

பற்றாக்குறையின்போது தட்டுப்படுகின்ற பொருள்களின் தித்திப்பின் ருசி, அபரிமிதத்தின்போது திகட்டத் தொடங்கிவிடுகிறது. எப்போதாவது ஏற்படும் மகிழ்ச்சி எப்போதும் கிடைத்தால் ஏற்படுவதில்லை.
வெகுநாள்களாகக் காத்திருந்து, வருமா என்று எதிர்பார்த்துக் கிடைக்கும்போது, எதையும் நாம் துளித்துளியாக ருசிக்கிறோம். ஒவ்வொரு சொட்டும் அமுதமாக நமக்குச் சுவைக்கிறது. மலையில் தெரிவதில்லை, முகடுகளின் உயரம்; பள்ளத்தாக்குகளிலிருந்து பார்வையிடும்போதே புலப்படுகிறது. மனிதர்களின் அருமையும் மரங்களின் பெருமையும் மறைந்த பிறகே மனதை நெருடுகிறது.
ரசிக்கவைத்த உணவுகள்
கொளுத்தும் கோடைகூட மாம்பழங்களாலும், வெள்ளரிப்பிஞ்சுகளாலும், குளிர்விக்கும் நுங்குகளாலும் இதமாகவே இருந்தது எங்களுக்கு. தீபாவளிக்கு மட்டுமே அதிகாலையில் மொறுமொறுவென்ற பணியாரம். பொங்கலன்றே நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல். சிறப்பு நாள்களில் மட்டுமே இனிப்பு, காரம், காப்பி. முந்திரி என்பது அபூர்வப் பொருள்.
பாயசத்துக்காக வீட்டில் காயவைத்திருக்கும் முந்திரியையும் திராட்சையையும் தின்று வாங்கிக்கட்டிக்கொண்டது ஏராளம். மாமிசம் என்பது ஞாயிறு மதியத்துக்கான உணவு. இன்று வீதிகள்தோறும் விதவிதமாக அசைவ உணவு வகைகள் கிடைக்கின்றன. பிரியாணி என்பது அன்று வழியில் போகிறபோது மூச்சை உள்ளே இழுத்து முகர்ந்து பார்க்கிற அதிசயம்.
ஆண்டுக்கொரு முறை இஸ்லாத்தைச் சேர்ந்த நண்பர்கள் வீட்டில் பகிர்ந்துகொள்கிற உணவு. இன்று கடைவீதியெங்கும் கணக்கற்ற பிரியாணிக் கடைகள். பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) என்பது ஆண்டுக்கொரு முறை பொருள்காட்சியில் மட்டுமே உண்ணுகின்ற கனவுப் பண்டம். இன்றோ ‘ஆர்டர்’ செய்தால் ஐந்தே நிமிடத்தில் இல்லத்துக்கே வந்துவிடுகிறது. அடுத்த நாளுக்கு இருப்பு வைக்கவும் குளிர்பதனப்பெட்டி பல வீடுகளில் உண்டு.
உணவகத்தில் உண்பது என்றேனும் ஒரு நாள் நடக்கும் வைபவம். இட்லிக்கான சாம்பாரின் மணமே இன்னும் கொஞ்சம் சாப்பிட வைக்கும். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்கள் பசியைப் பன்மடங்காக்கும். அரைக்கும் இயந்திரம் அதிகமில்லாத அந்த நாள்களில் இட்லி என்பதே வீட்டில் அரிதான உணவு.
அன்று ‘ஹோட்டல் தோசைபோல ஊற்றிக்கொடுங்கள், நிறைய எண்ணெய் விட்டு மொறுமொறுவென்று’ என்று அடம்பிடிப்போம். இன்று உணவகத்தில் ‘வீட்டுத்தோசைபோல வேண்டும்’ என்று கட்டளையிடுகிறோம். நினைத்த நேரத்தில் வீட்டுக்கே உணவுப் பண்டங்களை விநியோகிக்கின்ற வசதிகள் வந்துவிட்ட காலத்தில் வாழ்கிற தலைமுறைக்கு, அன்றைய ஏக்கங்கள் புரிந்திருக்க நியாயமில்லை.