

இந்திய நாட்டில் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்ச நீதிமன்றம் உள்ளது. இதற்கு முன்பாக 1774-ல் கிழக்கிந்திய கம்பெனியால் கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்தியாவின் பழமையான நீதிமன்றங்களில் இதுவும் ஒன்று. இது முதலில் வில்லியம் கோட்டை நீதிமன்றம் என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் உச்ச நீதிமன்றமாகச் செயல்பட்டு, 1861 சட்டத்தின் கீழ், 1862-ல் கொல்கத்தா உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, உயர் நீதிமன்றமாக மாறியது.
இந்நிலையில் நாடு விடுதலை பெற்றவுடன் நாட்டின் தலைநகரான டில்லியில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு சட்ட நிபுணர்களைக் கூட்டி மத்திய அரசு ஆராய்ந்தது. முடிவில் பிரிட்டிஷார் கட்டிய கட்டிடத்தில் அல்லாது, விடுதலை பெற்ற இந்தியா கட்டிய கட்டிடத்தில் உச்ச நீதிமன்றத்தை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
ஏனெனில் அன்றைக்கு இருந்த ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றக் கட்டிடம் போன்ற மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. அப்படியான கட்டிடங்களில் உச்ச நீதிமன்றம் செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு. அதேநேரம் தற்போது நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு செயல்படுவது வேறு விஷயம்.
அந்த வகையில் நம்முடைய அரசியல் சாசன அமைப்பு முறையை சீர்தூக்கி பரிசீலிக்கும் நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்துக்கு என பிரத்யேக பிரம்மாண்ட கட்டிடம் டெல்லியில் பகவான்தாஸ் மார்க் அருகே கட்டப்பட்டது. இதற்கு எதிரே இந்தியன் சட்ட மையமும், சர்வதேச சட்டங்களுக்கான இந்தியாவினுடைய அமைப்பு மையமும் உள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கல்கத்தாவிலும் மெட்ராஸிலும், பாம்பேயிலும் விக்டோரியா மகாராணியினுடைய சாசனத்தின்படி உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த 3 உயர் நீதிமன்றங்களுக்கு மட்டும் எல்பிஐ (letters patend appeal) என்ற தனி உரிமை உள்ளது. மற்ற உயர் நீதிமன்றங்களுக்கு கிடையாது.
கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் 1774-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது 1773-ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act of 1773) மூலம் நிறுவப்பட்டு, மார்ச் 26, 1774 அன்று மன்னர் மூன்றாம் ஜார்ஜ், நீதி சாசனம் வழங்கியதன் மூலம் செயல்படத் தொடங்கியது. முதல் தலைமை நீதிபதி யகசர் எலியா இம்பே நியமிக்க பட்டார். தலைமை நீதிபதியுடன் மூன்று நீதிபதிகள் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து, மெட்ராஸ் மற்றும் பம்பாயில் உச்ச நீதிமன்றங்கள் முறையே 1800 மற்றும் 1823-ஆம் ஆண்டுகளில் மூன்றாம் ஜார்ஜ் மன்னரால் நிறுவப்பட்டன. இந்த உச்ச நீதிமன்றங்கள், கல்கத்தாவின் ஃபோர்ட் வில்லியமில் உள்ள உச்ச நீதிமன்றத்தைப் போலவே நிர்வகிக்கவும், கடமைகளைச் செய்யவும், அதே அளவிலான அதிகாரங்களைக் கொண்டிருந்தன.
பின்னர், இந்திய உயர்நீதிமன்றம் 1861-ல் கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் ஆகிய மூன்று மாகாண நகரங்களில் நிறுவப்பட்டன, இது நீதித்துறை அமைப்பில் ஒருங்கிணைப்பை வழங்கியது. இந்திய அரசுச் சட்டம் 1935 சட்டத்தின் கீழ் இந்திய கூட்டாட்சி நீதிமன்றம் உருவாக்கப்பட்டதன் மூலம், அனைவருக்கும் உச்ச நீதிமன்றங்கள் என்ற உயர் நீதிமன்றங்களின் வேறுபாட்டைக் குறைத்தது. இது மையச் சட்டங்கள் மற்றும் மாநிலச் சட்டங்கள் இரண்டையும் நிறுவும் ஒற்றை நீதிமன்ற அமைப்பாகும்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28, 1950 அன்று டில்லியில் திறக்கப்பட்டது, இது இந்திய கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது. 1937 முதல் 1950 வரையிலான 12 வருடகாலத்தில் இந்தியாவின் கூட்டு நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் செயல்பட்டது. அதன் காரணமாக 1958 வரை உச்ச நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் இயங்கியது.
உச்ச நீதிமன்றம் புதியதாகத் தொடங்கப்பட்ட பின்னர், தன் வழக்குகளை இளவரசு கூட்ட அமர்வின் கீழ் நாடாளுமன்றத்தில் நடத்தியது. அதன்பின்னர், தற்பொழுதுள்ள கட்டிடத்தில் 1958-இல் இடம்பெயர்ந்து தன் செயல்பாட்டைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மிக உயர்ந்த சங்கமாகக் கருதப்படுகிறது.
உச்ச நீதிமன்றக் கட்டிடத்தோடு, இரண்டு அரங்குகள் - ஒன்று கிழக்கு; மற்றொன்று மேற்கு என இணைக்கப்பட்டன. இவையனைத்தும் 15 நீதிமன்ற அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மைய மண்டபத்தில் தலைமை நீதிபதியின் மன்றம் மிகப்பெரிய நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ளது. சிறு அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகளாகவும் அமையும் அவை பகுதி அமர்வு என்றும், பெரிய அமர்வில் 5 நீதிபதிகளாகவும் அமையும் அவை அரசியல் சாசன அமர்வு என்றும் வழங்கப்படுகின்றது.
இந்திய உச்ச நீதிமன்றம் என்பது இந்தியக் குடியரசின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும், இது அனைத்து சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கான இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும், நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைக் கொண்டதாகவும் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 124-147 வரை இதன் அதிகாரம், செயல்பாடு போன்றவற்றை வரையறுக்கிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில் திருப்தியடையாத குடிமக்கள் இங்கு மேல்முறையீடு செய்யலாம். சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளதா என ஆராயும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. அரசியலமைப்பு, சிவில், கிரிமினல் மற்றும் நிர்வாகச் சட்டங்கள் தொடர்பான வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.
இந்திய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் அதன் இதர நீதிபதிகளான 30 நீதிபதிகளும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று சிறப்புடன் செயல்படுகின்றது. முதல் பெண் நீதிபதியாக எம். பாத்திமா பீவி 1987-ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர்.
இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள், இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32-ல் கூறியுள்ளபடி அந்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயப்படுத்துகின்றது.
அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்), தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி அதிகாரத்தை நிரூபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலனத்தைக் கொண்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிபரிபாலனம்:
உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134-களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல் தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துரைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடு செய்யும் அவகாச காலமாக ராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலனத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது.
ஆலோசனைக்குழு நீதிபரிபாலனம்:
இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலனத்தைப் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள், குறிப்பாக, இன்றைய குடியரசுத் தலைவர், ஆளுநர் சட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது வரை (பிரசிடென்ட் ரெபரன்ஸ்) பல முக்கிய வழக்குகள் நடந்துள்ளன. இதே போன்று, கேசவாநந்தா பாரதி வழக்கு, மேனகா காந்தி வழக்கு, ஷா பானு வழக்கு, கோலகநாத் வழக்கு, இந்திரா காந்தி எதிரி ராஜநாராயணன் தேர்தல் வழக்கு, மினர்வா மில் வழக்கு, பி.வி.நரசிம்மராவ் மீது போடப்பட்ட நாடாளுமன்ற பிரிவிலேஜ் வழக்கு, ஏ.கே.கோபாலன் வழக்கு, கே.எஸ்.பட்டுசாமி வழக்கு, காமன்காஸ் வழக்கு...
சுனில் பத்ரா வழக்கு, பச்சன்சிங் வழக்கு, ராஜஸ்தான் மாநிலத்தை கலைத்ததை எதிர்த்து 1970-ல் தொடர்ந்த வழக்கு, பத்திரிகையாளர் ஓல்கா டெல்லிஸ் வழக்கு, போபால் கார்பைடு வழக்கு, மண்டல் கமிஷன் குறித்தான இந்திரா சகானி வழக்கு, நீல பத்தி பெகேரா வழக்கு, சுப்ரீம் கோர்ட் ரிக்கார்டு வழக்கறிஞர்கள் சங்க வழக்கு, சட்டப்பிரிவு 356 தொடர்பான பொம்மை வழக்கு, அருணா ராமச்சந்திரா சன்பாக் வழக்கு, காமேஸ்வர் சிங் வழக்கு, பெங்களூர் வாட்டர் சப்ளை வழக்கு...
ரஸ்டம் கூப்பர் வழக்கு, நீடில் இன்ஸ்டிடியூட் வழக்கு, எல்ஐசி வழக்கு, டாடா செல்லுலார் வழக்கு, பால்கோ தொழிலாளர் யூனியன் வழக்கு, அயோத்தி ராமர் கோயில் வழக்கு, கேசவ சிங் வழக்கு, ராமேஸ்வர் பிரசாத் வழக்கு, துக்ராம் வழக்கு, ஆர்.டி.பஜாஜ் வழக்கு, செண்பகம் துரைராஜன் வழக்கு, நரசு அப்பா மாலி வழக்கு, நாகலாந்து மனித உரிமை மக்கள் இயக்க வழக்கு, நந்தினி சுந்தர் வழக்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை நீக்கல் குறித்தான வழக்கு இப்படி நீண்ட பட்டியல் உண்டு.
இந்த வழக்குகளில் எல்லாம் இந்திய அரசியல் சாசனம், இந்திய சட்டங்களுடைய நிலைப்பாடுகள் குறித்து விரிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு நீதி வழங்கும் மரபு என்பது நமது பண்டைய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே வந்துள்ளது. தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்பது இந்திய கலாச்சாரத்திலும் தொன்றுதொட்டு இருந்துள்ளது. பாண்டிய மன்னனிடம் கண்ணகி நீதி கேட்டது, தவறிழைத்த தன் மகனையே தண்டித்த மனுநீதிச் சோழன் என பழங்கால இலக்கியங்களிலும் காண முடிகிறது. அதன் நீட்சியாக கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆட்சியிலும் தொடர்ந்தது. ஆனால் அதற்கென சட்டங்கள் வகுத்து அதை ஒரு அமைப்புக்குள் கொண்டு வந்தார்கள்.
சென்னையைப் பொருத்தவரை ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியினுடைய அலுவலகம் அமைக்கப்பட்டது. அன்றைக்கு வெள்ளையர் நகரம், கறுப்பர் நகரம் எனவும் பிரித்து வைத்திருந்தார்கள். கறுப்பர் நகரம் என்று சொல்லப்பட்ட ஜார்ஜ் டவுன் பகுதியில் மீனவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அங்கு நிகழ்ந்த சின்னச் சின்ன சொத்துப் பிரச்சினைகள், தாக்குதல், கொலைகள் போன்ற சிவில், கிரிமினல் வழக்குகளை கவனிக்க சிறிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
மேல்முறையீடு செய்ய தனி வழக்காடு மன்றங்களையும், பின்னர் இறுதியாக உயர் நீதிமன்றத்தையும் அமைத்தார்கள். அதன்பிறகு சட்டங்கள் குறித்தான படிப்புகள் தொடங்கப்பட்டு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என நீதிபரிபாலனம் சீர்படுத்தப்பட்டது. அங்கிகள் அணிந்து வழக்காடுதல் போன்ற அலுவல்கள் நடைபெற்றன.
இப்படியான நமது நீதிமன்றங்களின் அமைப்பு பிரிட்டிஷ் சட்டங்களின்படியே நடைபெற்று வருகிறது. அதேநேரம் நமது மண்ணுக்கான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது ஒவ்வொரு மதத்துக்குமான தனித்தனிச் சட்டங்கள் உள்ளன.
இந்து மதத்துக்கான ஹிண்டு கோடு, முஸ்லிம் மதத்துக்கு தனிச் சட்டம், அதேபோல் கிறிஸ்தவர்களுக்கு தனிச் சட்டம் என உள்ளன. கிறிஸ்தவர்களுடைய சட்டத்தின்படி திருமணத்தில் மணமுறிவு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. கேரளாவில் உள்ள சிரியன் கிறிஸ்டியன் மதத்தில் கணவன் - மனைவி இடையே மணமுறிவு கோரினால் அதை எளிதில் பெற்றுவிட முடியாது. அந்த அளவுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. எனவேதான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பலரும் கோருகின்றனர். அதேநேரம் ஒருசிலர் அதை எதிர்க்கின்றனர். இதற்கான தீர்வை காலம்தான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு உயர் நீதிமன்றங்கள் மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திலும் கூட ஒரு பிரச்சினைக்கு தீர்ப்பு கொடுத்தால் பின்னாட்களில் அந்தத் தீர்ப்புக்கு முரணமாக தீர்ப்புகள் வருகின்றன. இப்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், இன்றைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை வழங்குகிறார். ஆனால் இதே பிரச்சினையில் இதற்கு முன்னர் நீதிமன்றம் வேறொரு தீர்ப்பு வழங்கியுள்ளது எனக் கூறி தமிழக அரசு தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பை அமல்படுத்த மறுக்கிறது. இப்படி பல முரண்களும் இருக்கின்றன.
நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது துலாக்கோல்போல் சீர்தூக்கிப் பார்த்து வழங்க வேண்டும். நீதிபதிகளின் மன நிலைகளுக்கு ஏற்றவாறு தீர்ப்புகள் கொடுக்கக் கூடாது. சட்டங்கள் என்ன சொல்கிறதோ, அதைப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். அதேநேரம் சட்டத்துக்கும் மேலாக அதில் பொதுநலன், மக்கள் நலன் இருந்தால் அதைத்தான் முக்கியமாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நீதிமன்றங்களில் அரசியல் கூடாது. அரசியல் பார்வையும் இருக்கக் கூடாது.
பாமர மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். எனவே நீதி வழங்குவதில் மிகுந்த கவனம் இருப்பது அவசியம். இன்றைக்கு நீதித் துறையிலும் ஊழல்கள், நெப்போட்டிசம் என்று சொல்லக் கூடிய வகையில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் அதிகம் இடம் பெற வேண்டும். ஏனெனில், பெண்களுக்கான நலச் சட்டங்கள் குறித்து அவர்களின் பார்வை வித்தியாசப்படும். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காலச் சூழல்கள் இன்றைக்கு மாறி வருகின்றன. அதற்கேற்ற வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும்.
ஒருகாலத்தில் சுற்றுச்சூழல் பற்றி யாரும் பேசியதில்லை. ஆனால் இன்றைக்கு உலக அளவில் சுற்றுச்சூழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்காகவே சுற்றுச்சூழல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பசுமை தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மனித உரிமையைப் பாதுகாக்க மனித உரிமை ஆணையம், பணியாளர் நலன் காக்க ஆணையங்கள், வங்கி கடன் நிவாரண ஆணையங்கள் என பல தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளில் உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ சில தீர்ப்புகளை வழங்கும்போது அதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் செயல்படுத்துவதில்லை. உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு சார்பில் காவிரி, முல்லை பெரியாறு போன்ற வழக்குகளுக்காக நாம் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம்.
உச்ச நீதிமன்றம் வரை தமிழ்நாடுக்கு சாதகமான தீர்ப்பை நாம் பெற்றாலும், அதை கர்நாடக அரசு செயல்படுத்த மறுக்கிறது. சட்டத்தை மதிக்காத அரசாங்கங்களை நாம் என்னவென்று சொல்வது? இதுபோன்ற சூழல்களில் அந்த அரசாங்கங்களின் மீது 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி ஆட்சி கலைப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன.
எனவே தீர்ப்புகளை செயல்படுத்துவதில் சில கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதுபோல பல திருத்தங்கள் நம்முடைய அரசியல் சாசனத்தில் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். உலகத்திலேயே அதிக பக்கங்கள் கொண்ட அரசியல் சாசனம் இந்தியாவினுடையதுதான்.
அதேபோல் அதிக முறை திருத்தப்பட்டதும் இந்திய அரசியல் சாசனம்தான். தற்போது வரை 106 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 24 சட்ட திருத்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இவ்வளவு திருத்தங்கள் செய்தும் சில நிலைப்பாடுகளில் தீர்வு எட்டப்படவில்லை. மேலும் மேலும் திருத்தங்கள் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.
அமெரிக்க அரசியல் சாசனம் எழுதி ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அதன் பிரிவுகளும், பக்கங்களும் மிகவும் குறைவு. நம்முடைய அரசியல் சாசனத்தோடு ஒப்பிட்டால் 10-ல் ஒரு பங்குதான். ஆனால் இதுவரை அங்கே ஏறத்தாழ 20 முறைதான் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து நாடுகளில் எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபுகள் தான் அங்கே அரசியல் சாசன நெறிமுறைகளாக உள்ளன. நம்முடைய அரசியல் சாசனத்தை உருவாக்க அன்றைய சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரிட்டனின் மரபுகள், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளின் அரசியல் சாசனங்களில் இருந்து எடுத்து, தொகுத்தார் பி.என்.ராவ்.
பின்னர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அமைந்த வரைவுக் குழுவிடம் அளிக்கப்பட்டு, நமக்கு நாமே அரசியல் சாசனத்தைப் படைத்துக் கொண்டோம். இப்படி பல நாடுகளில் இருந்து பெறப்பட்ட ஷரத்துகளின் தொகுப்புதான் நம்முடைய அரசியல் சாசனம்.
உலக நாடுகள் பலவற்றில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வாதாட குறிப்பிட்ட நிமிடங்கள்தான் எடுத்துக் கொள்வார்கள். இங்கே மூன்று நான்கு நாட்கள் கூட வாதங்கள் நடைபெறுகின்றன. வழக்குகள் நாள்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தேங்குகின்றன. அந்த வகையில் லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன. இது எனக்குத் தெரிந்து 30 - 40 ஆண்டுகளாக நீடித்துவரும் பிரச்சினை.
தற்போது பொதுநல வழக்குகள் ஏராளமாக வருவதைப் பார்க்கிறோம். நீதிபதிகள், வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி, சின்னப்பரெட்டி, போன்றவர்கள் பொதுநல வழக்குகளை ஆதரித்து, அதற்கு தீர்ப்புகள் வழங்கினர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் முனிசிபாலிட்டி வழக்கில்தான், பொதுநலன் என்றால் என்ன? மக்கள் நலன், நாட்டு நலனுக்காக யார் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம் என்ற கோட்பாடு வந்தது.
ஆனால் அதற்கு முன்பே தமிழ்நாட்டில் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கப் போராட்டம் நடந்த 70 - 78 காலகட்டங்களில், விவசாயிகளின் மீது ஜப்தி நடவடிக்கை கூடாது, கடன் நிவாரணச் சட்டம் வேண்டும் என்று பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தவன் அடியேன். அதற்குப் பிறகுதான் ரத்லான் முனிசிபாலிட்டி வழக்கு வந்தது.
நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையே பல சிக்கல்கள் தற்போது எழுகின்றன. அவை நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.
(தொடர்வோம்...)