சீனாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு, சீனாவுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார். இதனால் அவரைத் தனிமைப்படுத்தி, பின்னர் பணிநீக்கமும் செய்தார் நேரு. திம்மையாவுக்குப் பிறகு 1959-ம் ஆண்டு ராணுவத் தளபதியாக எஸ்.பி.பி.தோரட் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் தெளிவாக ஒன்றைச் சொன்னார். முன்னாள் ராணுவத் தளபதி திம்மையாவின் கருத்து சரிதான். இந்தியா மீது சீனா படையெடுக்க திட்டம் தீட்டி வருகிறது என்று கூறினார்.
இந்தியாவும் சீனாவும் சகோதர நாடுகள் என்ற கோஷம் பொய்த்து விட்டது. ராணுவ அதிகாரிகளின் கணிப்புகள், சர்தார் படேல், அம்பேத்கர் போன்றவர்களின் கருத்துகளை நேரு கவனத்தில் கொள்ளவில்லை. அதேநேரம் அந்த கணிப்புகள் உண்மையாகி விட்டன. இப்படியாக, இந்தியா மீது சீன நாட்டின் போர் மேகங்கள் சூழத் தொடங்கின.
(தொடர்வோம்...)