

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அண்மையில் சென்றிருந்தேன். வானுயர்ந்து நிற்கும் திருச்சுற்று மதில்களைப் பார்த்தபோது, அதன் உச்சியில் இருந்து தரைவரை கல்வெட்டுப் பொறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடிந்தது. தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட கோயில்கள், ஏராளமான சிறிய கோயில்களின் சுவர்களும் இதே போன்ற கல்வெட்டுகளைத் தாங்கி நிற்கின்றன.
பண்டைய சமூக, வரலாறு, பண்பாட்டுச் சூழலைத் தெரிந்துகொள்ளப் பெரிதும் துணை நிற்பவை, வரலாற்றின் முதன்மை ஆதாரமாக இருப்பவை - கல்வெட்டுகளே. எனினும், அனைத்துத் தரப்பினருக்கும் இவற்றின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டிருக்கிறதா?
ஆவணப்படுத்தும் பணிகள்: கோயில் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்தவர் கர்னல் மெக்கன்சி. இவராலும் இவரது உதவியாளர்களாலும் 1806 முதல் 1818 வரையிலான காலக்கட்டத்தில் தென்னிந்திய கோயில் கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை படியெடுக்கப்பட்டு இன்றளவும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினர் கல்வெட்டுகளில் மிகுந்த ஆர்வம் காட்டினர். 1830இல் சென்னையில் தொடங்கப்பட்ட ‘மதராஸ் இலக்கிய சங்கம்’ (Madras literary society) இதற்குச் சான்று. இதன் சார்பில் 1834 முதல் வெளியிடப்பட்ட Madras journal of Literature and science இதழானது வரலாற்றுச் செய்திகளையும் தாங்கி வந்தது. 1861இல் இந்தியத் தொல்லியல் துறை (Archeological survey of India) தொடங்கப்பட்ட பிறகு, வரலாற்றை ஆவணப்படுத்தும் பணியில் புதிய பாய்ச்சல் ஏற்பட்டது. 1872இல் ஜேம்ஸ் பர்ஜஸ் (Jas.Burgess) வெளியிட்ட ‘Indian Antiquary’, 1878இல் தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே.ஹெச்.கார்ஸ்டின் (J.H.Garstin) வெளியிட்ட, ‘Manual of the South Arcot District’ என்னும் ஆவணங்கள் குறிப்பிடத்தக்கவை.