

கோப்புப் படம்
தமிழ்நாட்டில் பொறுப்பேற்று இருக்கும் புதிய அரசில், சாதாரணப் பின்னணி கொண்ட பலர் அமைச்சர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளை மக்களின் பங்கேற்புடன் தீர்த்துவைக்கப் புதிய அரசு முனைப்பு காட்டுகிறது.
இது வரவேற்கத்தக்கது. உண்மையில், இவற்றை நிறைவேற்ற உள்ளாட்சிதான் சிறந்த வழி. அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் உயர்ந்து, சமூக மேம்பாட்டில் மேன்மை அடையவும் சமூக நீதியைப் பெற்று வாழ்ந்திடவும் ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்த ஆயுதம் உள்ளாட்சி அரசாங்கம்.
உள்ளாட்சியின் முக்கியத்துவம்
தமிழக உள்ளாட்சியில் வலுவான அரசாங்கத்தைக் கட்டமைத்து வலுப்படுத்தி, ஊரக மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு சார்ந்து செயல்படப் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. உள்ளாட்சி ஓர் அரசாங்கமாக அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுவிட்டது.
ஆனால், கேரளத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் அது அரசாங்கமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதா என்பது முக்கியமான கேள்வி. புதிய உள்ளாட்சி ஓர் அரசாங்கமாக உருவாவதைத் தடுப்பதில் தமிழகத்தை இதுவரை ஆண்ட இரண்டு கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன.
கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கம் மூன்று அடுக்காக இருந்தாலும் முதல் அடுக்கான கிராம ஊராட்சி வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கிராம சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு மக்கள் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மக்கள் கைக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வதில், பலரும் கவனமாக இருந்தனர். இதனால் இன்றுவரை அது கையொப்பம் வாங்கும் இடமாகவும் மனுக்கள் பெறும் இடமாகவும் மட்டுமே செயல்பட்டுவருகிறது.
கோவா மாநில வழக்கு ஒன்றில், ‘கிராம சபை எந்த விதத்திலும் மக்களவைக்குக் குறைவானது அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்துள்ளது. ஆனால், அந்தக் கருத்து பரவலாகப் பலரையும் சென்றடையவில்லை.
உயர்நிலைக் குழு
இதுவரை மூன்று முறை உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளாட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் எல்.சி.ஜெயின் குழு அறிக்கைதான் சிறந்தது என அறிஞர்கள் போற்றுவர்.