

தள்ளாத வயதில் பெற்றோர்கள் கைவிடப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள சூழலில், பிள்ளைகளின் பொறுப்பைச் சட்டத்தின் மூலம் கட்டாயம் ஆக்குவதில் தெலங்கானா, நாட்டிலேயே முதல் மாநிலம் ஆகியுள்ளது. காலத்தின் தேவைக்கு ஏற்ற இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
தெலங்கானாவில் முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, சில நாள்களுக்கு முன், ‘தெலங்கானா ஊழியர்களின் பொறுப்புணர்வு மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதைக் கண்காணித்தல், 2026’ என்கிற சட்ட மசோதாவை முழு ஆதரவுடன் நிறைவேற்றியது.
பெற்றோரைப் பராமரிக்கத் தவறுகிற – அரசு ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, அதைப் பெற்றோருக்கு வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
கைவிடப்படும் பெற்றோர் தங்களது அடிப்படைச் செலவுகளுக்காகப் பிள்ளைகளின் ஊதியத்தில் 15 சதவீதத்துக்கு (அதிகபட்சம் ரூ.10,000 வரைக்கும்) உரிமை கோர முடியும். அதுகுறித்துப் பெற்றோர் அளிக்கும் புகாரை விசாரித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்.